தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்!



* சர்ச்சை

பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அதன்படி நிலக்கரி, கனிமம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விண்வெளி ஆய்வு, அணு ஆற்றல், மின்வழங்கல் போன்ற முதன்மையான துறைகளில் தனியார்மயமாக்கல் ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் வளமையான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் கூறுகிறார். இதுகுறித்து துறை சார்ந்த நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.



வெற்றி விடியல் சீனிவாசன்
எளிமையாகச் சொல்லப்போனால், சுமார் 50 ஆண்டுகள், அரசின் வழிநடத்தலில் அரசுத் துறையின் உழைப்பில் நாடு முன்னேறியது. ஆனால், அதன் பின்னர் உலகப் பொருளாதாரமும், நாடுகளுக்கு இடையேயான வியாபாரப் பரிவர்த்தனைகளும் முற்றிலுமாக மாறிப்போயின. அதனால், 1991-ல் பல நாடுகள் ஒன்றுகூடி WTO, GATT போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.  தொழிற்சாலை உற்பத்தியின் மீது 60-70-களில் நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. Licence, Permit, Quota முறை அமலில் இருந்தது. உற்பத்திக்கு உச்ச வரம்பு, அதற்கு உரிமம் என்று தொழிற்சாலைகளுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதற்கான சூழலும் காரணங்களும் இருந்தன. ஆனால், முன்னேற்றமும் தன்னிறைவும் பெற நினைக்கும் நாடுகள் எல்லைகளைத் தாண்டி இயங்கவேண்டிய கட்டாயம் வந்தது. அதில் உருவான முடிவுதான் LPG (Liberalisation, Privatisation, Globalisation - தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் உலகமயமாக்கல்). இது நடந்தது 1991-ல்.


அரசுத் துறைக்கும் தனியார் துறைக்கும் உண்டான வித்தியாசம் என்ன? ஒரு எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்.உங்கள் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் எந்தெந்த ரூட்டுகளில் ஓட்டுகிறார்கள்? எந்தப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அங்குதானே? அதில்தானே போட்ட முதலை அவர்களால் எடுக்க முடியும். லாபம் ஈட்ட முடியும். இங்கேதான் அரசுத் துறையின் அவசியம் வருகிறது. அரசு லாப நோக்கோடு இயங்குவதில்லை. மக்கள் சேவையே அதற்கு முக்கியம். எனவே, லாபம் வராத வழிகளிலும் குக்கிராமம் வழியாகவும் பேருந்தையோ சிற்றுந்தையோ இயக்கும். இது அரசுத் துறையின் பயன். ஆனால், அரசுத் துறையைவிட தனியார் ‘தேவை வரத்து’ என்னும் அடிப்படையில் இயங்குவர். அவர்களுக்கு லாபம் வரும் துறைகளை அரசு திறந்துவிட்டால், அதிலும் போட்டி போட்டுக்கொண்டு நிறுவனங்கள் அங்கே இயங்கினால் மக்களுக்குத் தரமான பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.  இப்படி அரசு/தனியார் என்னும் கருத்தாக்கங்கள் ஒரு முரணியக்கத்தில் செயல்படுகின்றன. எவற்றையெல்லாம் அரசு வைத்திருக்கவேண்டும்.


எவற்றைத் தனியாருக்குத் தரவேண்டும் என்பதில்தான் கருத்துவேறுபாடுகள் எழுகின்றன.தற்போதைய தனியார்மய விஷயத்தில் இருக்கும் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் பார்ப்போம்.எட்டு துறைகளுக்குத் தனியார்மய வாய்ப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது. நிலக்கரி, கனிமம், ராணுவத் தளவாட உற்பத்தி, விமான சேவை, மின்சார விநியோகம், விண்வெளி, பழுது பார்த்தலும் பராமரித்தலும் மற்றும் அணுசக்தி துறை. நான்கின் மீது தற்போதைய கவனம். நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, ஆகாய விமான சேவை மற்றும் மின்சார விநியோகம் என்று அறிவிப்பு சொல்கிறது.  இதற்கு ஆதரவான கருத்துகள் எவை? ஏற்கெனவே இந்தத் துறைகளில் தனியார் பங்கு இருக்கிறது. அதைக் கூடுதலாக்குவதால் லாப வாய்ப்பு பலம் பெறுகிறது. துரித உற்பத்தி கிடைக்கிறது.



