அன்று இயற்கை மருத்துவர்.. இன்று மூலிகை மருந்து கம்பெனியின் நிறுவனர்



*வெற்றி கதை
*முயற்சியால் வென்றவர்கள்


முயற்சியால் வெற்றிபெற்று வாழ்வை வளமாக்கிக் கொண்டதோடு சரித்திரத்தில் இடம்பிடித்தவர்கள் ஏராளமாக உள்ளனர். அவரவர் குறிக்கோளை நோக்கி செயல்பட்டு முயன்று வெற்றிபெற்றதால்தான் அவர்கள் சரித்திரத்தில் இடம்பிடித்தார்கள். இதைத்தான் ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்’ என்றார் திருவள்ளுவர்.

நம்முடைய திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும் வேண்டியதற்கு மேலும் அள்ளித்தரும். அந்த வகையில், நான்கு நபர்களுடன் தொடங்கிய ஒரு நிறுவனத்தை இன்றைக்கு 500 வகையான மூலிகை மருந்துகள் தயாரிக்கும் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றியுள்ள ‘வீ ஹெர்பல் கேர் பிரைவேட் லிமிடெட்’ (VEE HERBAL CARE (P) LTD) நிறுவனர் மருத்துவர் சுசான்லி ரவி தன் வெற்றிக்கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார். ‘‘ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மளிகைக்கடையுடன், மலைவாழ் கிராம மக்களுக்கு ஏற்படும் பலதரப்பட்ட நோய்களுக்கு எளிய முறையில் கைவைத்தியம் மற்றும் மூலிகை வைத்தியம் பார்த்து வந்தார் எனது தந்தை ஆறுவன். பக்கவிளைவுகள் இல்லாமல் மீண்டும், மீண்டும் மருத்துவமனைக்கு வராதபடி ஒரு நோயை முழுவதுமாகக் குணப்படுத்தி ஆயுள், ஆரோக்கியம் தருவதே ஒரு சிறந்த மருத்துவ முறை.

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எழுதிவைத்த வைத்திய முறைகள், மூலிகை மருந்துகள் அதிகம் நம் கைக்கு கிடைக்கவில்லை. நம் பண்டைய மருத்துவமுறையைப் பின்பற்றி, வேம்பு, மஞ்சள், திருவாச்சி, துளசி, வில்வம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகின்றன. அதை நாம் வாங்கி, அமெரிக்காவிலிருந்து வந்தது, லண்டன் தயாரிப்பு என்று பெருமையாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், நம் நாட்டு மூலிகைப் பொருட்களை உதாசினப்படுத்துகிறோம்’’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ‘‘நம் இயற்கை மற்றும் மூலிகை மருத்துவமுறை மீது எனக்கு சிறுவயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அதுகுறித்து அதிகமாக ஆராய ஆரம்பித்தேன். மேலும், இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் குறித்து முதுநிலைப் பட்டப்படிப்பு (உடலியல் மற்றும் ஆலோசனை) படித்தேன். இதனையடுத்து 28 ஆண்டுகளுக்கு முன் கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியில் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். எனது தந்தையின் மூலிகைக் குறிப்புகள், நான் கண்டுபிடித்த மூலிகை ஆய்வுகளின் அடிப்படையில் மிகச் சிறிய அளவில் 1996-ஆம் ஆண்டு புதுச்சேரியில் ‘டாக்டர் ரவிஸ் இண்டியன் ஹெர்பல் ரெமடிஸ்’ என்ற பெயரில் சித்தா, ஆயுர்வேதா மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நான்கு பேருடன் வாடகை கட்டடத்தில் தொடங்கினேன்.

2000ம் ஆண்டில் டாக்டர் ரவிஸ் இண்டியன் ஹெர்பல் ரெமடிஸ் என்ற நிறுவனம் ‘VEE HERBAL CARE’ என பெயர் மாற்றம் பெற்று தனது பயணத்தை வேகமாக்கியது. இந்தக் காலகட்டத்தில் தொழில்ரீதியாக பல்வேறு போராட்டங்கள், பல்வேறு விதமான சங்கடங்களை சந்திக்க நேரிட்டது. ‘விடாமுயற்சி கடினமான உழைப்புக்கு வெற்றி என்பது உறுதிப்படுத்தப்பட்டது’ என எனது மனைவி பேராசிரியை டாக்டர் உஷா சொல்லிய வாக்கியம் எனக்குள் வைராக்கியமாக மாறியது!
15 மூலிகை மருந்துகளில் ஆரம்பித்தது இன்றைக்கு படிப்படியாக VEE HERBAL CARE (P) LTD என்ற மாற்றத்துடன் கம்பெனி சட்டதிட்டங்களுக்குட்பட்டு நான் நிர்வாக இயக்குநர் (MANAGING DIRECTOR) ஆகவும், பேராசிரியை டாக்டர் உஷாரவி, டாக்டர் பானுபிரியா ஆகியோர் இயக்குநர்களாகவும், சுமார் 500க்கும் மேற்பட்ட மூலிகை உணவுப் பொருட்கள், சித்தா, ஆயுர்வேதா பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியாகச் செயல்பட்டுவருகிறது.

