ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமா?



கலக்கத்தில் தமிழக மாணவர்கள்

மருத்துவப் படிப்புகளான MBBS, BDS படிப்புகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்திலும் கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது நீட் தேர்வு. மாணவிகளின் உயிரி ழப்பும் தொடர்கிறது. இந்நிலையில் ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் கட்டாயமாக்கப்படும் என்ற தகவல் மாணவர்களை கலக்கமடையச் செய்துள்ளது. மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஆண்டு அனைத்து ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
ஆனால், தமிழகத்தில் 2018ம் ஆண்டு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு மற்றும் தனியார் ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. இந்நிலையில் ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் 2018ம் ஆண்டு டிசம்பரில் ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று சுற்றறிக்கை வெளியிட்டதோடு, அரசிதழிலும் வெளியிட்டது.

அதேசமயம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பிற ஆயுஷ் மருத்துவப் படிப்புகளான சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா, யுனானி ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகியிருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு முறையான அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று விளம்பரப்படுத்தவுமில்லை. இதனால் ஆயுஷ் மருத்துவப் படிப்புகளில் சேரவிருந்த ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் கடந்த மே 31ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘‘கடந்த ஆண்டே நீட் மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அதற்கான சட்ட முன்வடிவு அமலுக்கு வரவில்லை. அதனால் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தினோம். இந்த ஆண்டு சட்ட முன்வடிவு அமலுக்கு வந்து, விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. விலக்கு பெற வாய்ப்புள்ளதா என தமிழக அரசின் தலைமை அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்டுள்ளோம். மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்’’ என்றார். இந்த பேட்டி தமிழக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு கவுன்சலிங் நடத்தும் இந்தியமுறை மருத்துவம், ஓமியோபதி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, நீட் விண்ணப்பித்தல் கையேட்டின் 5ம் பக்கத்தின் கடைசி பத்தியில் இடம்பெற்றுள்ள ‘‘Candidate’s eligibility for NEET (UG) - 2019 is purely provisional and is subject to fulfilment of eligibility criteria as prescribed by the MoH&FW/MCI/DCI/NTA/MCC/other admitting Institution as applicable’’ என்ற வாசகத்தை சுட்டிக் காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் கட்டாயம் என்பது அரசிதழில் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால் இதில் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் நீட் தேர்வில் விலக்கு கோரலாம் அல்லது சட்டப்படி நீட் வேண்டாம் என வழக்கு தொடுக்கலாம். இந்த இரண்டு வழிகளில் மட்டுமே தமிழகத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவ இடங்களுக்கு விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.

  - சுந்தர் பார்த்தசாரதி