முத்தான முன்னுதாரணங்கள்



வாசகர் கடிதம்

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் நீர்மேலாண்மை படிப்புகளின் அவசியத்தை உணர்த்துகிறது ‘நீர்மேலாண்மைப் படிப்புகளும் அவசியமும்’ கட்டுரை. நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பெறுவதற்காகவாவது குறுகிய கால படிப்புகளில் இளையதலைமுறையினர் சேர வேண்டும். இத்துறை சார்ந்த படிப்புகளின் வகைகள், கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு, கல்விநிறுவனங்கள் என முழுமையாகவும் தெளிவாகவும் அமைந்தது கட்டுரை.
  -ஆர்.கணேஷ்பாபு, கன்னியாகுமரி.
 
தன்வீட்டு கழிவறைகளையே சுத்தம் செய்ய தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில் 18 ஆண்டுகளாக கழிவறைகளை சுத்தம் செய்து, அதன் மூலம் வந்த வருமானம் ரூபாய் பத்து லட்சம் வரை ஆதரவற்றோர் குழந்தைகள் கல்வி கற்க வழிவகை செய்த லோகநாதனுக்கு ஒரு கிரேட் சல்யூட். இதுபோன்ற முத்து முத்தான முன்னுதாரணங்களுடன் தொடர்ந்து இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அளித்துவருகிறது புதிதாய்ப் பிறப்போம் சரித்திரம் படைப்போம் தொடர்.
  -ஏ.வேலன், மதுரை.
 
நவீன தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வனை’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றிருக்கும் மாணவி நிலா சரவணராஜாவிற்கு வாழ்த்துக்கள. தமிழக பண்பாட்டின் சிறப்புகளை மற்றவர்களும் அறிய இம்மொழிபெயர்ப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
  -டி.சாலமன், நெல்லை.
 
வங்கிப் பணியாளர் பணிக்கான IBPS தேர்வு, தமிழக அரசுப் பணிக்கான TNPSC GROUP IV தேர்வு, கடற்படையில் பயிற்சியுடன் மாலுமி பணி போன்ற கட்டுரைகள் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வளமான வாழ்வுக்கு வழிகாட்டுபவை. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் சார்ந்த பயனுள்ள பல தகவல்களை தாங்கிவரும் கல்வி-வேலை வழிகாட்டி இதழின் சேவை பாராட்டுகளுக்குரியது.
  -எம்.காதர் மொய்தீன், ராயப்பேட்டை, சென்னை.