அன்று: சவுண்ட் ஸ்டூடியோவில் வேலை செய்தவர் இன்று: சவுண்ட் டெக்னாலஜி பயிற்சி மையத்தின் உரிமையாளர்முயற்சியால் வென்றவர்கள்..

வெற்றிக் கதை


ஒரு வேலைக்கான வாய்ப்பு அமைந்ததும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள் கடைசி வரை ஒரு நல்ல வேலைக்காரராகவே இருந்து  ஓய்வு பெறுகிறார்கள். ஆனால், நமக்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதுதான் நம் வாழ்க்கைக்கான வாய்ப்பு என நினைப்பவர்கள் அதிலுள்ள  தொழில்நுட்பங்களையும் சேர்த்தே கற்றுக்கொண்டு ஒரு தொழிலதிபராகவோ அல்லது ஒரு நிறுவனத்தை உருவாக்குபவராகவோ மாறிவிடுகிறார்கள்.

ஒரு தொழிலதிபராகவோ அல்லது ஒரு நிறுவனத்தையே உருவாக்குபவராகவோ ஆவதென்பது எளிதான காரியமில்லை. மந்திரத்தில் மாங்காய்  காய்த்துவிடாது. வாய்ப்புகளை வளமான வெற்றிப்பாதையாக மாற்றிக்கொள்ள முயற்சியும் திட்டமிடலும் வேண்டும். அந்த வகையில் ஒரு  நிறுவனத்தில் ஊழியராகச் சேர்ந்த மனோஜ் குமார் அத்தொழில் சார்ந்த நுட்பங்களை மேலும் கற்றுக்கொண்டு இன்றைக்கு சவுண்ட்டெக் மீடியா  இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆடியோ டெக்னாலஜி (SoundTech Media Institute of Audio Technology) என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி பல முன்னணி  இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘சிறு வயதிலேயே எனக்கு இசையின் மீது ஆர்வம் இருந்ததால் அது சம்பந்தமாகப் படிக்கவேண்டும் என தேடியபோது சவுண்ட் எஞ்சினியரிங் என்ற  டிப்ளமோ கோர்ஸ் இருப்பது தெரியவந்தது. டிப்ளமோ படித்து முடித்ததும் புதுடெல்லியில் ஒரு நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. ஒரு  நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தால் அங்குள்ள தொழில்நுட்பங்களை மட்டுமேதான் தெரிந்துகொள்ள முடியும். அதனால், மேற்கொண்டு  தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்ள மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு மாறினேன். அங்கு ஒரு சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு நம்  தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வந்து ஒரு சவுண்ட் ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதுதான் என்னையே நான் உணரத்  தொடங்கினேன்.

வேலை செய்துகொண்டிருக்கும்போது எவ்வளவோ தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம், அது மற்றவர்களுக்கும் பயன்பட  வேண்டுமானால் ஒரு இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதையடுத்து 2004ம் ஆண்டு சென்னையில் சிறிய அளவில்  பத்துக்குப் பத்து அறையில் SoundTech Media Institute of Audio Technology என்ற சவுண்ட் எஞ்சினியரிங் தொடர்பான பயிற்சி  இன்ஸ்டிடியூட்டைத்  தொடங்கினேன். 4 மாணவர்கள் மட்டுமே முதலில் சேர்ந்தனர். பெரிய அளவில் விளம்பரம் கிடையாது, ஒரு ஓட்டலுக்கு ருசி அதன் சுவை  என்பதுபோல நம்மிடம் படிக்கும் மாணவர்கள் மூலமே நம் இன்ஸ்டிடியூட்டுக்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதில்  தெளிவாக இருந்தேன்.

நான் நினைத்ததுபோலவே ஒருவர் மூலம் ஒருவராக மாணவர்கள் மற்றும் இசையில் ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது’’  என்று மகிழ்ச்சியோடு கூறியவர் தான் தொடங்கிய நிறுவனத்தின் இன்றைய நிலை குறித்து விவரித்தார்.‘ ‘இன்றைக்கு ஒவ்வொரு நாளும் மூன்று  பேட்ஜ் மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். ஒரு பேட்ஜுக்கு 40 மாணவர்கள் வீதம் பயிற்சி பெற்றுவருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம்  என்னவென்றால் இசையமைப்பாளர் அனிருத் இந்த சவுண்ட்டெக் மீடியா டெக்னாலஜி அகாடமியில் பயின்றவர். சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற  சந்தோஷ், ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் இங்கு படித்தவர்கள்தான்.