எனது பல சந்தேகங்களுக்கு தீர்வுக்காகச் சென்றபோது தீர்வு இதுதான் எனத் தெரிந்த பலரும் என்னை உதாசினப்படுத்தினார்கள். அதன் விளைவு மத்திய அரசின் சிறுதொழில் நிறுவனம் (SSI - Small Scale Industry), தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME - Micro, Small & Medium Enterprises) மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (K&VIC - Khadi and Village Industries Commission) உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு மூலிகைத் தொழில் பயிற்சிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை சுமார் 500க்கும் அதிகமாக நடத்தும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளேன். 20 ஆண்டுகளுக்கு முன்பே சிறு, குறு தானியங்களைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். அதுமட்டுமின்றி மூலிகை மருந்துகள் செய்வதற்கான பல பயிற்சிகளை இலவசமாகவே கற்றுத்தந்துள்ளேன்’’ என்றார்.

‘‘வாழ்க்கை முறை மாற்றத்தால் இன்றைக்கு சிறு வலியைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத மனநிலைக்கு வந்துவிட்டோம். எதற்கெடுத்தாலும் ஸ்கேன், எக்ஸ்ரே என்று போய்விடுகிறோம். கடைசியில் ஒன்றுமில்லை என்று கூறுவதற்குள் நமக்கு ஏகப்பட்ட மனஉளைச்சல், பண விரயம் என எல்லாம் ஏற்பட்டுவிடுகிறது. இதை நம் வீட்டுப் பாட்டி ஒன்றுமில்லை, ஒரு சிட்டிகை ஓமத்தை வாயில்போட்டு மென்று சாப்பிட்டு தண்ணீர் குடி என்று சொல்லி தீர்த்துவிடுவாள். இதுபோன்ற பக்கவிளைவுகள் இல்லாததுதான் இயற்கை மற்றும் மூலிகை மருந்துகள்.

சமூகத்துக்கு பயன் தரும் மூலி​கை ஆய்வுகள், சிறு - குறு தானிய ஆய்வுகள், விழிப்புணர்வுக் கட்டு​ரைகள், பயணங்கள், முகாம்கள் என 28 ஆண்டுகால பயணத்தில் பல எதிர்ப்புகளை சாதுர்யமாக சந்தித்து வீழ்ந்து மீண்டும் எழுந்து, வீழ்ந்து மீண்டும் முன்னிலும்​ வேகமாக எழுந்து நாடு முழுவதும் எனது மூலிகை மருந்துகள் செல்வதால் இந்தியாவை கடலுார் பக்கம் திரும்பிப் பார்க்க ​வைத்துள்ளேன். இயற்​கை விவசாயத்திற்கு மூலி​கைச் சாகுபடி குறித்து பயிற்சியளித்து வருகிறேன். பலநூறு மூலி​கைத்​​ தொழிலதிபர்களை உருவாக்கியுள்ளேன். மத்திய அரசின் அமைப்பான BSS மற்றும் மத்திய அரசின் MSME, மத்திய அரசின் K&VIC ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு பயிற்சி வகுப்புகளையும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறேன்’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கையின் த​லை​மை ஒருங்கி​ணைப்பாளராகவும் உள்ளேன். பள்ளிக்குழந்​தைகளுக்கு ‘மூலி​கை ஆ​ரோக்கிய விழிப்புணர்வு’ நிகழ்வுக​ளை இலவசமாக நடத்தி​​​வருகிறேன். பள்ளிகள், சங்கங்கள், இயக்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் என யார் கேட்டாலும் ‘மூலி​கை ஆ​ரோக்கிய விழிப்புணர்வு’ நிகழ்ச்சியி​னை இலவசமாக நடத்திக்​கொடுக்க தயாராக இருக்கிறேன். சிறு சிறு உடல் உபா​தைகளுக்கு எளிய மு​றையில் மருந்து இல்லாமல் குணப்படுத்தும் முறையை​ பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் இலவசமாக​வே கற்றுத் தருகின்றேன். சுமார் 500க்கும் ​மேற்பட்ட சித்தா, ஆயுர்வேதா, ​​ஹோமியோபதி, மருந்து​க​ளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் ​மே​னேஜிங் ​டைரக்டராக உள்ளதுடன், 10க்கும் ​மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் உள்ளேன். 20க்கும் ​மேற்பட்ட மூலிகைப் புத்தகங்களும், 5 கவிதைப்புத்தகங்களும் எழுதியுள்ளேன். இவற்றின் மூலம் இதுவரையில் 50க்கும்​​ மேற்பட்ட விருதுகளை​ பெற்றுள்ளேன்.

நாம் இந்த உலகிற்கு ஒரு பயணம் வந்திருக்கிறோம். அதன் அழகுகளை ரசித்து, ஆரோக்கியமாக வாழ்ந்து நாம் செல்ல வேண்டிய இடம் வந்ததும் இறங்கிக்கொள்ள வேண்டும். அதனால் ஆரம்பத்திலிருந்தே நம் உடல் மீது அக்கறையும், கரிசனமும் கொண்டு பராமரித்தால் இறுதி வரை நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும். மறைந்து வரும் மாபெரும் அற்புத மருத்துவ முறையை நாம்தான் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அனைத்து வகையான மருத்துவமுறைகளின் தாயகம் நம் தமிழகம் என்பதை மறக்காமல் இருந்தாலே அனைத்தும் சாத்தியப்படும்’’ என்று நிறைவாக... தீர்க்கமாக சொல்லி முடித்தார் மருத்துவர் ரவி.

- தோ.திருத்துவராஜ்