நாகரிக மாற்றம் தந்த புதிய தொழில் டாட்டூ!



தொழில் வாய்ப்பு

நம் முன்னோர்கள் பச்சை குத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். தாத்தா பாட்டிகளின் கைகளில் பார்த்தால் தெரியும். பூக்களையோ, ஏதாவது பெயர்களையோ பச்சை குத்தியிருப்பார்கள். அதன் மறு வடிவமாகத்தான் இளைஞர்கள் மத்தியில் நாகரிகம் என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது டாட்டூ.5ம் ,6ம் வகுப்பு படித்திருந்தால் கூட போதும் டாட்டூ கணிசமான வருமானம் ஈட்டிக் கொடுக்கும்.

எப்படி கற்றுக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது. டாட்டூவில் இளங்கலை, முதுகலை போன்ற கல்லூரிப் படிப்புகள் முறைப்படி கிடையாது. ஆனால், சரியான இடத்தைத் தேர்வு செய்து கற்றுக்கொண்டால் டாட்டூ நாம் நினைத்ததை விட அதிக வருமானத்தை அள்ளிக் கொடுக்கும்.

அது எப்படி? என்று உங்கள் மனதில் எழும் கேள்விக்கு டாட்டூ தொழிலில் சாதித்துக்கொண்டிருக்கும் சென்னையின் பிரபல ஜியோ டாட்டூ ஸ்டூடியோ மற்றும் இன்ஸ்டிடியூட் நிர்வாகி மற்றும் உரிமையாளர் ஜார்ஜ் பதிலளிக்கிறார்…

‘‘டாட்டூ மத்த பிஸினஸ் மாதிரி இல்லை, பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சு இங்கே வந்தா சாதிக்கமுடியாது. கலை ஆர்வம் வேணும், ஓரளவு அடிப்படை ஓவியம் தெரிஞ்சிருந்தா போதும். இந்தியாவுல சில முக்கிய நகரங்களில் மட்டுமே டாட்டூ கத்துக்கக்கூடிய முறையான இன்ஸ்டிடியூட்கள் இருக்கு.

டாட்டூ ஆர்வம் இருக்குன்னா முதல் படி சரியான இன்ஸ்டிடியூட் தேர்வு. நீங்க தேர்வு செய்யற ஸ்டூடியோ உரிமையாளருக்கு எந்த அளவுக்கு டாட்டூவில் அனுபவம் இருக்கு, அவருடைய ஸ்டூடியோவிற்கு கூகுள் போன்ற தளங்கள்ல வரவேற்பு எப்படி இருக்கு.

போதுமான இட வசதிகளுடன்கூடிய ஸ்டூடியோ இருக்கா, அவருடைய டாட்டூ வரையும் முறைகள் ஆரோக்கியமானதா இருக்கா, இப்படி பல விஷயங்களையும் நாம ஆராயணும். அடுத்து ஒரு வார கோர்ஸ், மூணு நாள் கோர்ஸ் இதெல்லாம் சாத்தியமே இல்லை.

மனுஷங்களுடைய ரத்தம், சதை, தோல் இவைகளுடன்தான் நம்ம தொழில் இருக்கப் போகுது. கொஞ்சம் தவறினாலும் உயிருக்கே ஆபத்தா முடியலாம். உங்களுக்கே மனதளவுல நம்பிக்கை வர வரைக்கும் டாட்டூ கத்துக்கறதைத் தொடர்ந்து செய்யணும்’’ இப்படி ஸ்டூடியோ தேர்வு குறித்து விளக்கிய ஜார்ஜ் இதற்கு எவ்வளவு கட்டணம் ஆகும், கற்றுக்கொண்ட பிறகு எப்படி தொழிலை ஆரம்பித்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது என தகவல்களைப் பகிர்ந்தார்.

‘‘டாட்டூ எவ்வளவு செலவு செய்தும் கத்துக்கலாம். நீங்க தேர்வு செய்கிற ஸ்டூடியோ , அனுபவம் இப்படி எல்லாமே அடிப்படையாக் கொண்டுதான் உங்களுக்கான செலவுகளும் இருக்கும். இப்போ என்கிட்ட ரூ.25,000க்கு அடிப்படை டாட்டூ கோர்ஸ் இருக்கு, ரூ.85,000க்கு ஒரு கோர்ஸ் இருக்கு.

