செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

கேந்திரிய வித்யாலயா மாணவர்களுக்கு விமானப் பயண வாய்ப்பு!

பொது அறிவு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள், விமானத்தில் பயணம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதிலும் நடைபெறும் விளையாட்டு, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் இதுவரை ரயில்களில் பயணம் செய்துவந்தனர்.

இந்நிலையில், இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் இனி விமானத்தில் பயணம் செய்வதற்கான அனுமதியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்ததுள்ளது. அதே சமயத்தில், இந்த விமானப் பயணத்துக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விமானப் பயணத்துக்காக, தேசிய அளவில் ஓர் இணையதளமும் உருவாக்கப்பட்டு அதில் அனைத்து வகை விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பம் வினியோகம்!

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம். மேலும், www.tnhealth.org என்ற, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்காக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 18ம் தேதிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு!

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுச்சேரியில் உள்ள 150 இடங்களுக்கும், காரைக்கால் கிளையில் உள்ள 50 இடங்களுக்கும் நுழைவுத்தேர்வு கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் 54 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்தத் தேர்வை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 மாணவர்கள் எழுதினார்கள். மேலும் புதுச்சேரியில் உள்ள 7 மையங்களில் 1,925 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு ஜூன் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், அகில இந்திய பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, புதுவை நிர்வாக பிரிவு கட்டடத்தில் வரும் 26ஆம் தேதி காலை 8 மணிக்குக் கலந்தாய்வு தொடங்குகிறது. மேலும் அகில இந்திய ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 27ஆம் தேதியும், புதுவை பொதுப்பிரிவு ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ. அல்லது ஓ.சி.ஐ. மாணவர்களுக்கு 28ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இளந்தமிழ் ஆய்வாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ‘இளந்தமிழ் ஆய்வாளர் விருது’ அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற 50 ஆராய்ச்சியாளர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதை பெற தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்ற 45 வயதுக்குட்பட்ட ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்கள். இந்த விருதை பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் தகுதி குறிப்புகளை www.tamiluniversity.ac.in எனும் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ‘துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613010’, என்ற முகவரிக்கு ஜூன் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிட வேண்டும்.