முறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்!



சர்ச்சை

முனைவர் பி.இரத்தின சபாபதி


கல்வி வளர்ச்சி கல்வி தரம் உயர்வு எனப் பேசப்படும் இந்நாளில் தெளிவில்லாத கொள்கைகளும் வரன்முறையில்லாத செயல்பாடுகளும்  காணப்படுகின்றன. மத்திய அரசுப் பள்ளிகளுக்கு இணையான பாடத்திட்டம் எனப் பேசப்படுகிறது.
அதேநேரத்தில் படிப்புப் பளுவை மேன்மேலும் அதிகமாக்கிக்கொண்டு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது…. இந்திய நாட்டிற்கே வழிகாட்டிவந்த தமிழகக் கல்வித்துறை மத்திய அரசின் அழுத்தத்திற்கு உட்பட்டு தகுதி நுழைவுத் தேர்வுகளை ஏற்றுக்கொள்வது என பற்பல குழப்பங்கள் நீடிக்கின்றன. மாணவர்களும் பெற்றோர்களும் எப்போதும் குழப்பத்தோடும் கலக்கத்தோடும் இருக்கும் நிலை உள்ளது.

கோடிக்கணக்கில் பணம் புரண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் வெளிப்படுத்தப்பட்ட  பின்னர் இன்று மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல் எதுவும் இல்லை என்னும் நிலை உருவாகியுள்ளது.மத்திய அரசாலும் மாநில அரசாலும் கோடிக்கணக்கில் கல்வி வளர்ச்சிக்காக நிதிகள் செலவு செய்யப்படுகின்றன. ஆனால், அவையெல்லாம் விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா என்ற கேள்வி எழாமலில்லை.

‘சர்வ ஷிக்‌ஷ அபியான், ‘ராஷ்ட்ரிய மத்திய ஷிக்‌ஷ அபியான்’, ‘சமக்கிர ஷிக்‌ஷ’, ‘ராஷ்ட்ரிய உச்ச ஷிக்ஷ அபியான்’என்பனவெல்லாம் கல்வி வளர்ச்சிக்கான மத்தியஅரசின் செயல்திட்டங்கள்(Projects). வாயில் நுழையாத இந்திப் பெயர்களை எப்படியோ நிதிகளைத் தந்து கல்வித்துறையினரை ஒலிக்கவைத்துவிட்டது இந்தியைத் திணிக்க முயலும்  மத்திய அரசு. இவையெல்லாம் என்ன? சர்வ ஷிக்‌ஷ அபியான் (SSA)- அனைவருக்கும் கல்வி இயக்கம்- இது தொடக்கக் கல்வி வளர்ச்சியின் பாற்பட்டது.. ராஷ்ட்ரிய மத்திய ஷிக்‌ஷ அபியான் (RMSA- இடைநிலைக் கல்வி இயக்கம்) - இது இடைநிலைக் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கானது. இவ்விரண்டும் இப்போது  இணைக்கப்பட்டு  ‘சமக்கிர ஷிக்ஷ’(SS) என்று ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி என்றாகியுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்திலும் குறிக்கப் பெற்ற 2005ஆம் ஆண்டின் கல்வி ஏற்பாட்டுக் கட்டமைப்பினை(NCF-2005) முன்னிறுத்தி கல்வி வளர்ச்சிச் செயல்பாடுகளை மாநில அரசும் மத்திய அரசும் மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது.NCF-2005-ன் வலியுறுத்தல்களில் ஒன்று, கல்வி ஏற்பாடும் பாடத்திட்டங்களும் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வகைசெய்வதுதான். தொடக்க, உயர், மேனிலைப் பள்ளி அளவிலானது இந்த நோக்கம். ஆனால் நோக்கம் நிறைவேறியுள்ளதா? ஆசிரியர்களை தற்போதைய பாடத்திட்ட வலிமைக்கேற்ப உருவாக்குவது என்பது இன்னுமொரு நோக்கம்.

 மேலும் மேலும் பொதிந்து தரப்பட்ட பாடநூல்களை எதிர்பார்க்கும் அளவில் கற்பிக்க ஆசிரியர்கள் திறம் பெற்றிருக்கிறார்களா? ஆசிரியர்களை வல்லவர்களாக்க இயங்கிவரும் CRC. BRC என்பனவற்றின் செயல்பாடுகள் எவ்வாறுள்ளன? எண்ணிப்பார்த்தால் எல்லாமே குழப்பங்கள். திட்டங்கள் தீட்டப்பட்டால் மட்டும் போதாது. அவை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். அவை முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை மத்திய/மாநில அரசுகள் கவனம் செலுத்தி மேற்பார்வையிட வேண்டும். இல்லையென்றால் கல்வி வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே பிரகாசிக்கும்.

பிசினஸ் அனலட்டிக்ஸ் படிக்க விண்ணப்பிக்கலாம்!

தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி லாபகரமானதாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் தொழில்துறை மேம்பாடு பெற்று நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். அதற்கு தொழில் நிறுவனங்களின் வியாபாரம் பெருகுகிறதா? குறைகின்றதா?, லாபமா? நஷ்டமா? போன்ற தகவல்களை தொழில் நிறுவனங்களின் நிர்வாகம் அறியவேண்டியது மிக மிக அவசியம். ஆகவேதான் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து அலசி ஆராய்ந்து அறிக்கைகளைத் தயாரிக்க தனியாக அதிகாரிகளை நியமிப்பார்கள். அப்படி அறிக்கையை தயாரிப்பதற்கானதுதான் பிசினஸ் அனலட்டிக்ஸ் படிப்பு.

ஐ.ஐ.டி. காரக்பூர் மற்றும் ஐ.ஐ.எம். கொல்கத்தா மற்றும் இந்தியன் புள்ளியியல் கல்வி நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்க (போஸ்ட் கிராட்ஜூவேட்  டிப்ளமோ இன் பிசினஸ் அனலிடிக்ஸ் -பி.ஜி.டி.பி.ஏ.,) உள்ளது. இதில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை விலக்கு வழங்கப்படும். இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை முறை: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வான மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 3.1.2019
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.pgdba.iitkgp.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.