கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!



செய்தித் தொகுப்பு

கே.வி. பள்ளிகள் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும் 1,199 கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், தமிழகத்தில், 48  பள்ளிகள் உள்ளன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 14 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில், 1 முதல் +2 வரை படிக்கலாம். நடப்புக் கல்வி ஆண்டில் ஒன்றாம்  வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ‘ஆன்லைன்’ விண்ணப்பப் பதிவு மார்ச் 1ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. மார்ச் 19ம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பரிசீலனைக்குப் பின், தேர்வு செய்யப்படும் மாணவர் விவரத்தின் முதல் பட்டியல்  மார்ச் 26ம் தேதி வெளியிடப்படும்.



இரண்டாவது பட்டியல் ஏப்ரல் 9; மூன்றாவது பட்டியல் ஏப்ரல் 23ல் வெளியாகும். ராணுவத்தினர், மத்திய பாதுகாப்புப் படையினர், மத்திய அரசுப்  பணியில் உள்ளவர்கள், மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள், தேசிய அளவில், மத்திய அரசின் விருது பெற்றவர்களின் பிள்ளைகள் மற்றும்  கே.வி.பள்ளிகளின் முன்னாள், இந்நாள் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விதிமுறைகளை  kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு!

‘அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, வேலைவாய்ப்பில் 2 சதவீதம் இட  ஒதுக்கப்படும்’ என 2018 சுதந்திர தின உரையின்போது, தமிழக முதல்வர் இ.பி.எஸ். அறிவித்தார். இந்த இட ஒதுக்கீட்டை, 3 சதவீதமாக உயர்த்த  வேண்டும் என விளையாட்டு வீரர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதை, தமிழக அரசு ஏற்று விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பில்  3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க  உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது.


5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்  தேர்வுக்கு எதிர்ப்பு!

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு முதலே நடத்தப்போவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி,  பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி சங்கத்தின் மாநிலச் செயலாளர் கூறுகையில்,‘‘தமிழகத்தில் 5 மற்றும் 8ம்  வகுப்பிற்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

ஆனால், முழுஆண்டுத் தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் பொதுத்தேர்வு அறிவித்திருப்பது மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே முப்பருவ முறையில், 2 பருவத் தேர்வு முடிந்த நிலையில், அந்தத் தேர்வுக்குரிய புத்தகங்களை எல்லாம் மாணவர்கள்  அப்புறப் படுத்தியிருப்பார்கள். மேலும், அவர்களுக்குப் பொதுத்தேர்வைச் சந்திக்கும் அளவுக்குப் பயிற்சி அளிக்கப்படவில்லை.

அதைப்போல், 20 மாணவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வேறு பள்ளியில் சென்று தேர்வு எழுதவேண்டும். அந்த மாணவர்கள் வேறு பள்ளியில் சென்று தேர்வு எழுதுவது கஷ்டமான ஒன்றே. பருவ பாடத்திற்கான பாடப்புத்தகங்கள் இன்னும் பல மாணவர்களுக்குக் கிடைக்கவே இல்லை.  இந்நிலையில் பொதுத்தேர்வைச் சந்திக்க அந்தச் சிறு வயது மாணவர்களால் முடியாது.

இந்தப் பொதுத்தேர்வு முறை அடுத்த ஆண்டிலிருந்து நடத்தினால் வரவேற்கப்படும். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அரசு இந்த அறிவிப்பை ரத்து செய்யவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும். தற்போது உடனடியாகக் கால அவகாசமின்றி, பொதுத்தேர்வை அறிவித்திருப்பது இந்த மாணவர்களின் வாழ்க்கை நிலை மற்றும் இயல்பு நிலையைப் பாதிப்படையச் செய்யும். இந்த ஆண்டு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய  வேண்டும்.’’ என்று தெரிவித்துள்ளார்.

பேக்கேஜிங் பட்டயப்படிப்பில் மாணவர் சேர்க்கை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங்’கல்வி நிறுவனம் மத்திய அரசின்கீழ் செயல்படும் தன்னாட்சி  பெற்ற நிறுவனமாகும். இங்கு உள்ள தொலைநிலை டிப்ளமோ படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. டிப்ளமோ இன் பேக்கேஜிங்  படிப்பு  ஒரு ஆண்டு 6 மாதங்கள் கொண்டது.

கல்வித் தகுதி: யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வர்த்தகம் அல்லது கலைக் கல்லூரியில்  பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். புரொடக்‌ஷன், பர்சேஸ், மார்க்கெட்டிங் அல்லது குவாலிட்டி கன்ட்ரோல் போன்ற துறைகளில் குறைந்தது ஒரு ஆண்டு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டியதும் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை நேரடியாகச் சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ள ஐ.ஐ.பி. கல்வி நிறுவனங்களிலிருந்து  பெற்றுக்கொள்ளலாம் அல்லது கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த  விண்ணப்பத்தை கல்லூரி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.3.2019. மேலும் விவரங்களுக்கு www.iip-in.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.