கவலைப்படுவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது!



இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர் 21

நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு ஆதாரம். அதிலும் இறைநம்பிக்கையுடன் நமது கனவுகளைச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது சிறப்பு.  தோல்விகள் ஏற்படும் தருணங்களில் நம்பிக்கைதான் ஒரு புதிய மனோபலத்துடன் எதையும் எதிர்கொள்ள துணைநிற்கும். உங்கள் வாழ்வை மாற்றவும்,  மேம்படுத்தவும் அந்த ஒரு நிமிட மனோபலம் போதும் என்பதை உணருங்கள். உங்கள் வாழ்வை மாற்ற ஒரு நிமிடம் போதும் என்பதால் ஒவ்வொரு  நிமிடமும் முக்கியமானது என்பதை உணருங்கள்.

கடுமையான அலையில் சிக்கி உடைந்த கப்பலிலிருந்து ஒருவன் மட்டும் உயிரோடு தப்பி, ஆளில்லாத ஒரு சிறிய தீவை அடைந்தான். தன்னைக்  காப்பாற்றும்படி இறைவனிடம் வேண்டினான். ஒவ்வொரு நாளும் ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்த்துப் பார்த்துக் கண்கள்தான் பூத்தன.  சலித்துப்போய் உடைந்த கப்பலின் பகுதிகளால் தன்னை வெயில், மழையிலிருந்து காத்துக்கொள்ளவும், தனது சில உடைமைகளை வைத்துக்  கொள்ளவும் ஒரு குடிசையைக் கட்டிக்கொண்டான். ஆனால், உணவைத் தேடி அவன் வெளியே அலைந்துகொண்டிருந்தபோது, ஒரு மின்னல்  வெட்டியது. வீட்டுக்கு வந்தபோது அவன் குடிசை இடிதாக்கி கரும்புகை வளையங்கள் விண்ணை முட்டும்படி எரிந்துகொண்டிருந்தது. மோசம்  போய்விட்டோம், எல்லாம் போயிற்று என்று துக்கத்தினாலும், ஆத்திரத்தினாலும் பாதிக்கப்பட்டு அலறி அழுதான்.

அத்தனை துன்பத்திலும், “இருக்கட்டும், நான் என் நம்பிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்வேன்”என்று சொல்லும் சக்தி அவனிடமிருந்தது. மறுநாள்  அதிகாலை, கரையை நோக்கி வரும் கப்பலின் சத்தம் கேட்டு அவன் விழித்துக்கொண்டான். அது அவனைக் காப்பாற்ற வந்துகொண்டிருந்தது.  தளர்ந்துபோன அந்த மனிதன் தன்னைக் காப்பாற்ற வந்தவர்களிடம் ,‘‘நான் இங்கே இருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்”என்று  கேட்டான். அதற்கு அவர்கள் “நீ போட்ட புகைமூட்டத்தினால்தான் இங்கு ஒரு மனிதர் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டோம்” என்றார்கள்.  எனவே, எந்த ஒரு தருணத்திலும் நம்பிக்கை இழக்காதவர்களுக்கு முடிவு எப்போதுமே சாதகமாகவே அமையும் என்பதை இந்த கதையின் மூலம்  அறியலாம்.

உங்கள் வாழ்வில் ஒரு தோல்வி ஏற்படும்போது தோல்விக்கான காரணத்தை அறிந்து தீர்வை நோக்கி மட்டுமே உங்களுடைய சக்தியை பயன்படுத்தி  முயற்சிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் தீர்வை நோக்கிச் செல்லாமல் தோல்வியை எண்ணி கவலைப்படுபவர்களாகவும் தீர்வைப் பற்றி  சிந்திக்காதவர்களாகவும் தான் இருக்கிறார்கள். கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை. மாறாக மேலும் தோல்விகளைத் தான்  தந்துவிடுகின்றன. கற்பனை சக்தியின் தவறான செயல்பாடுதான் கவலை. பலபேர் கவலைப்பட்டு தங்கள் உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டு மேலும்  பல பிரச்னைகளையும், கவலைகளையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். மருத்துவ ரீதியாகச் சொல்லப்படுவது என்னவென்றால் நீங்கள் சாப்பிடும்  பொருட்களால் வரும் வியாதியை விட, உங்களைச் சாப்பிடும் கவலைகளால் வரும் வியாதிகள்தான் அதிகம் என்கிறது. கவலைப்படுவதால் மட்டும்  எந்த பிரச்னையும் தீர்ந்துவிடாது.

