பள்ளிக்கல்வித்துறையின் புது முயற்சி IMPART!



புது முயற்சி

வகுப்பறைக் கற்றலில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகப்படுத்துவதற்கான செயல்திட்டம் IMPART (Improving Participation in  Classroom) 2016-17 கல்வியாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இரு  ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இத்திட்டமானது, வகுப்பறையில் மாணவர்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்காக இந்தியப் பள்ளிக்கல்வித்  துறையில் எடுக்கப்பட்ட முதல் முன்னோடி முயற்சியாகவும் கருதப்படுகிறது.

இந்திய அளவில், தமிழகத்தில் மட்டுமே செயல்படும் இம்முன்னோடித் திட்டத்தின்  2018-19 கல்வியாண்டின் முதற்கட்ட பயிற்சி முகாம் சமீபத்தில்  எழும்பூரில் நடந்தது. 32 மாவட்டங்களிலிருந்தும் உதவி மாவட்ட  திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பாட  ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். IMPART திட்ட ஒருங்கிணைப்பாளர் செ. சித்ரா, இத்திட்டம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்
களைப் பார்ப்போம்…

‘‘தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் தமிழகத்தில் பள்ளி செல்லும் வயதுடைய அனைத்துக் குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல்  படிப்பைத் தொடர பல்வேறு திட்டங்கள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் மூலம்  2016-17ஆம் கல்வியாண்டில் திருவாரூரில் முன்னோடித் திட்டமாக IMPART (Improving Participation in Classroom- வகுப்பறைப் பங்கேற்றலை உயர்த்துதல்) செயல்திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.

அங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக 2017-18ம் கல்வியாண்டில் சிறப்புக் கவன ஈர்ப்பு மாவட்டங்களான(Special Focus  Districs) 7 மாவட்டங்களில் (திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி) விரிவுபடுத்தப்பட்டது.  இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் கல்வி செயல்பாடுகளில் பங்கேற்றலில் அதிக ஆர்வம் காட்டுவதை கண்கூடாகக் காணமுடிந்தது. இதன் விளைவாக  இந்த ஆண்டு 2018 - 19ல் 32 மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்(Samagra shiksha) மூலம் இத்திட்டம்  பரவலாக்கப்பட்டுள்ளது.’’ என்று IMPART திட்டத்திற்கான விளக்கத்தை கூறினார்.

மேலும் தொடர்ந்த சித்ரா,‘‘IMPART, செயல் திட்ட வழிக்கற்றல் எனப்படும் Project based Learning முறையை அடிப்படையாகக்  கொண்டது. இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் இடைநிற்றல் அதிகம் உள்ள 100 பள்ளிகள் (இடைநிற்றல் அதிகம் உள்ள பள்ளிகள்) தெரிவு  செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் 5 ஆய்வுகள் வீதம் 500 ஆய்வுகள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில்  செயல்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு ஆய்விலும் 4 மாணவர்கள் வீதம் ஒரு மாவட்டத்தின் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் 20,000 மாணவர்கள் ஆய்வில் பங்கேற்கின்றனர்.

ஓவ்வொரு மாவட்டத்திலும் 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வழிகாட்டி ஆசிரியர்களாக செயல்படுவர். தமிழ், ஆங்கிலம், கணிதம்,  அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் செயல்திட்டங்களை வடிவமைத்தல், மாணவர் குழுக்களை தெரிவு செய்தல், செயல்திட்டத்தினை  செயல்படுத்துதல், தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு பிரச்னைகளை அடையாளம் கண்டு தீர்வை செயல்படுத்தும் திறன் வளர்த்தல் போன்றவையே  வழிகாட்டி ஆசிரியர்களின் பணி.’’ என்று திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை விவரித்தார்.

‘‘வட்டார அளவில் சிறந்த கட்டுரைகள் ஒவ்வொரு பாடத்திலும் தெரிவு செய்யப்பட்டு அவை மாவட்ட அளவில் பங்குபெறும் நிகழ்வில்  சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் மாநில அளவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். மாணவர்கள் அவர்கள் பாடத்தில்  உள்ள ஒரு தலைப்பை அவர்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை மையமாகக் கொண்டு தேர்வு செய்யவேண்டும். அவர்களே அப்பிரச்னைகளுக்கான காரணங்களை பொதுமக்களிடம் சென்று அறிந்து அதற்கான தீர்வையும் கண்டறிய வேண்டும். அதனை ஓர் ஆய்வுக் கட்டுரையாக சமர்ப்பிக்க  வேண்டும்.

அப்பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆய்வுக் கட்டுரையை மேலாய்வு செய்து அதிலிருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுத்து மாணவர்களின்  செயல்திறனை சோதித்து பின்னர் சிறந்த செயல்திட்டங்களைத் தெரிவு செய்வர். இந்தச் செயல்திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும்  பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்த செயல்திட்டங்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்’’ என இத்திட்டத்தை குறித்து விளக்கிய திட்ட  ஒருங்கிணைப்பாளர் செ. சித்ரா, இத்திட்டத்தினால் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் பகிர்ந்துகொண்டார்.

 
‘‘திருவாரூர் மாவட்டத்தில் 2016 - 17ல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, அப்போது 9ம் வகுப்பில் பயின்ற ஈஸ்வரி என்ற மாணவி தனது  ‘மருதப் பட்டினம் என்ற கிராமத்தில் பெண் கல்வியின் நிலை’ என்ற செயல்திட்டத்தின் மூலம் அந்த கிராமத்தில் பெண் கல்வியின் நிலையை  அறிந்துகொள்கிறார். அவரது பெற்றோர் அவருக்கு அந்த இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்க முயல, படிப்பின் அவசியத்தை தனது  பெற்றோர்களுக்கு தனது செயல்திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்போது மேல்நிலைக் கல்வி பயின்று வருகிறார்.

இச்செயல்திட்டத்தின் மூலம் அவரது இடைநிற்றல் தவிர்க்கப்பட்டு, அவரது கல்விப் பயணம் தொடர்கிறது. நீலகிரியில் நடைபெற்ற அரசு மேல்நிலைப்  பள்ளி, கோத்தகிரி மாணவர்கள் ‘செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் இசையை ரசிக்க, கற்று உணர முடியும்’ என்ற தலைப்பில் செவித்திறன்  குறைந்த மாணவர்கள் இசையை கேட்டுணரும் வகையில்  பிராஜெக்ட்டை திட்டமிட்டனர். கைப்பேசியின் ஒலிபெருக்கியில் ஒரு ஒயர் மூலமாக   பல்லில் கடித்துக்கொண்டால் இசையை ரசிக்க முடியும் என்ற செயல்திட்டத்தினை வடிவமைத்து தற்போது அதற்கு காப்புரிமையும் பெற முயற்சி  செய்துவருகின்றனர்.மேலும் இத்திட்டம் மாணவர்களுடைய வருங்கால வாழ்வில் ஒளியேற்றும் என்பதில் ஐயமில்லை’’ என்று நம்பிக்கையூட்டும்  விதமாக IMPART திட்டம் பற்றி தெளிவுபடுத்தினார் சித்ரா.
 

- வெங்கட்