மைக்ரோசாஃப்ட்டும் நாசாவும் நடத்தப்போகும் வீடியோ பாடம்!



* அறிவியல் உலகம்
* பொது அறிவு


சர்வதேச தொழில்நுட்ப கல்வியாளர்கள் சமூக மாநாடு 2018-ல் நடந்தது. அப்போது நடந்த சந்திப்பின் விளைவாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கல்விப் பிரிவு மற்றும் நாசா ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு புதிய வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மைக்ரோ கிராவிட்டியிலிருந்து விண்வெளி வீரர்களின் கால்களை பாதுகாக்க சாக்ஸ்களை எப்படி தயாரிப்பது?’ என்ற தலைப்பில் தொடங்கி, 8 தலைப்புகளில் வீடியோ பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

மேலும் இந்தப் பாடத்திட்டத்தில் 3D வடிவமைப்பு, விர்ச்சுவல் ரியலிட்டி மற்றும் தகவல் ஆய்வு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில், அனைத்து தலைப்புகளிலும் 50 நிமிடங்கள் அளவிலான மூன்று அல்லது நான்கு வகுப்புகள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு தலைப்பிலும் வகுப்புகள் 2 முதல் 3 டாலர்கள் (140 ரூபாய் முதல் 210 ரூபாய் ) வரையிலான கட்டணத்தில் கிடைக்கப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை பற்றிய அறிவை மாணவர்களுக்குக் கற்பிக்கும் வகையிலேயே இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தை பயில மாணவர்கள் வின்டோஸ் 10 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸின் சந்தாவை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2018 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிபிசியுடன் இணைந்து இதே மாதிரியான திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

நுண்துகள்களால் உருவாகும் முத்து!

சிப்பி என்பது நன்னீர் மற்றும் கடல்நீர் ஆகிய இரண்டிலும் காணப்படும் இருவோட்டுடலி வகுப்பைச் சேர்ந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளால் ஆனது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். நீரில் இருக்கும்போது உள்ளிழுத்துக்கொள்கிறது சிப்பி. அதன் பருவகாலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இடும். முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசிமுனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது. இரண்டு வாரங்களில் நீந்தத் தொடங்கும். ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும்.

ஆபரணங்களில் மின்னும் மிக நல்ல முத்துக்கள் சிப்பிகளிலிருந்தே எடுக்கப்படுகின்றன. முத்து இருவாயில் (bivalve) மெல்லுடலி உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக்குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அந்த நுண்துகள்களின் மீது பூசப்படுகின்றது. இச்செயல்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதிப்புவாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. சிலர் தூத்துக்குடி போன்ற பகுதிகளில் கடலில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன. சிப்பிகள் உலகின் பல பகுதி மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும். இதில் புரதச்சத்தும் குறைந்த கொழுப்பும் உள்ளதால் உடல்நலனுக்கு ஏற்றது.

நிலவுக்கு விண்கலம் அனுப்பிய இஸ்ரேல்!

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரியும் என்ஜிஓ ஸ்பேஸ்ஐஎல்-ம் சேர்ந்துதான் இந்த ஆளில்லா விண்கலத்தை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் கேப் கானவெரலிலிருந்து கடந்த பிப்ரவரி 22 ம் தேதி அனுப்பியது. பெரிஷீட் என்னும் பெயருடைய 585 கிலோ எடை கொண்ட, இந்த விண்கலம் எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் நிலாவிற்கு அனுப்பப்பட்டது. பூமியை பின்னணியில் வைத்து பெரிஷீட் விண்கலம் செல்ஃபி எடுத்து அந்த செல்ஃபியை 37,600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இஸ்ரேலிய மிஷன் கண்ட்ரோலுக்கு அனுப்பியுள்ளது.

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே நிலாவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கியுள்ளனர். பைபிள், குழந்தைகளின் ஓவியம், இஸ்ரேல் பாடல்கள் மற்றும் இஸ்ரேலிய கொடியை டிஜிட்டல் வடிவத்தில் இந்த விண்கலம் கொண்டு சென்றுள்ளது. இஸ்ரேலைத் தொடர்ந்து இந்தியாவும் சந்திராயன் -2வை நிலாவுக்கு அனுப்பியுள்ளது. 2020-2021 காலக்கட்டத்தில் ஸ்லிம் என்னும் சிறிய லூனார் லாண்டரை ஜப்பான், நிலாவுக்கு அனுப்ப உள்ளது. மற்ற நாடுகளை மிஞ்சும் வகையில் நாசா ஒரு திட்டம் வைத்துள்ளது. கேட்வே என்னும் சிறிய விண் தளத்தை நிலாவின் ஆர்பிட்டில் 2026ம் ஆண்டுக்குள் உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2030ம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கும் மனிதனை அனுப்பும் திட்டம் தீட்டியுள்ளது நாசா.