மாணவர் மனங்களை வென்ற ஆசிரியர்!புதுமை

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களால் பள்ளி விட்டு பள்ளி பணி மாறுதல் செய்யப்படுகின்றனர். ஒருசிலர் தாங்களே மாறுதல் கேட்டு செல்கின்றனர். இது சாதாரண நிகழ்வாகவே இருந்துவந்தது. ஆனால், ஆங்கில ஆசிரியர் ஒருவரின் பணி மாறுதல் ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப்பார்க்கச் செய்துவிட்டது என்பது நிச்சயம் அனைவரின் கவனத்துக்குரியது.

கடந்த காலங்களில் எந்த ஆசிரியரையும் வேறு பள்ளிக்குப் போகவேண்டாம் என்று குழந்தைகள் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுததாகத் தெரியவில்லை. தவறு செய்யும் சில ஆசிரியர்களையும் ஒழுங்காகக் கற்றுக்கொடுக்காத ஆசிரியரையும் வேறு பள்ளிக்கு மாற்றுங்கள் என்று சில நேரங்களில் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துப் போராடுவதைப் பார்த்துள்ளோம்.

ஆனால், ஆசிரியர் பகவானை மாற்றக்கூடாது என்று பெற்றோர்களும் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தது நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆசிரியரின் பணி மாறுதலே ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மனதை வென்ற ஆசிரியர் பகவானை நாம் சந்தித்துப் பேசியபோது அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டவற்றைப் பார்ப்போம்…

‘‘பொதுவாக ஆசிரியர் என்ற பிம்பம் பார்த்தோமானால் மாணவர்கள் மத்தியில் அதிகாரத்தன்மையோடு இருப்பவர் என நினைக்கின்றனர். நடைமுறையில் அதிகாரத்தன்மையோடு இருக்கக்கூடாது. எப்படி இருக்க வேண்டுமென்றால், மாணவர்கள் ஆசிரியர் இடையேயான தொடர்பு அவர்களுடைய கற்றல் கற்பித்தல் சார்ந்து நெருக்கமாக இருப்பதில் தப்பில்லை.

அதாவது, கற்றல் கற்பித்தல் சார்ந்து ஓர் அன்போடு பாசம் கலந்த கற்பித்தல் இருக்கும்போது நாம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள். உதாரணமாக, வீட்டில் அப்பாவோ அம்மாவோ செல்லமாக, பாசமாக ஒரு வேலை சொல்லும்போது அவன் செய்வான். கண்டிப்போடு ‘கடைக்குப் போய்ட்டு வாடா!’ என்று சொல்வதற்கும், செல்லமா ‘கடைக்குப் போய்ட்டு வாடா!’ன்னு பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதல்லவா… அதுபோலத்தான். நமக்கு பிடித்த சார்… நம்மேல் அன்பு வைத்திருக்கிற சார் சொன்னா செய்யணும் அப்படின்னு செய்கிறார்கள்.

மாணவனுக்கும் ஆசிரியருக்கும் ஓர் இணக்கம் இருக்க வேண்டும். ஒரு புரிதல், அவனுடைய குரலுக்கு நாம் செவிமடுக்கக்கூடிய வகையில் இருக்கும்போது நம்முடைய குரலுக்கு அவன் செவிமடுப்பான் என்கிற நிச்சயமான ஒரு செயல் இருக்கு’’ என்று கூறும் பகவான் தன்னடக்கத்தோடு மேலும் பல கருத்துகளை திறந்த மனதோடு வெளிப்படுத்தினார்.

‘‘என்னைப் பெருமையாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக எதுவுமில்லை. இது எல்லா இடங்களிலும் பரவலாக நடக்கக் கூடிய விஷயம்தான். என்மேல் வெளிச்சம் பட்டுள்ளது. ஆனால், இன்னும் வெளிச்சம் படாமல் எத்தனையோ ஆசிரியர்கள் என்னைப்போல் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் சாரை எடுத்துக்கொண்டோமானால் என்னைவிட சிறப்பாக செய்யக்கூடியவராக இருக்கிறார். அவரையெல்லாம் நான் ரோல்மாடலாகப் பார்்த்திருக்கிறேன். அவரையெல்லாம் பார்த்து நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். அவர் மாணவர்களோடு மாணவராக உட்கார்ந்திருப்பார், நானும் அதுபோல் மாணவர்
களோடு மாணவனாய் உட்கார்ந்திருக்கிறேன், சாப்பிட்டிருக்கிறேன்.

