செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு!
 
தமிழகப் பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு மார்ச் மாதத்தில், பொதுத்தேர்வு தொடங்குகிறது, ஏப்ரலில் தேர்வு முடிகிறது.தேர்வுக்கான முன் தயாரிப்புப் பணிகளில், அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பணியில், ஆசிரியர்கள் மும்முரமாக உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலை, மாலையில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் பிளஸ்2-க்கு முதலாம் திருப்புதல் தேர்வும், மாநில அளவில் நடந்துவருகிறது.

இந்நிலையில் அனைத்து அரசுப் பள்ளிகளும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு தினசரி சிறப்புப் பயிற்சியுடன், காலை அல்லது மாலை நேரங்களில் மாதிரித் தேர்வுகளையும் நடத்த வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தினசரி தேர்வு நடத்தி, அன்றே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை அறிவிக்க வேண்டும். எந்தப் பாடத்தில் மாணவர்கள் திறன் குறைந்து உள்ளனரோ அதில் கூடுதல் முயற்சியெடுத்து படிக்க மாணவர்களையும், பெற்றோரையும் அறிவுறுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அரசுப் பள்ளிகளுக்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள்!

அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கத் திட்டம். அதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றில், ‘2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாகக் கிராமப்புறங்களில் 3,000 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கத் தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டேப்லட் , கணினி, இணையதள இணைப்பு வசதிகள் இருக்கும்.

ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும். ‘இன்டர்நெட்’ இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவை உடையதாக இருக்கும். ஸ்மார்ட் வகுப்பறையைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்
களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்‘ என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் பி.எட். மாணவர் சேர்க்கை! 

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில் பி.எட். படிப்பை வழங்கிவருகிறது. இதில் தமிழ்வழிப் படிப்புக்கு 500 இடங்களும், ஆங்கில வழிக்கு 500 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர் பயிற்சியுடன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுவோர் இந்த 2 ஆண்டு கால தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேரலாம். (தற்போது ரெகுலர் பி.எட். படிப்புக்கான காலமும் 2 ஆண்டுகள் ஆகும்).

கடந்த ஆண்டு வரை தொலைதூரக் கல்வியில் பி.எட். படிப்புக்கு நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டுவந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதில் பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க அப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும், முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் (இளங்கலைப் பட்டப்படிப்பை அடிப்படைக் கல்வித் தகுதியாகக் கொண்ட பி.எட். படிப்பு) கூடுதலாக 3 மதிப்பெண், எம்.பில் பட்டதாரியாக இருந்தால் 5 மதிப்பெண், பிஎச்.டி முடித்திருந்தால் 6 மதிப்பெண் வழங்கப்படும். மேலும் பிஎட் படிப்பில் சேர விரும்புவோர் பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிட்சாட்-2018 நுழைவுத் தேர்வு அறிவிப்பு!

பிலானி, கோவா மற்றும் ஐதராபாத் நகரங்களில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான, ‘பிட்சாட்- 2018‘ எனும் நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்பி.இ.,- கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்.

எம்.எஸ்சி.,- பயோலஜிக்கல் சயின்சஸ், கெமிஸ்ட்ரி, எக்னாமிக்ஸ், மேதெமெடிக்ஸ், பிசிக்ஸ் மற்றும் ஜெனரல் ஸ்டடீஸ்.
மேலே குறிப்பிட்டுள்ள பொறியியல், அறிவியல் பாடத்திட்டங்களோடு பி.பார்ம். பட்டப்படிப்புக்கும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.3.2018
மேலும் விவரங்களுக்கு: http://bitsadmission.com