எப்போதுமே உங்கள் சக்தியை பிரச்னைகளிலிருந்து விடுபடும் தீர்வுகளின் மீது செலுத்த வேண்டும். பிரச்னையை ஒரு கடந்த கால நிகழ்வாகவும்,  தீர்வைத் தற்கால நிகழ்வாகவும் ஆக்கிக்கொள்பவர்கள் சிறந்த வெற்றியைப் பெற்றுவிடுகிறார்கள்.கடந்த கால நிகழ்வான தோல்வியை மறந்து, தீர்வை  நோக்கிச் சென்று சிறந்த வெற்றியைப் பெற்றவர்தான் சையது ரியாஸ்அகமது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ரியாஸ். ஏழைக் குடும்பத்தில்  பிறந்து வளர்ந்தவர். பல்வேறு சோதனைகளையும், தடைகளையும் கடந்து சாதனைபுரிந்துள்ளார்.

அவரது தந்தை மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சாதாரண ஒரு கூலித் தொழிலாளியாக இருந்துவந்தார். அவரது தாய் ஏழாம் வகுப்பு வரை  படித்திருந்தார். பெற்றோர்கள் படிக்காத காரணத்தால் தனது மகனை நன்றாக படிக்கவைக்க முடிவு செய்தார்கள். கல்விச் செல்வத்தைப் பெற்றால்  குடும்பத்தின் வறுமையை விரட்டி பொருட்செல்வத்தை அடையலாம் என்பதை உணர்ந்திருந்தார்கள். இருவருமே தங்கள் மகன் ரியாஸை  எதிர்காலத்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உருவாக்க வேண்டும் என விரும்பினார்கள். அதைச் சிறுவயதிலிருந்தே ரியாஸிடம் சொல்லி  வளர்த்தார்கள்.

பெற்றோரின் விருப்பம் ஒன்றாக இருக்க ரியாஸோ பள்ளிப் படிப்பில் சுமாரான மாணவராகத்தான் இருந்தார். ஒவ்வொரு வகுப்பிலுமே மிகவும்  சிரமப்பட்டு தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களை மட்டுமே எடுத்து தேர்ச்சி பெற்றார். வகுப்பு ஆசிரியர்களிடமும் ரியாஸ் தேறாத மாணவர் என்ற  பெயரைத்தான் பெற்றார். இந்த நிலையில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதி அதில் தோல்வி அடைந்தார். பள்ளிப் படிப்பில் ஏற்பட்ட தோல்வியினால்  நம்பிக்கை இழந்தார். ஆனால், தோல்வி களைக் கண்டு துவண்டுவிடாமல் முயற்சிப்பதற்கான ஊக்கத்தை அவரது தந்தை தொடர்ந்து அளித்தார். அதன்  பலனால் மீண்டும் தேர்வு எழுதி விடாமுயற்சியாலும் தொடர்ந்த பயிற்சியாலும் ரியாஸ் 12ஆம் வகுப்பில் சாதாரண மதிப்பெண் எடுத்து தேர்ச்சி  பெற்றார். அதன் பிறகு கல்லூரிப் படிப்பை புனே பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் படித்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு தனது தந்தையின் இலக்கே தன்னுடைய இலக்கு என்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று தீர்மானித்தார். ஐ.ஏ.எஸ் கனவை நனவாக்கிக்கொள்ள கடினமாக முயற்சிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற அவரது தந்தையின் அறிவுரையே ரியாஸுக்கு  மிகுந்த ஊக்கமளித்தது. 2014ஆம் ஆண்டு முதன்முறையாக ஐ.ஏ.எஸ் தேர்வை எழுதி முதல்நிலைத் தேர்விலே தோல்வி அடைந்தார். பிறகு மீண்டும்  தேர்வு எழுதி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று மெயின் தேர்வில் தோல்வி அடைந்தார். மீண்டும் அடுத்த முயற்சியாக யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதி  அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, நேர்காணலில் தோல்வி அடைந்தார். இருந்தபோதும் மிகுந்த ஊக்கத்துடன் மீண்டும் 2018ஆம் ஆண்டு  தேர்வுக்குத் தயாரானார்.

