நல்ல விஷயம் 4



பார்க்க வேண்டிய இடம் - கீழவளவு சமணச் சிற்பங்கள்

கீழவளவு என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமமாகும். இந்த கிராமம் மதுரையிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் உள்ளது. இது மேலூரிலிருந்து 11 கிலோமீட்டர் (6.8 மைல்) தொலைவில் உள்ளது.இங்கு உள்ள மலைப்பாறையான பஞ்சபாண்டவர் மலை அல்லது பஞ்சபாண்டவர் படுக்கைக்காக இவ்வூர் அறியப்படுகிறது. இந்தக் கல் படுக்கைகள், சிற்பங்கள் போன்றவை ஜைனத்துடன் சம்மந்தப்பட்டவை.

பஞ்சபாண்டவர் மலை இக்கிராமத்தில் மேலூர்  திருப்பத்தூர் சாலையில் உள்ளது. பண்டைய தமிழகத்தில் ஜைனமதம் தழைத்தோங்கிய காலத்தில் இந்த மலையில் உள்ள குகைகளைச் சமணத் துறவியர் தங்கள் வாழிடமாக மாற்றிக்கொண்டனர். இந்தியத் தொல்லியல் துறையால் இந்த மலைப்பாறைகள் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட நினைவிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குகையில் சமணப் புடைப்புச் சிற்பங்களாக பாகுபலி மற்றும் கடைசித் தீர்த்தங்கரரான மகாவீரர் உள்ளிட்ட ஒன்பது தீர்த்தங்கார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு தமிழ் - பிராமி மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இந்தத் தமிழ்-பிராமி எழுத்துகள் 1903-ல் வெங்கோப ராவ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தக் கல்வெட்டுகள் வலமிருந்து இடப்புறமாகவும், மேலிருந்து கீழாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வகையான கல்வெட்டுகள் குன்றக்குடி மலையில் மட்டுமே காணப்படுகிறன. ஜைனத் துறவிகள் பயன்படுத்திக்கொள்வதற்காக, குகைகளில் கல்படுக்கைகள் உள்ளன. குகையில் உள்ள ஒரு கல்வெட்டு இந்த கல்படுக்கைகள் தொண்டியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களால் வடிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. மேலும் தகவல்களை அறிய https://ta.wikipedia.org/wiki/கீழவளவு

படிக்க வேண்டிய புத்தகம் - கட்டற்ற மென்பொருள்  தமிழில் ம..ராமதாஸ்

கணினி மற்றும் அதன் உட்கூறுகள் பற்றி விரிவாக அலசும் புத்தகங்கள் தமிழில் குறைவு. இக்காரணத்தை மனதில் கொண்டு, மென்பொருள்கள் என்றால் என்ன? இயங்குதளங்களின் வகைகள், தொழில்துறை வளர்ச்சியில் அதன் பங்களிப்பு என மென்பொருட்கள் பற்றி விரிவாக அலசுகிறது இந்நூல். அதோடு மாற்று இயங்குதளங்களின் தேவையும், லினக்ஸ், குனு போன்ற இயங்குதளங்களின் தோற்றம், கட்டற்ற மென்பொருட்கள் என்றால் என்ன, சமூக முன்னேற்றத்தில் அதன் பங்களிப்பு என மென்பொருட்கள் பற்றி விவரமாகத் தமிழ்வழிக் கற்கும் மாணவர்களுக்கு உதவும் விதமாக உள்ளது.

கணினித் துறையில் புரட்சி செய்த குனு திட்டம் மற்றும் மென்பொருள் உபயோகத்திற்கான சுதந்திர விதிகளை உருவாக்கிய ரிச்சர்ட் எம்.ஸ்டால்மன் ஆங்கிலத்தில் எழுதியதை  அனைவருக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் ம..ராமதாஸ். (வெளியீடு: எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167 ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, இராமநாதபுரம், கோயம்புத்தூர்- 641 045. விலை: ரூ.95. தொடர்புக்கு: 0422-2323228)

வாசிக்க வேண்டிய வலைத்தளம் - www.kaniyam.com

கட்டற்ற கணினிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதி நுட்பமான அம்சங்கள் வரை அறிய முற்படும் அனைவருக்கும் தேவையான தகவல்களைத் தொடர்சியாக வழங்கும் தளமாக செயல்படுகிறது இத்தளம். கணினித் துறையின் நடப்பு நிகழ்வுகள், ஆய்வு கட்டுரைகள், அதிமுக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் மற்றும் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் தொழில்நுட்பங்கள், நவீன கணினி முறைமைகள் என கணினி யுகத்துக்கு அவசியமான செய்திகளை எளிய தமிழில் அறிமுகம் செய்கிறது இத்தளம். மேலும் ஆன்லைனில் படிக்கும் விதமாக மின் புத்தகங்களும் உள்ளன.

அறிய வேண்டிய மனிதர்- வி.ஆர்.லலிதாம்பிகா

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் 1962ம் ஆண்டு பிறந்தவர்தான் இஸ்ரோ ககன்யான் திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.ஆர். லலிதாம்பிகா. திருவனந்தபுரம் கல்லூரியில் பி.டெக் இன் எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் மற்றும் எம்.டெக் இன் கன்ட்ரோல் எஞ்சினியரிங் முடித்தார். பின் 1988-ல் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் இணைந்து, விண்வெளி மையத்தின் இணை இயக்குநராக இருந்தவர் லலிதாம்பிகா.

மேலும் இந்தியாவின் பெயரை சர்வதேச அளவில் உயர்த்திய இஸ்ரோவின் எ.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் ஆர்.எல்.வி. போன்ற ஏவுகணை உருவாக்கத்தில் பெரும்பங்காற்றினார். விண்வெளித் துறையில் இவர் செய்த சாதனைகளை கவுரவிக்கும் விதமாக ஸ்பேஸ் கோல்டு மெடல் விருதை இந்திய அரசு இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இந்திய அரசின் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டுவருகிறார். மேலும் இவரைப்பற்றி அறிய https://en.wikipedia.org/wiki/V._R._Lalithambika