உதாரணமாக, ராணுவம் என்றவுடன் அதில் தனியார் வரலாமா என்னும் சந்தேகம் நமக்கு வரும். அது நியாயமான ஒன்றுதான். தரமில்லாத பொருள்களைத் தயாரித்துவிட்டால் அது ஆபத்தல்லவா என்னும் விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால், ஏற்கெனவே ஆகாய விமானம் பீரங்கி போன்றவற்றை வாங்கிக்கொண்டுதானே இருக்கிறோம். அதனால் தற்போதைய அறிவிப்பால் பெரிய கேடு எதுவும் விளையாது. மின்விநியோகத்தில் பல இடங்களில் தனியார் ஈடுபட்டிருக்கிறார்கள். லாபம் ஈட்டுவதோடு குறைந்த விலையிலும் கொடுக்கிறார்கள். அதனால் யூனியன் ரெரிட்டரிக்கு இந்த முறையை அமல்படுத்திப் பார்க்கலாமே என்று அரசு இறங்கியிருக்கிறது. அதேநேரத்தில் இந்த முனைப்புகள் ‘சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்பட்டவையா?’ என்பதையும் பார்ப்போம்.



உதாரணமாக, நிலக்கரி ஏலம் என்பது எப்போதுமே சங்கடங்களை உருவாக்கிவருகிறது.  அரசு ஏலத்திற்கு விட்ட தொகைதான் அதிகபட்சமாக கிடைக்கக்கூடிய ஒன்றா என்பதில் ஆயிரம் கருத்துகள் எழும். சந்தேக வழக்குகளும் சட்டச் சிக்கல்களும் வரத்தான் செய்யும். அவற்றைக் கையாள அரசு என்ன செய்யப்போகிறது என்பது இன்னும் விளக்கமாகத் தெரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கப்போவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நிறுவன சேர்க்கை மூலமாக (மெர்ஜர்) இதை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். எந்தெந்த நிறுவனங்கள், அவற்றின் இணைப்பிற்குண்டான வசதிகள், அதனால் கிடைக்கப்பெறும் வியூக லாபங்கள் போன்றவற்றை இப்போது அலச முடியாது, விவரங்கள் வெளிவந்த பின்னரே சரியாக எடைபோட முடியும்.  இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மக்களுக்கு உடனடியாக அளிக்கும் நன்மைகள் போன்றவற்றை அலசி ஆராய்ந்துதான் பயன் அளிக்குமா இல்லையா என்று பார்க்க வேண்டும்.



அரசு மிக முக்கியமாக விளக்கவேண்டியது என்ன? உலக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதால் சில நடவடிக்கைகளை நாம் டுக்கவேண்டியிருக்கலாம். உலக அளவில் போட்டி போட்டு வியாபாரத்தை நடத்தி லாபம் ஈட்டவேண்டிய அவசியமும் இருக்கலாம். ஆனால், பல நடவடிக்கைகளில் அரசு தனியாருக்கு வாய்ப்பளிக்கும்போது செய்யவேண்டிய முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது.  ஒரு நல்லரசு இரண்டு துறைகளில் மிக முக்கியமான கவனம் செலுத்த வேண்டும். அவை கல்வியும் மருத்துவமும் ஆகும். இந்த இரண்டையும் முழு மூச்சுடன் அனைத்து மக்களுக்கும் இலவசமாக அளிக்கவேண்டும். அதைச் செய்தால் இன்னும் கால் நூற்றாண்டில் இந்தியா முன்னேறிய நாடுகள் பட்டியலில் கால் பதித்துவிடும்.

தற்போது சொல்லப்பட்டிருக்கும் அறிவிப்புகளால் கொரோனா வைரஸ் பிரச்னையிலிருந்தும் பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்தும் நாடு எப்படி வெளியே வரப்போகிறது என்பதை அரசு விளக்கவேண்டும்.மிக முக்கியமாக, தரமான கல்வியையும் மருத்துவத்தையும் எப்படி இலவசமாகத் தரும். தனியார்மயமாக்கலின் மூலமாக பெறக்கூடிய தொகையில் நிதி ஆதாயத்தில் இந்த இரு கூறுகளையும் எப்படி வழங்கும் என்பதையும் அரசு விளக்கவேண்டும்.அளவான தனியார்மயம் தவறல்ல. ஆனால், அது அரசையும் நாட்டையும் வலுப்படுத்த வேண்டும். தனிநபர்களின் சுயநலக் கோட்டையாக ஆகிவிடக்கூடாது.