இந்நிலையில் உறவினர்களும், நண்பர்களும் இது தேவையில்லாத ரிஸ்க் என்றும் குடும்பம் கஷ்டமான நிலையில் இருக்கும்போது தொடர்ந்து தேர்வு  எழுத முயற்சிப்பது தேவையா? என விமர்சிக்க ஆரம்பித்தார்கள். இந்த கருத்துகள் ரியாஸின் முடிவை மாற்றவில்லை. அவரைவிட அவரது தந்தை  இதில் மிகவும் உறுதியாக இருந்தார். தனது மகன் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்காகத் தனது சிறிய வீட்டைக் கூட விற்று பயிற்சிக்காகப்  பயன்படுத்த முடிவு செய்தார். இதனிடையே ஏற்கனவே எழுதியிருந்த மற்றொரு தேர்வில் ரியாஸுக்கு மகாராஷ்டிரா வனத்துறையில் வேலை  கிடைத்தது.இதனால் குடும்பத்தின் நிதிச்சுமை சிறிது குறைந்தது. வேலை பார்த்துக் கொண்டே மீதமுள்ள நேரங்களில் படிப்பில் கவனம் செலுத்தினார்.  மூன்று மணி நேரம் மட்டுமே உறங்கி மீதி நேரம் முழுவதும் வேலை, படிப்பு என்று செலவழித்தார். வனத்துறை வேலை தனது இலக்கு அல்ல,  ஐ.ஏ.எஸ் ஆவதே தனது கனவு என்ற முடிவுடன் பல வல்லுநர்களின் ஆலோசனைகளை நாடினார்.

மேலும் ஜாமியாமிலியாவின் இலவசப் பயிற்சியில் இணைந்தார். பயிற்சி மற்றும் விடா முயற்சியின் விளைவால் 5வது முயற்சியில் வெற்றி பெற்று  அகில இந்திய அளவில் 261வது இடத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியைக்கொண்ட சையதுரியாஸ்  ஏழ்மை மற்றும் குடும்பச் சூழலை மீறி, விடாமுயற்சியால் யூ.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் ஆகியிருப்பதன் மூலம் அவரைப் போன்ற  எண்ணற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். மனஉறுதி, வெற்றிக்கான விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு இருந்தால் யார்  வேண்டுமானாலும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என்கிறார் ரியாஸ்.

நீட் தேர்வில் தோல்வி மற்றும் பொதுத் தேர்வுகளில் தோல்வி என்பதற்காக தவறான முடிவுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மத்தியில் 12ஆம்  வகுப்பில் தோல்வி அடைந்தபோதும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் மனஉறுதியால் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற ரியாஸ்  தன்னம்பிக்கையின் அடையாளம். விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குச் சரியான வாய்ப்பும், ஊக்கமும் அளிக்கப்பட்டால் அவர்கள் நிச்சயமாக  ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதிப்பார்கள் என்கிறார்ரியாஸ் சையது அகமது. உங்கள் இலக்கில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் உங்கள் இலக்கில்  சிறிதும் பிசகாமல் குறிவைத்து அதே சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அப்படி  செயல்படுபவர்களுக்கு மட்டுமே வெற்றி வெகு அருகில் உள்ளது என்பதில் ஐயமில்லை.

(புதுவாழ்வு மலரும்)