இது இல்லாம அட்வான்ஸ்டு கோர்ஸ், மெஷின், இங்க் எல்லாம் சேர்த்து ரூ.1,25,000க்கு இருக்கு. மேலும் கத்துக்கிட்டு என் கிட்டயே வேலைக்கு சேர்ந்தும் அவங்க செலவு செய்த பணத்தை சம்பளமா பெற்றுவிடலாம். நான் ஆரம்பமே ரூ.10,000 வரை சம்பளம் கொடுக்குறேன்.

டாட்டூ முடிச்சாச்சு அடுத்து என்ன செய்யலாம். பெரும்பாலும் இங்கேதான் நாம புத்திசாலித்தனமா செயல்படணும். டாட்டூ பிஸினஸே இளைஞர்களுக்கானது அதனால சமூக வலைத்தளங்கள்ல விளம்பரங்கள் கொடுக்கணும். டாட்டூ கோர்ஸ் முடியும்போதே விசிட்டிங் கார்ட் அடிச்சு, தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் கொடுத்துடணும்.

முடிஞ்சவரைக்கும் ஆன்லைன் மூலம் அதிகம் புரமோஷன் கொடுக்குறதும் அதிகமான மக்களை ஈர்க்கும். இது தவிர்த்து டாட்டூ ரிமூவிங் கோர்ஸ் தனி. அதற்கு செலவு கொஞ்சம் அதிகமா ஆகும்.

பிஸினஸ் தொடங்கி இன்னைக்கு ரேஞ்சுக்கு ரூ.500 ஆரம்பிச்சு ரூ.1,00,000 வரைக்கும் கூட டாட்டூப் போடலாம். ஸ்டூடியோ செட்டப் பொறுத்து டாட்டூ ஆரம்ப விலை மாறும். என்கிட்ட குறைந்தது ரூ.2000 ஆரம்பிச்சு ஒரு லட்சம் வரைக்கும் கூட டாட்டூ போடறேன்’’ என்று சொல்லும் ஜார்ஜ் தகுந்த திட்டத்துடன் இடம் தேர்வு செய்வதும் முக்கியம் என்கிறார்.

‘‘அதிகமான இளைஞர்கள் வந்து போற இடமா இருக்கணும், மேலும் ஸ்டூடியோ ஏதோ காபி ஷாப், அல்லது மெடிக்கல் ஷாப் மாதிரி இருக்கக்கூடாது. ட்ரெண்டியா, மாடர்னா இருக்கறதும் முக்கியம். என்கிட்ட கத்துக்கிட்ட நிறைய பேர் இன்னைக்கு பல ஊர்கள்ல ஸ்டூடியோ ஆரம்பிச்சு கார், வீடுன்னு கூட செட்டிலாகிட்டாங்க. ஏன் நானே என்னுடைய ஐந்தாவது கிளையை பெரம்பூர்ல பாரக்ஸ் ரோடு, புரசைவாக்கத்துல ஆரம்பிக்கப் போறேன்.

இந்தத் தொழில்ல ஒரே ஒரு சிக்கல் இருக்கு. தென்னிந்தியாவுல கொஞ்சம் லேட் ஆகும். காரணம் உலகம் முழுக்க டஸ்கி தோல் நிறத்தைக் கொண்டாடுற வேளையில இந்த டாட்டூ மட்டும் இன்னும் சிவப்பு நிற தோலுக்கான பிஸினஸா தான் இருக்கு. அதுக்காக டஸ்கி தோல்ல தெரியாதுன்னு கிடையாது. சில டிசைன்கள் நம்ம தென்னிந்திய மக்கள் தோலுக்கு சூட் ஆகாது.

இதே வட இந்தியர்கள் தோல் நிறத்துக்கு ஈசியா செட் ஆகும். அந்த ஒரு காரணம்தான் நம்ம ஊர்கள்ல டாட்டூ தொழில் சூடு பிடிக்க கொஞ்சம் லேட் ஆகும். மத்தபடி மாதம் மூணு லட்சம் வரைக்கும் எனக்கு வருமானம் கிடைக்குது.

சரியா பிளான் பண்ணி இந்த பிஸினஸ் செய்தா நிச்சயம் டாட்டூ இதுக்கு மேலயும் கொடுக்கும்’’ என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் ஜார்ஜ். மாறிவரும் நாகரீக மாற்றங்கள் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவது வரவேற்கத்தகதே.

- ஷாலினி நியூட்டன்