அ.மார்க்ஸ்சுதந்திரத்திற்குப் பிந்தய நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்ட பொருளாதாரம் என்கிற அடிப்படையில் சந்தை மற்றும் பொருளாதாரத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ‘திட்ட ஆணையம்’ (Planning Commission) உருவாக்கப்பட்டது. ஆனால், மோடி அரசு அமைந்தவுடன் அவர்கள் செய்த முதல் வேலை இந்த திட்ட ஆணையத்தை ஒழித்துக்கட்டியதுதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.முதன் முதலில் வாஜ்பேயி தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்தபோது அதுவரைக்கும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய மூலதனத்தை எதிர்த்துவந்தவர்கள் 40% அந்நிய ஈக்விட்டிக்கு அனுமதி அளித்தனர். தயாரிப்பு முறைக்குத்தான் (process) ‘பேடண்ட்’ உரிமம் வழங்கப்படவேண்டும், தயாரிக்கப்பட்ட பொருள்களுக்குப் (products) ‘பேடண்ட்’ உரிமை வழங்கக்கூடாது எனச் சொல்லி வந்தவர்கள் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கும் ‘பேடண்ட்’ உரிமையை வழங்கும் முடிவை எடுத்தார்கள்.



உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கான (WTO) டங்கல் வரைவை (GATT) எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் WTO-வில் தொடர்ந்தனர். சுங்க வரி ஒழிப்பில் தீவிரம் காட்டினர். இறக்குமதிக் கட்டுப்பாடுகளை வெகுவாகத் தளர்த்தினர். முன்னுரிமை இல்லாத துறைகளிலும் அந்நிய மூலதனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை எடுத்தனர். இப்படி நிறையச் சொல்ல முடியும்.மோடி தலைமையில் 2014-ல் ஆட்சி அமைந்தபோது, ‘ஆசியாவிலேயே அந்நிய மூலதனத்திற்கு அதிகமாகத் திறந்துவிடப்பட்ட நாடாக இந்தியா ஆகியுள்ளது’ என நிபுணர்கள் சொல்லும்படியான பொருளாதார நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. கல்வி தொடர்பான ‘காட்’ ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டு, கல்வி பன்னாட்டு நிறுவனங்களின் ‘வணிகப் பொருள்’ என அறிவிக்கப்பட்டது.



அமெரிக்காவுடன் செய்த அணு ஒப்பந்தத்தில் விபத்து இழப்பீட்டுப் பொறுப்பிலிருந்து அந்நிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதானி நிறுவனத்திற்கு சுற்றுச் சூழல் விதிகளை மீறியதற்காக முந்தைய அரசால் விதிக்கப்பட்ட ரூ.200 கோடி அபராதம் நீக்கப்பட்டது. மோடி அதிகாரத்திற்கு வந்த சில ஆண்டுகளில் அதானி நிறுவனங்களின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு உயர்ந்தது. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். இன்றைய சூழலில் கொரோனாவுக்குப் பிந்தய காலத்துக்கு வருவோம்.கொரோனா பாதிப்பையொட்டி இன்று உலகளவில் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறு தொழில்கள் அழிந்துவிட்டன. தொழிலாளர்களின் வேலை நேரங்கள் அதிகரிக்கப்பட்டு ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளன.


மக்கள் நலன் மீது அக்கறையும் புத்தியும் உள்ள எந்த அரசும் முதலில் செய்யவேண்டியது பெரிய அளவில் மக்கள் மத்தியில் நிதியை இறக்கி, அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துப் பொருளாதாரச் செயல்பாடுகளை முடுக்க வேண்டும். ஆனால், மோடி அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன செய்துள்ளார்?20 லட்சம் கோடி ரூபாய்களை கீழ் இறக்குவதாக ஆர்ப்பாட்டமான விளம்பரங்களைச் செய்கிறது. இது அபத்தம். வெறும் பொய். முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளது போலப் புதிதாக நிதியை இறக்கியுள்ளதாக அரசு சொல்வது பொய். ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன் மோடி அரசு அறிவித்த பட்ஜெட் செலவான 32 கோடியே 40 லட்சம் ரூபாயில் 20 லட்சம் கோடி ரூபாயை இப்போது கொரோனா பாதிப்பை முன்னிட்டு கூடுதலாக ஒதுக்கியுள்ளது.


இது எந்த வகையிலும் பொருளாதாரத்தை முடுக்கிவிடப் பயன்படப்போவதே இல்லை. உண்மையில் என்ன செய்திருக்க வேண்டுமென்றால், ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் தொகையை விடவும் கூடுதலாக 10 லட்சம் கோடி ரூபாயையாவது மோடி அரசு அறிவித்திருக்க வேண்டும். இருபது லட்சம் கோடி புதிதாக இறக்கப்பட்டுள்ளது போல இவர்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். அதோடு மட்டுமில்லாமல் எட்டு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க முனைந்திருப்பது நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது. இந்தியாவின் முதன்மையான முக்கிய துறைகளை தனியாருக்குத் தாரைவார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இதனுடைய பாதிப்பு உடனடியாகத் தெரியாது என்றாலும் வருங்காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும். -வெங்கட் குருசாமி.