நீட் தேர்வுக்கு சமர்ப்பித்த விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்!




நியூஸ் கார்னர்

நீட் தேர்வுக்கு சமர்ப்பித்த விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்!

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது.விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த அவகாசம் ஜனவரி 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, நீட்டிக்கப்பட்ட அவகாச காலத்துக்குள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை ஆன்லைன் வாயிலாக ஜனவரி 31-ஆம் தேதிக்குள் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீட் தோ்வு கலந்தாய்வு மற்றும் பிற நடைமுறைகள் தொடா்பான தகவல்களுக்கு மாநில மருத்துவக் கல்வி இயக்ககத்தைத் தொடா்புகொள்ளலாம் என்று தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகுங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய போட்டித் தேர்வுகளை பல நிலைகளில் நடத்திவருகிறது. அதன்படி துணை ஆட்சியர், காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்டப் பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 8 வகையான உயர் பதவிகளை நேரடியாக நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

2020-ம் ஆண்டுக்கான வருடாந்திரத் தேர்வுக் கால அட்டவணையில், குரூப்-1 தேர்வு ஒரே ஆண்டுக்குள் நடத்தி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என்றும் இத்தேர்வுக்கு ஜனவரி 20 முதல் பிப்ரவரி 19 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜனவரி 20-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார். காலியிடங்கள் குறித்த விவரமும் அப்போது வெளியிடப்படும்.