மீனாவும் நைனிகாவும்



ஜீன்ஸ்

‘அப்டியே மீனா மாதிரியே இருக்குல்ல...’ என்று நைனிகாவைப் பார்த்த பலரும் ஆச்சரியத்தில் அசந்துபோவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பக்கம் அரசியலில் பார்த்தால், இந்திராகாந்தியின் லேட்டஸ்ட் வெர்ஷன் போலவே டிட்டோவாக இருக்கிறார் பிரியங்கா காந்தி. குழந்தைகள் தங்களுடைய பெற்றோரில் அல்லது மூதாதையரில் யாராவது ஒருவரைப் போன்ற உருவ ஒற்றுமையுடன் இருப்பதற்கு மருத்துவரீதியான காரணம் என்ன?பெங்களூருவில் இருக்கும் செல் மற்றும் உயிர்மூலக்கூறு ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானியும், முனைவருமான தங்கராஜிடம் கேட்டோம்...

‘‘குழந்தைகள் தங்களின் பெற்றோரில் அல்லது மூதாதையரில் யாராவது ஒருவரைப் போன்ற உருவம் மற்றும் குணநலன்களைப் பெற்றிருப்பதற்கு அடிப்படைக் காரணம் மரபணுக்கள்(Genes). இந்த மரபணுக்கள்தான் மரபுப் பண்புகளை முன்னோரிடமிருந்து குழந்தைகளுக்கு கடத்திச் செல்கிறது. ஒவ்வொரு மரபணுக்களும் ஒவ்வொரு விதமான பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது. இப்படி கடத்தப்படும் பண்புகளே முன்னோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள பலவிதமான ஒற்றுமைகளுக்கு மூலகாரணமாக இருக்கிறது.

இந்த  ஒற்றுமைகளை  இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முகத்தோற்றம், உடல் அமைப்பு, நிறம் போன்ற வெளிப்படையான ஒற்றுமையாகவும், இன்னொரு விதத்தில் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், குணநலன்கள் மற்றும் நோய்கள் போன்ற அகம் சார்ந்த ஒற்றுமைகளாகவும் இரண்டுவிதங்
களில் ஒற்றுமை பிரதிபலிக்கிறது.

பெற்றோரிடமிருக்கும் மரபணுவில் உள்ள குறைபாடுகளால், அவர்களுக்கு உள்ள நோய்கள் குழந்தைகளுக்குக் கடத்தப்படுவது இப்படித்தான்.இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்ப்போம்...ஒரு மனித செல்லின் உட்கருவுக்குள் மொத்தம் 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. அதாவது 23 ஜோடிகளாக உள்ளது. இந்த ஒவ்வொரு குரோமோசோமும் DNA(Deoxyribonucleic Acid) மற்றும் Histon என்ற புரதத்தால் உருவாகி உள்ளது. இந்த டி.என்.ஏ.க்குள் சுமார் 30 ஆயிரம் மரபணுக்கள்(Genes) வரை உண்டு. இந்த ஒவ்வொரு மரபணுவும் முகம், புறம் மற்றும் அகம் சார்ந்த ஒவ்வொரு விதமான பண்புக்கும் அடிப்படையாக அமைகிறது.

ஆணிண் விந்தணு, பெண்ணின் கருமுட்டை ஆகியவற்றில் முறையே 23 குரோமோசோம்கள் உள்ளன. இவை இரண்டும் இணைந்து 46 குரோமோசோம்களைக் கொண்ட புதிய செல்லானது கருவாக மாறுகிறது. அந்த கரு பெண்ணின் கர்ப்பப் பைக்குள் பல படிநிலை வளர்ச்சிகளை அடைந்த பின்பு குழந்தையாக மாறுகிறது. அப்படி உருவாகும் குழந்தைக்கு தாய், தந்தை இருவரிடம் இருந்து முறையே 23 குரோமோசோம்கள் பெறப்பட்டு 23 ஜோடிகளாக (மொத்தம் 46) மாறுகிறது.

தாய், தந்தை இருவரிடமிருந்து பெறப்படும் ஒரு ஜோடி குரோமோசோமில், யாருடைய குரோமோசோமின் பண்பு ஓங்கியிருக்கிறதோ அல்லது வீரியம் அதிகமாக  இருக்கிறதோ அந்த பண்பே குழந்தையிடம் வெளிப்படுகிறது. இந்த நிலையில் மற்றொருவரின் ஒடுங்கிய பண்பு அல்லது வீரியம் குறைந்த பண்பு அந்த குழந்தையிடம் வெளிப்படுவதில்லை.

ஆனால், அந்த குழந்தை பெரியவராகி, அடுத்த சந்ததியை உருவாக்கும்போது அந்த ஒடுங்கிய பண்பு, ஓங்கிய பண்பாக மாறினால் புதிய சந்ததியிடம் அது வெளிப்படுகிறது. இதனால்தான் அம்மா, அப்பாவைப் போல மட்டுமல்லாமல் சிலர் பாட்டி, தாத்தாவைப் போன்ற அகம், முகம் மற்றும் புறம் சார்ந்த ஒற்றுமைகளையும் பெற்று காணப்படுகின்றனர்’’ என்கிறார்.

- க.கதிரவன்