தொடர்ந்து மிளிரட்டும்!



இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தபட்டுள்ள ஆன்லைன் எஞ்சினியரிங் கவுன்சிலிங்கை முதன்முறையாக எதிர்கொள்ளப் போகும் கிராமப்புற மாணவர்களுக்கு பதற்றத்தை போக்கும் விதமாக இருந்தது எஞ்சினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் பற்றிய கட்டுரை. கவுன்சிலிங் மையங்கள், அவை செயல்படும் முறை, குறிப்பிட்ட தேதிக்குள் மாணவர்கள் தங்களை எப்படி தயார்செய்துகொள்வது, என்னென்ன சான்றிதழ்கள் தேவை என ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து ஆதி முதல் அந்தம் வரை விளக்கி மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டலாக அமைந்தது பாராட்டுக்குரியது.
- எஸ்.அருண்குமார், வால்பாறை.
காட்டைத் தவிர வேறெதுவும் தெரியாத பழங்குடி மக்களுக்கு கல்வி அறிவை சுவைக்க வைத்த திருஒளி அறக்கட்டளையின் பணி மகத்தானது. அடிப்படை உரிமைகூட மறுக்கப்படும் அம்மக்களின் அறியாமையை விரட்டி, கல்வியின் சிறப்பை போதித்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய திருஒளியின் பிரபுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
- தி. பாரதி, கோவை.
 
கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்கள், உண்மையில் மாணவ சமூகத்திற்கு உகந்ததுதானா என்பதை பல்வேறு கல்வியாளர்களின் பார்வையில் அலசும் சர்ச்சை பகுதி கட்டுரைகளின் முக்கியத்துவம் அளப்பரியது. அவ்வகையில் +2 மொழிப்பாட வினாத்தாள் குறைப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு கண்துடைப்பா?, மாணவர்கள் மனதில் கலந்த வன்முறை போன்ற கட்டுரைகள் இன்றைய தலைமுறை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியவை. இதுபோன்ற நேர்த்தியான கட்டுரைகளால் தொடர்ந்து மிளிரட்டும் கல்வி - வேலை வழிகாட்டி .
- செ. ரகுநாத், போடிநாயக்கனூர்.
 
கல்வி கடன் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இன்றும் பல மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கல்வி கடனுக்கான விதிமுறைகள், வட்டி விகிதம், கடன் உத்தரவாதம், வருமான வரி சலுகை, காப்பீடு, கடனை திருப்பி செலுத்துவதற்கான முறைகள் என கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகளை ஆதி முதல் அந்தம் வரை விளக்கியுள்ளது பாராட்டுக்குரியது.
- ஜே.சுதா, விருதுநகர்.