கேம்பஸ் நியூஸ்



செய்தித் தொகுப்பு

இளைஞர் மேம்பாட்டில் முதுநிலைப் பட்டயம் படிக்கலாம்!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் ‘ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் யூத் டெவலப்மென்ட்’கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: இளைஞர் மேம்பாட்டு முதுநிலை பட்டயப்படிப்பு (போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் யூத் டெவலப்மென்ட்)

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கால அளவு: குறைந்தது ஓர் ஆண்டு. அதற்குள் இந்த டிப்ளமோ படிப்பை முடிக்க இயலாதோர் அதிகபட்சம் இரண்டு ஆண்டிற்குள் முடித்திட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் அல்லது அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர் கல்வி நிறுவனத்தின் www.rgniyd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கல்லூரி நிர்வாக முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை அனுப்பலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.7.2018

மேலும் விவரங்களுக்கு www.rgniyd.gov.in

* விருதுத் தொகையை மாணவர்களுக்கு அர்ப்பணித்த கனவு ஆசிரியர்!
 
பள்ளிக் கல்வித்துறையில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர் விருதும்’, பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு கனவு ஆசிரியர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஆசிரியர் சூரியகுமாருக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பரிசு வழங்கினார். விருது மூலம் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் இலக்கண நூல்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சூரியகுமார்.

* ஓமியோபதி மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை!

மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் இயங்கும் தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: பேச்சுலர் ஆஃப் ஹோமியோபதி மெடிசின் அண்ட் சர்ஜரி (பி.எச்.எம்.எஸ்.) - 5,6 ஆண்டுகள்

கல்வித் தகுதிகள்: ‘நீட்’தேர்வில் தேர்ச்சி மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: ‘நீட்’தகுதி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை விரைவு தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.7.2018 (மாலை 4 மணி வரை)

மேலும் விவரங்களுக்கு: www.nih.nic.in

* காசநோய் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களுக்கு ஆன்லைன் படிப்பு!

காசநோய் சிகிச்சை தொடர்பான சான்றிதழ் படிப்பை டாக்டர்களுக்கு ஆன்லைனில் அளிக்க ஐ.ஐ.டி. ஏற்பாடு செய்துள்ளது. தேசிய தொழில்நுட்ப கற்றல் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து டாக்டர்களுக்கு காசநோய் சிகிச்சை தொடர்பான ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எட்டு வார காலம் கொண்ட இந்தப் படிப்பானது, காசநோய் சிகிச்சை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், தொற்றுநோயியல், நோயைக் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவை இடம்பெறும். இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும். குறிப்பிட்ட ஒரு நோய்க்கான சிகிச்சை தொடர்பாக இதுபோன்று ஆன்லைனில் படிப்பு வழங்குவது இதுவே முதல்முறை. காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு இந்தப் படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு மேலும் அதிக கவனத்தோடு சிகிச்சை அளிக்கவும் உதவி கரமாக அமையும். கூடுதல் விவரங்களை onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

* சென்னைப் பல்கலையில் பட்டயப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில், முதுநிலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
துறைகள்: தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், உருது, ஸ்பானிஷ், பிரஞ்ச், ஜெர்மன், அரபிக், கவுன்சிலிங் சைக்காலஜி, யோகா தெரபி, பேங்கிங் அண்ட் ஃபினான்ஸ், டிஜிட்டல் லைப்ரரி மேனேஜ்மென்ட், டிராவல் அண்ட் டூரிசம் மேனேஜ்மென்ட், சைபர் கிரைம் அண்ட் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, டிவி நியூஸ் ரீடிங், வெப்பேஜ் டிசைன், பியூட்டி தெரபி மற்றும் பல.

கல்வித் தகுதிகள்: பட்டயப் படிப்பிற்கு தேர்வு செய்யும் துறைக்கு ஏற்ப, 10ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டயப் படிப்பிற்கு துறை சார்ந்த இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சான்றிதழ் படிப்பிற்கு, தேர்வு செய்யும் பாடப்பிரிவிற்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும்.

சேர்க்கை முறை: இணைய வழியாகவோ அல்லது நேரடியாகவோ மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.7.2018