நியூஸ் கார்னர்!



செய்தித் தொகுப்பு

JEST நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

உயர்கல்விகளில் சில குறிப்பிட்ட படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் அறிவியல் பிரிவில் முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தேர்வுகளில் முக்கியமான ஒன்று ‘ஜாயின்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்’என்ற நுழைவுத்தேர்வு. இந்த நுழைவுத்தேர்வை எழுதுவதன் மூலம் சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதியைப் பெற முடியும்.

வழங்கப்படும் படிப்புகள்: எம்.எஸ்சி., - பிசிக்ஸ், பிஎச்.டி., அல்லது ஒருங்கிணைந்த பிஎச்.டி. - பிசிக்ஸ், தியரடிக்கல் கம்ப்யூட்டர் சயின்ஸ், நியூரோ சயின்ஸ், கம்ப்யூடேஷனல் பயாலஜி.பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்: Indian Institute of Science, Institute of Mathematical Sciences, Indian Institute of Astrophysics,Tata Institute of Fundamental Research, Indian Institutes of Science Education and Research, Inter-University Centre for Astronomy and Astrophysics, National Primate Research Centers, Raja Ramanna Centre for Advanced Technology உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள்.

கல்வித்தகுதிகள்: பொதுவாக பி.எஸ்சி., பி.இ., பி.டெக். போன்ற இளநிலைப் பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் அல்லது எம்.எஸ்சி./எம்.சி.ஏ. போன்ற முதுநிலைப் பட்டப்படிப்பைப் படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம் என்றபோதிலும், தேர்வு செய்யப்போகும் படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தைப் பொறுத்து தகுதிகள் மாறுபடும். விண்ணபிக்க கடைசி நாள் 14.12.2019. தேர்வு நடைபெறும் நாள் 16.2.2020.
மேலும் விவரங்களுக்கு: www.jest.org.in

மருத்துவ ஆய்வு கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் விராலஜி கல்வி நிறுவனம் புனேவிலுள்ள இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்-ன் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவருகிறது. இக்கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
கல்வித்தகுதிகள்: லைஃப் சயின்சஸ், பயாலஜிக்கல் சயின்சஸ், பயோடெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ-இன்ஃபர்மேட்டிக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்புடன் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
நெட், ஸ்லெட், கேட், டி.பி.டி.,-இன்ஸ்பயர் போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 12.12.2019.
மேலும் விவரங்களுக்கு: http://niv.co.in

பள்ளி மாணவர்களுக்கு CA தேர்வுக்கானஇலவசபயிற்சி!

பிளஸ் 2வில், பொருளியல், கணக்குப் பதிவியல் படித்த மாணவர்கள், பட்டப்படிப்புக்கு செல்லும்போது சி.ஏ. தேர்வையும் எழுதலாம். பட்டப்படிப்புக்கு இணையாக கருதப்படும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆடிட்டராக பணியாற்றலாம்.

இந்நிலையில், சி.ஏ. படிப்பில் பள்ளி மாணவர்கள் ஆர்வம் குறைந்தும், உரிய விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.சி.ஏ.ஐ. பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு கட்டமாக, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, சி.ஏ. தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கவுள்ளது. அதேபோல், சி.ஏ. தேர்வு குறித்து, தங்களைத் தாங்களே மதிப்பிடும் வகையில் ஆன்லைன் திறனறி தேர்வை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இதன்படி, 2020 ஜனவரி 5ம் தேதி முதல்நிலைத் தேர்வும்; ஜனவரி 19ம் தேதி இரண்டாம் நிலைத் தேர்வும் நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி 24.12.2019 அன்று வரையிலும், தாமதக் கட்டணமாக ரூ.150 செலுத்தி 25.12.2019 வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை http://icaicommercewizard.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.