குறிப்பறிந்த சேவை



வாசகர் கடிதம்

மத்திய அரசின் அதிகாரி பணிகளில் சேர்வதற்கான SSC தேர்வுகள் பற்றிய கட்டுரை விரிவாகவும், விண்ணப்பித்தலுக்கு ஏதுவாகவும் இருந்தது. இந்தத் தேர்வை எழுதினால் கிடைக்கும் பணியிடங்கள் பற்றிய விவரங்கள், தேர்வு முறை, தேர்வு மையங்கள் பற்றிய தகவல்கள் சிறப்பு.
-டி.அருண்குமார், திருப்பூர்.

கல்வி-வேலை வழிகாட்டியில் நடப்பு நிகழ்வுகளின் தீவிரம் உணர்ந்து கல்வியாளர்களின் கருத்துகளை தொகுத்து பிரச்னைகளின் தீர்வை நோக்கிச் செல்லும் சர்ச்சைப் பகுதி கட்டுரைகள் எப்போதுமே ஸ்பெஷல் ரகம்தான். அவ்வகையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மத்திய அரசு கொண்டுவரவுள்ள ஒரே பொது நுழைவுத்தேர்வு பற்றிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
-இரா.வடிவேல், திண்டிவனம்.

பொதுவாகவே பொதுத்தேர்வு என்றால் மாணவர்களுக்கு கொஞ்சம் பதற்றம் வந்துவிடும். அதிலும் இப்போதெல்லாம் திடீர் திடீர் என்று பாடத்திட்ட மாற்றம், தேர்வு முறை மாற்றம், வினாத்தாள் முறை மாற்றம் என்று பள்ளிக் கல்வித்துறை வேறு மாணவர்களை கலக்கத்தில் ஆழ்த்துகிறது. மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சூழ்நிலையை உணர்ந்து 10ம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு டிப்ஸோடு மாதிரி வினாத்தாளும் தரும் குறிப்பறிந்த சேவைக்கு பாராட்டுகள்.
-மு.ஷேக் முகமது, ராமநாதபுரம்.

சர்வதேச வீரர்கள் பங்குபெற்ற உலக ஜூனியர் செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உச்சரிக்க செய்த  தமிழக மாணவன் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு தனது பட்டத்தை அர்ப்பணித்ததன் மூலம் தனது மனிதநேயத்தையும் சமூக அக்கறையையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளார் பிரக்ஞானந்தா.
-ஆர். கிருஷ்ணவேணி, சிவகாசி.