காலத்திற்குத் தகுந்தாற்போல் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு அதை மாணவர்களுக்கு தொடர்ந்து அளித்தும் வருகின்றேன். அனைத்து  தொழில்நுட்ப வசதிகளும், கருவிகளும் இன்ஸ்டிடியூட்டில் இருக்கின்றன. இன்றும் சவுண்ட் எஞ்சினியரிங் பற்றிய தகவல்களை நான் தொடர்ந்து  படித்துவருகின்றேன். பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டுவருகின்றேன்’’ என்று கூறும் மனோஜ் குமார் தன்னிடம் பயிற்சி பெறும்  மாணவர்களுக்கான எதிர்காலம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.‘‘ஓராண்டு முழுநேர டிப்ளோமோ இன் சவுண்ட் எஞ்சினியரிங்கில் ஆடியோ அண்ட்  மியூசிக் துறை குறித்து தெரிந்துகொள்வதற்குத் தேவையான அனைத்து விதமான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதை எடுத்து படித்தால்  பல்வேறு ஸ்டூடியோக்கள் மியூசிக் டைரக்டர்களிடம், கம்போசரிடம், ப்ரீலான்ஸராக பணியாற்றும் வாய்ப்பு இருக்கிறது. ஸ்டூடியோவில் ரெகார்டிங்,  எடிட்டிங், மிக்ஸிங் மற்றும் டப்பிங் எஞ்சினியராக பணியாற்றும் வாய்ப்புள்ளது. அனிமேஷன் துறையிலும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

இந்த டிப்ளமோ படிப்பில் மட்டும்தான் ஒரு சவுண்ட் ஸ்டூடியோவை எப்படி வடிவமைப்பது அதற்கு என்னென்ன தேவைகள் என்பது உள்ளிட்ட  அனைத்து விவரங்களும் பயிற்சியாக மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கிவருகிறோம். இதன்மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் கூடுதலாக  வாய்ப்புகள் கிடைக்கின்றன.நான் இதுவரையில் பல்வேறு பிரபலங்களுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட சவுண்ட் ஸ்டூடியோக்களை வடிவமைத்து  கொடுத்துள்ளேன். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஸ்டூடியோக்களை அமைத்துக் கொடுத்துள்ளேன். கேரளா, மும்பை என பல்வேறு  மாநிலங்களிலும் தொழில் நுட்பத்துடன்கூடிய ஸ்டூடியோக்களை அமைத்துக் கொடுத்துவருகிறேன்.

கடந்த 15 ஆண்டுகளாக சவுண்ட் எஞ்சினியரிங் தொடர்பான கல்வியைச் சிறந்த முறையில் பயிற்சி அளித்து தரமான மாணவர்களை உருவாக்கி  வருகின்றோம். காலத்திற்கு தகுந்தாற்போல் ஆண்டுதோறும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்குப் புதிய பாடத் திட்டங்களை  அறிமுகப்படுத்தி வருகின்றோம். இன்றைக்கு இன்ஸ்டிடியூட் 6000 சதுர அடியில் அமைந்துள்ளது மிகச்சிறப்பான ஒன்றாகும். மேலும்  இன்ஸ்டிடியூட்டில் 5.1 சரவுண்ட் ஸ்டீரியோ உள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். இந்த இன்ஸ்டிடியூட் மியூசிக் புரொடக்‌ஷன் தொடர்பான பயிற்சி  அளிப்பதில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. வருங்காலத்தில் அதிகளவில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இசையுலகில் வல்லுநர்களாக  அதிக மாணவர்களை உருவாக்குவதே முக்கிய நோக்கம்’’ என்று தீர்க்கமாகக் கூறுகிறார் மனோஜ் குமார்.

- தோ.திருத்துவராஜ்