கரீனா இப்படி செய்யலாமா?



பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கர்ப்ப காலமும், பிரசவமும் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் பரபர செய்தியாக பேசப்பட்டது. அவருக்கு குழந்தை பிறந்த பிறகு அந்தப் பரபரப்பு இன்னும் அதிகமானது. குழந்தையின் பெயர் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, ‘பிரசவமான சில நாட்களிலேயே தன் தோழிகளுடன் பார்ட்டியில் கலந்துகொண்டார்’ என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாயின.

பிரசவித்த பெண்கள் 41 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நம்பிக்கை காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய பெண்களுக்கு அது சாத்தியமில்லை என்றாலும், இந்த 41 நாள் நம்பிக்கையில் ஏதேனும் உண்மைகள் உண்டா?
விளக்கமாகப் பேசுகிறார் மருத்துவர் நிவேதிதா.

‘‘கர்ப்பத்தின் 9 - 10 மாதங்கள் வரை பெண்ணின் உடல் ஏகப்பட்ட ஹார்மோன் மாறுதல்களைச் சந்திக்கிறது. அவளது தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பிலும் மாற்றத்தை உணர்ந்திருப்பாள். பிரசவமானதும் இயற்கையாக அவளது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறைந்துவிடும். எளிதில் தொற்றுகளுக்கு உள்ளாகக்கூடும் என்பதால்தான் அவளை பாதுகாப்பான சூழலில் ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் ஆரோக்கிய பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்பதும், சமையலறை பக்கம் போகக்கூடாது என்பதும் அவளது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட தகவல்களே தவிர, அப்படி செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. களைப்பாக இருப்பாள் என்கிற ஒரே காரணம்தான் இவை எல்லாவற்றின் பின்னணியும்.

இப்போதெல்லாம் சிசேரியன் செய்யப்படுகிற பெண்களையே மருத்துவமனையில் இரண்டாவது, மூன்றாவது நாளே எழுந்து நடக்கச் செய்கிறோம்.
அப்போதுதான் அவளுக்கு தன் உடல் பற்றிய பயமும், பதற்றமும் மாறும். காயங்களும் சீக்கிரம் ஆறும்.வீட்டை விட்டு வெளியே செல்கிறபோது உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பிரசவித்த பெண்களுக்கு செரிமானக் கோளாறுகள் வரலாம் என்பதால் வெளி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் அவர்களை வெளியே அனுமதிக்காததற்கு ஒரு காரணம். மற்றபடி தாய் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், ஊட்டம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறதும், தன்னையும் குழந்தையையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிற பட்சத்திலும் வெளியே சென்று வருவதில் பிரச்னை இல்லை.

சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவம் பற்றிய பயமும் பதற்றமும் நீங்கி, அவள் சகஜமான உடல் மற்றும் மனநிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.

அந்த ஓய்வு அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிணைப்பைக் கூட்டவும் காரணமாக அமையும். இத்துடன் பிரசவித்த முதல் சில நாட்களுக்கு குழந்தைக்கும் தாயின் அருகாமை மிக அவசியம். தாயின் வாசனையும் ஸ்பரிசமும் குழந்தைக்கு அதிகமாகத் தேவைப்படும். பசியால் அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க தாய் அருகில் இருக்க வேண்டும். இவற்றையும் கருத்தில் கொண்டுதான் 40 நாள் ஓய்வு வலியுறுத்தப்படுகிறது.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படும்போது, குழந்தையை மிக மிகப் பாதுகாப்பான சூழலில் நம்பிக்கையான நபர்களிடம் விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம். சுகாதாரமான சூழல் வலியுறுத்தப்பட வேண்டும். குழந்தை இருக்கும் சூழலில் புகைப்பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.’’

- ராஜி