செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்துக்குத் தடை

தமிழகத்தில் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில், மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஜாதி, மத மற்றும் இன ரீதியான போராட்டங்களை அவ்வப்போது நடத்துகின்றனர். இதனால் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதுடன், சமூக நல்லிணக்கம் கெடுவதாக உயர்கல்வித்துறைக்குக் கடிதங்கள் வந்துள்ளன.

சில தினங்களுக்கு முன் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதில் சென்னைப் பல்கலையில், ஒரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கும்படி, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, பல்கலைகள், கல்லுாரி வளாகங்களில் தர்ணா, ஆர்ப்பாட்டம்,போராட்டம் போன்ற போராட்டங்களுக்கான தடை, நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாகப் பல்கலை வளாகங்களில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

கரும்பலகையில் எழுத்தின் அளவுக் கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களின்  உடல் நலனை கருத்தில் கொண்டு  அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவுரைப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த சுற்றறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதும்போது எழுத்தின் அளவு 3 முதல் 4 செ.மீ. அளவில் அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம்.அவ்வாறு இருந்தால் குழந்தைகள் வகுப்பறையின் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அவர்களின் பார்வை சார்ந்த சிரமங்களைக் குறைக்கும். மேலும் கரும்பலகையின் ஓரங்களில் எழுத்து அளவு குறியீடு (ஸ்டென்சில் மார்க்கிங்) அமைத்துக்கொண்டு எழுதுவது, ஆசிரியர்கள்  தொடர்ந்து ஒரே அளவில் எழுத உதவியாக இருக்கும்.

* கண் சார்ந்த பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு உள்ள குழந்தகளை வகுப்பில் முதல் வரிசையில் அமர வைக்க வேண்டும். வகுப்பறையில் எப்போதும் ஒரே சீரான வெளிச்சம் இருக்க வேண்டும். மேலும் கரும்பலகை ஒளியை பிரதிபலிப்பதாகவும், பார்க்க சிரமமூட்டுவதாகவும் இருக்கக்கூடாது.

ஐ.ஐ.எஸ்.சி-யில் மாணவர் சேர்க்கை! 
 
பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி.,) கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கல்வித்தகுதிகள்: 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஜே.இ.இ. மெயின், ஜே.இ.இ அட்வான்ஸ், நீட் ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.
சேர்க்கை முறை: ஐ.ஐ.எஸ்.சி., கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கென தனி நுழைவுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படுவதில்லை. அரசுத் தகுதித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இந்த நிறுவனத்தில் அட்மிஷன் வழங்கப்படுகிறது. தகுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்குள் அந்த மதிப்பெண்களை, மாணவர்கள் அவர்களது விண்ணப்பத்தில் ‘அப்டேட்’செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2018
மேலும் விவரங்களுக்கு: https://iisc.ac.in

+1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும்!

இந்தக் கல்வியாண்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாத சூழல் உள்ளது. இதனால் இவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.

அதாவது, நடப்பு கல்வியாண்டு முதல் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு முன்கூட்டியே அறிவித்தது. ஆனால், இதற்கான ஏற்பாடுகளில் திறமையாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை. மாணவர்களை எவ்வாறு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற எந்த வழிகாட்டுதலும் ஆசிரி யர்களுக்கு வழங்கப்படவில்லை. கேள்வித்தாள் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரி வடிவம் முன்கூட்டியே வழங்கப்படவில்லை. மிகவும் காலதாமதாகவே கேள்வித்தாள் மாதிரி வழங்கினார்கள்.

இதனைப் பயன்படுத்தி மாணவர்களை புதிய தேர்வு முறைக்கு தயார் செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இதனால், தற்போது +1 மாணவர்கள் பெரும் சிரமத்துடன் தேர்வை சந்தித்துள்ளார்கள். எனவே, மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ள தமிழக அரசு, +1 மாணவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.