சமயோஜித யுத்தி!



வாசகர் கடிதம்

முப்படைகளில் உள்ள பணியிட விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை, கல்வித் தகுதி, தேர்வு மையங்கள் மற்றும் பணி வாய்ப்பு பெற அவசியமான NDA நுழைவுத்தேர்வுகள் எப்படியிருக்கும், அதில் வெற்றி பெறுவது எப்படி என  வேலைவாய்ப்புக் கட்டுரை முழுமையாகவும், தெளிவாகவும் விண்ணப்பித்தலுக்கு உதவியாகவும் இருந்தது. பயனுள்ள தகல்வல்கள் பகிர்ந்தமைக்கு ஒரு ராயல் சல்யூட்!
  - கோ. ராஜராஜன், மேலூர்.
 
அண்ணா பல்கலையின் எஞ்சினியரிங் பருவத் தேர்வு வினாத்தாள்களில் குளறுபடி பற்றிய கட்டுரை, தமிழக உயர்க்கல்வித் துறையின் தரம் கேள்விக்குறியாகியுள்ளதை தெளிவுப்படுத்தியது. இப்பிரச்னையின் விளைவைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு கல்வியாளர்கள் கருத்தை பகிர்ந்தது அற்புதம்.  இதுபோன்ற சூழல்களால் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் உயர்கல்வித்துறை சந்திக்கும் இன்னல்களையும் பட்டியலிட்டுக் காட்டுகிறது கட்டுரை.
-ச. ரஞ்சித்குமார், காரைக்கால்.
 
பள்ளிக் கல்வி முடிக்கும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் கொண்ட உயர்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்யும் விதம் கல்வி வேலை-வழிகாட்டியின் சமயோஜித யுத்தி. அவ்வகையில் இம்முறை புள்ளியியல் படிப்புகளின் இன்றைய தேவையையும், வேலைவாய்ப்புகள், பணி வகைகள், கல்வித் தகுதி மற்றும் சிறந்த கல்விநிறுவனங்கள் என இத்துறை பற்றி விரிவாக விளக்கியிருப்பது சிறப்பு.
-ஆர்.கோமகன், தஞ்சாவூர்.
 
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் குப்பை வண்டி செல்லும்போது மூக்கை பொத்தும் இன்றைய மக்கள் மத்தியில் அதில் இறங்கி குப்பைகளை தரம்பிரித்து மறுசுழற்சி செய்து வருமானம் வரக்கூடிய தொழிலாக மாற்றிய இளைஞர்களின் சமூக செயல்முனைவு ஐடியா அற்புதம். லட்சங்களில் சம்பாதிக்கும் ஐடி ஊழியர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளான இந்த ‘குப்பைக்காரன் இளைஞர்கள் குழு’வின் சிறப்பான சுகாதார மேலாண்மை செயல்பாடுகள் போற்றுதலுக்குரியவை.
- எஸ். நிவேதிதா, சேலம்.