செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை!

சண்டிகரில் செயல்படும் ‘போஸ்ட் கிராட்ஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எஜூகேஷன் அண்டு ரிசர்ச்’, கல்வி நிறுவனத்தில் நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிப்புகள்: பி.எஸ்சி.- நர்சிங் (4 ஆண்டுகள்) மற்றும் பி.எஸ்சி.-நர்சிங் (போஸ்ட் பேசிக் - 2 ஆண்டுகள்)கல்வித் தகுதி: 4 ஆண்டு நர்சிங் படிப்பில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 2 ஆண்டு நர்சிங்(போஸ்ட் பேசிக்) படிப்பிற்கு பள்ளிப் படிப்புடன், ஜெனரல் நர்சிங் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பி.எஸ்சி.-நர்சிங் - 25 வயதிற்குள் இருத்தல் அவசியம். பி.எஸ்சி.-நர்சிங் (போஸ்ட் பேசிக்) - 45 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும். ஆங்கில வழியில் 100 மதிப்பெண்களுக்கு ‘அப்ஜெக்டிவ்‘ அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தகுதி பெற்ற மாணவர்கள் கலந்தாய்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் சேர்க்கை பெறுவர்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 8.7.2018
தேர்வு நாள்: 12.8.2018
மேலும் விவரங்களுக்கு: http://pgimeradmissions.net.in

IGNUO -தொலைதூரக்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை!

மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ(இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்) பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வித் திட்டத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை, இளங்கலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

பிளஸ் 2 முடிக்காத, 18 வயது நிரம்பியவர்கள் பட்டப்படிப்பில் சேர வகை செய்யும் 6 மாத கால இளங்கலை முன்தயாரிப்பு படிப்பும், சிஏ, ஏசிஎஸ், ஐசிடபிள்யூஏ படித்துக்கொண்டிருப்பவர்களுக்காக சிறப்பு பி.காம். படிப்பும் வழங்கப்படுகிறது.
இளங்கலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எவ்வித கல்விக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

2018-ம் ஆண்டின் ஜூலை பருவ மாணவர் சேர்க்கையின்கீழ் மேற்குறிப்பிட்ட படிப்புகளில் ஜூலை 15-ம் தேதி வரை சேரலாம். ஆன்லைன் (www.ignou.ac.in) மூலமாகவும் மாணவர் சேர்க்கை செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கிவரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவை அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம்.

ஆனால், ஒருசில பல்கலைக்கழகங்கள் நிதி மற்றும் நேரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பட்டமளிப்பு விழாவை தவிர்த்துவிடுவதாக தெரிகிறது.இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும், ஆண்டுதோறும் தவறாமல் பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டுமென மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதுபற்றி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது “பட்டமளிப்பு விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும். இது பட்டதாரி மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்குப் பெருமை சேர்க்கக்கூடிய தருணமும் கூட”என்று தெரிவித்துள்ளார்.  

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி!

கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து முதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

அந்தப் பாடங்களை நடத்துவதற்கான வழிமுறைகளையும் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் புரிந்துகொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை முதல் வாரத்தில் இந்தப் பயிற்சி தொடங்க உள்ளது. 1, 6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் நடத்த உள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். பகுதிவாரியாகவும், மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமும் இந்தப் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.