நியூஸ் கார்னர்



செய்தித் தொகுப்பு



கோவையில் செயல்படும் போலி தனியார் பள்ளிகள்!

கல்வித் துறையின் அனுமதியின்றி 263 தனியார் பள்ளிகள் கோவை மாவட்டத்தில் செயல்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி Play schools-205, Nursery and primary schools-40, Matriculation schools-4, CBSE Schools-14 பள்ளிகள் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் மூடப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 17 பள்ளிகள் மட்டும் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், தனியார் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக பெற்றோருக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலைநேரங்களில் வெளியே செல்ல ஆசிரியர்களுக்குத் தடை!
 
பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்கள் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி போன்ற விவரங்கள் இ.எம்.ஐ.எஸ். இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏதாவது விவரங்களைக் கேட்கும்போது, இ.எம்.ஐ.எஸ். இணையதளத்தின் மூலம் பெற்று அனுப்பவேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக்கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பள்ளி வேலைநேரங்களில் விவரங்களைப் பெறுவதற்காகத் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. மற்ற முக்கியமான காரணங்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை சனிக்கிழமையிலோ அல்லது மாலைநேரங்களிலோ நடத்திட வேண்டும்.

எனவே, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் விவரங்களை அளிக்கவும், பெறவும் முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். விவரங்களை இ-மெயில் மூலமாக அனுப்பலாம். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு இவ்வாறு செய்தால் கல்விப்பணி பாதிக்காது.’என அதில் கூறப்பட்டுள்ளது.

கல்வியியல் கல்லூரிகள் அதிக கட்டணம்வசூலிக்க தடை!

தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், 700 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், பி.எட்., - எம்.எட்., பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், அரசு மற்றும் அரசு உதவி கல்லூரிகளின், 65 சதவீத இடங்கள், தமிழக அரசின் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.

சுயநிதிக் கல்லுாரிகள் மட்டும் தனித்தனியாக மாணவர்களைச் சேர்த்துக்கொள்கின்றன. மாணவர் சேர்க்கைக்குக் கல்லுாரிகள் வழங்கும் விண்ணப்பங்களுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல, கல்விக் கட்டணமும், லட்சக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், விண்ணப்பக் கட்டணம் மற்றும் கல்விக் கட்டணத்தை அதிகம் வசூலிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அனைத்துக் கல்லூரி களுக்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. அதில்‘கல்லுாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது.

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும். கட்டண வசூல் குறித்து புகார் வந்தால், அந்தக் கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிஏ பயிற்சி!

பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுதவிர முதுநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்துக்கான புத்தாக்கப் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டுவருகிறது. இந்தப் பயிற்சியின்போது வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல் பாடங்களின் ஆசிரியர்களுக்குப் பட்டயக் கணக்காளர் படிப்பு சம்பந்தமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக இந்திய பட்டயக் கணக்காளர் பயிற்சி நிறுவனத்திலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக இப்போதைய புத்தாக்கப் பயிற்சியின் இடையே சிஏ பயிற்சிக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்துதர மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’என கூறப்பட்டுள்ளது.