இவர் நம்மோடு அன்பாகப் பழகுகிறாரே, இவர் மட்டும் புதுசா இருக்கிறாரே என்பது போன்றவற்றால் மாணவர்களால் கவரப்பட்டேன். என் மீது பாசம் வைத்தார்கள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள். கிளாஸில் எல்லாருமே சூப்பராக படிப்பார்கள் என்று சொல்ல முடியாது அங்கேயும் கடைநிலை மாணவன் இருக்கிறான்.

ஆனால், அவனுடைய குரலுக்கும் நான் செவிமடுக்கிறேன், ஆறுதல் கூறுகிறேன், அவன் மனசு துவண்டுபோய் இருக்கும்போது, மதிப்பெண் குறைந்துபோய் இருக்கும்போது அவனுக்கு ஆறுதல் சொல்லி உறுதுணையாக இருக்கிறேன். ‘இந்த முறை இல்லைன்னா அடுத்தமுறை பார்ப்போம்’ எனச் சொல்கிறேன். அவன் துவளக்கூடாது, வாய்ப்புகள் இன்னும் நிறைய இருக்கு என்று சொல்லி அவனது கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு எடுக்கிறேன்’’ என்கிறார் நெகிழ்ச்சியோடு.

‘‘ஆசிரியர் பெற்றோர் மாணவன் என்கிற முக்கோண வடிவத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது கல்வி என்னும் இயக்கம். அப்படிதான் பெற்றோர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பள்ளியில் நாம் மாணவனை அணுகுகிறோம், பெற்றோர்களை அணுகும் வாய்ப்பு இல்லை. முடிந்தவரையில் நான் என்ன செய்வேன் என்றால் தொலைபேசியில் அழைப்பேன்.

பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டு கொடுப்பார்கள் அல்லவா அப்போது தலைமையாசிரியர் மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, ‘வீட்டில் கொடுத்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிட்டுவா!’ என்பார். அவர்கள் வாங்கிட்டு வரணும்.

நான் அதை என்ன செய்வேன் என்றால், இந்த ஒரு வாய்ப்பை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது அப்படீன்னுட்டு மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து கலந்துரையாடுவேன். நல்லா படிக்கிற மாணவனை பாராட்டும்போது பெற்றோருக்கு ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்ற குறளுக்கேற்ப அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.

சராசரி மாணவனைக்கூட சூப்பராக படிக்கிறான் என்று சொல்லும்போது, ஓர் ஆசான் புகழும் வார்த்தை வருகிறதே என அவர்கள் மெய்சிலிர்க்கிறார்கள். இதன் மூலம் பெற்றோர்களுடன் இணக்கமாக மிக நெருக்கமாகும் வாய்ப்பு கிடைத்தது. என்னை அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக பார்த்தார்கள். இன்னொரு பிளஸ்பாயின்ட் என்று சொல்லப்போனால், எனக்கு வயது 28தான் ஆகிறது.

பெற்றோருக்கு ஒரு மூத்த மகன் வயதில் நான் இருக்கேன். அந்த மாணவனின் அண்ணன் வயதில் நான் இருக்கேன். அது ஒரு பிளஸ்பாயின்ட் என்றுகூட நான் நினைக்கிறேன். என்னைப் பார்த்து எந்த மாணவரும் பயப்படமாட்டார்கள். ஒருசில சமயம் கண்டிப்பாக நடந்துகொண்டால்கூட பயம் என்ற உணர்வை அவர்களிடமிருந்து நான் பார்த்ததில்லை இதுவரையில்.

என்னுடைய பணி அனுபவம் நான்கு ஆண்டுகள்கூட முடியவில்லை. இந்த நான்கு ஆண்டுகளில் பெரிதாக ஒண்ணும் தெரிந்துகொள்ளவில்லை, இன்னும் 30 ஆண்டு சர்வீஸ் இருக்கிறது. இன்னும் நிறைய விஷயங்களை நான் பார்க்க வேண்டும்.

இந்த நான்கு ஆண்டுகளில் பெரிதாக நான் ஒண்ணும் செய்துவிடவில்லை. ஆனாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக நான் என்ன செய்யவேண்டும், அடுத்து என்னுடைய செயல்பாடு எப்படியிருக்க வேண்டும் என பயம்கலந்த ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்று தன் மனநிலையை வெளிப்படுத்தினார் ஆசிரியர் பகவான்.

- தோ.திருத்துவராஜ்