தூண்டுகோல்!



வாசகர் கடிதம்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புப் பணியில் சேர்வதற்கான வாய்ப்பைப் பற்றியும் அதற்கான DRDO 2019-20 நுழைவுத்தேர்வு பற்றியும் விரிவாக விளக்கியிருப்பது அருமை. பாதுகாப்புத் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக இருந்தது.
  -எம்.அருள்பிரகாசம், விழுப்புரம்.

சர்வதேச கணினி போட்டியில் உலக மாணவர்களை வென்று நாசா செல்லவிருக்கும் தமிழக அரசுப் பள்ளி மாணவி ஜெயலட்சுமிக்கு ஒரு கிரேட் சல்யூட். வறுமையான குடும்பச் சூழலிலும் தொடர் முயற்சியால் இப்போட்டியில் வெற்றி பெற்று முன்னுதாரணமாக விளங்கும் மாணவியை உலகறியச் செய்துள்ளது பாராட்டத்தக்கது. விண்வெளி வீரராக வேண்டும் என்ற ஜெயலட்சுமியின் கனவு நிறைவேற மனமார்ந்த வாழ்த்துகள்.
  -அ.பரமசிவம், விருதுநகர்.

கடின உழைப்பாலும் தொடர் முயற்சியாலும் இலக்கை அடைந்தவர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நேர்மறையான சிந்தனைகளை விதைக்கும் முயற்சியால் வென்றவர்கள் தொடர் சிறப்பு. அவ்வகையில்  கார் பார்க்கிங்கில் சாதராணமாக அழகு நிலையம் ஆரம்பித்து இன்று படகு இல்லத்தின் உரிமையாளராக உயர்ந்த அனு ரமேஷின் வெற்றிக்கதை முன்னேறத் துடிப்பவர்களுக்கான தூண்டுகோல்.
  - ஜே.இர்ஃபான் முகமது, வேலூர்.

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் 10ம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாகத் தேர்வை எதிர்கொள்ளும் விதத்தையும் மாதிரி வினாத்தாளையும் தந்துவருவது சிறப்பு. அதேபோல் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு பயன்படும் விதமாக மத்திய மாநில அரசுப் பணி வாய்ப்புகளைப் பற்றிய தகவல்கள் அடங்கிய வேலை ரெடி பகுதி மிகவும் அவசியமானதாக உள்ளது.
  - ஆர்.ராஜகுமார், சிவகங்கை.