காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரமங்கை நிவேதா!



சாதனை 8

பெண்கள் தைரியத்தோடு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதைச் சத்தமாகச் சொன்ன திரைப்படம்  தங்கல் (யுத்தம்). பல மொழிகளிலும் வெளியாகி பெண்களுக்கு மரியாதையைப் பெற்றுத்தந்த படம்.

அமீர்கான் ஒரு சிறந்த மல்யுத்த வீரர். இந்தியாவுக்காக மல்யுத்தத்தில் தங்கப் பதக்கத்தை வாங்கித்தர விரும்பும் அவரின் ஆசை கடைசிவரை நிறைவேறாமல் போக, தனக்குப் பிறக்கும் மகன் மூலம் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறார்.

ஆனால், அவருக்குத் தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறக்கின்றன. ஒரு கட்டத்தில் ஆண் மகன் மட்டுமல்ல பெண் மகளாலும் தன் ஆசையை நிறைவேற்றமுடியும் என்பதைப் புரிந்து மல்யுத்த விளையாட்டுப் பயிற்சி அளிக்கிறார். மூத்தமகள் இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வென்று தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றுகின்றார்.

இது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நடந்துள்ளது. தன் ஆசையைத் தன் மகள் மூலம் நிறைவேற்றியிருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த எஞ்சினியர் வெங்கடேஸ்வரன். இவரது மகள் நிவேதா தன் தந்தையிடம் பயிற்சி பெற்று காமன்வெல்த் போட்டியில் 8 தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

தங்கமங்கை நிவேதா குறித்து அவரது தந்தை வெங்கடேஸ்வரன் பெருமிதத்தோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, ‘‘சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் கிராமம்தான் எனது சொந்த ஊர். இளம்வயதில் எங்கள் ஊரைச்சுற்றிலும் பல்வேறு இடங்களில் வலுதூக்கும் போட்டி நடைபெறும். அதில் கலந்துகொள்ள எனக்கு ஆசையாக இருக்கும்.

ஆனால், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள எனது பெற்றோர் அனுமதிக்கவே இல்லை. அப்பா மாரியப்பன், அம்மா சிவகாமி இருவருமே ஆசிரியர்கள் என்பதால், நான் நன்றாகப் படித்து ஒரு வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள். எப்போதும் என்னை படி படி என்றுதான் சொல்வார்களே தவிர, வீட்டைவிட்டு வெளியே விளையாட அனுமதிக்கவில்லை.

ஆனால், எனது 18 வயதில் உடலை வலுவாக்க ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அதில், வலுதூக்கும் விளையாட்டு எனக்குப் பிடித்திருந்தது. அதற்கான பயிற்சியில் ஈடு பட்டேன். இன்றுவரை வலுதூக்கும் பயிற்சி செய்து வருகிறேன்” என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.மேலும் அவர், “ஒவ்வொரு இடத்திலும் போட்டி நடக்கும்போது எங்கள் ஜிம் சார்பில் கலந்துகொள்வார்கள்.

நாமும் கலந்துகொண்டு மாவட்ட, மாநில, தேசிய, உலக அளவில் கலந்துகொண்டு பதக்கம் வாங்க வேண்டும் என்று கனவு காண்பேன். ஆனால், ஒரு மேடையில் கூட என்னை என் பெற்றோர் விளையாட அனுமதித்ததில்லை.

மனதிற்குள்ளேயே ஆசைகளைப் பூட்டிவைத்துக்கொண்டு உடற்பயிற்சி மட்டும் செய்து வந்தேன். சிவில் எஞ்சினியரிங் படித்து முடித்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறேன்.

கடந்த 1998-ல் பரமத்திவேலூரைச் சேர்ந்த சித்ராவுடன் திருமணம் நடந்தது. நான் விரும்பியபடியே 2001-ல் அழகான பெண் குழந்தை நிவேதா பிறந்தாள். அடுத்தும் ஒரு பெண் குழந்தை சோனா லட்சுமி.

எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்தநிலையில் நான் எங்கள் கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்ய செல்லும்போது குழந்தை நிவேதாவும் என்னோடு மோட்டார் சைக்கிளில் வருவாள். உடற்பயிற்சி செய்வதை ஆர்வமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

உடற்பயிற்சிக்கூடத்தில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட்களை எடுத்து  உடற்பயிற்சி செய்துபார்ப்பாள். அவளுக்குள் விளையாட்டில் ஆர்வம் இருப்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. 2009ல் ஒருநாள் ‘அப்பா நானும் வெயிட் தூக்கட்டுமா’ என்றாள்.

அப்போது அவளுக்கு 8 வயது. பெண் பிள்ளையாயிற்றே என சிறிது தயக்கம் இருந்தாலும் ‘சரிம்மா’ என்றேன் சிறிது தயக்கத்துடன். நான் எதிர்பார்க்காத வகையில் உடனடியாக 40 கிலோ டெட்லிஃப்ட் தூக்கிவிட்டாள். என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்.” என்றார்.

“இந்த வலுதூக்கும் போட்டியில் மூன்று வகை இருக்கிறது. ஒன்று டெட்லிஃப்ட், இரண்டு ஸ்குவாடு, மூன்று பெஞ்ச் பிரஷ். இதில் பெஞ்ச் பிரஷில் முதலில் 10 கிலோ தூக்கினாள். எடுத்த எடுப்பிலேயே 10 கிலோ ராடைத் (கம்பி) தூக்கிவிட்டாள். இதைப் பார்த்துதான் என் கனவு நனவாகப் போகிறது என மனதுக்குள் ஓர் இனம்புரியாத உற்சாகம் பிறந்தது. அவளுக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன்.

நான் உடற்பயிற்சி செய்யும் சேலம் பச்சப்பட்டியில் உள்ள வ.உ.சி. ஜிம்மில்தான் தினமும் பயிற்சி கொடுத்து வந்தேன். ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் தெரிந்தது. இந்நிலையில் தாதகாப்பட்டியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் எங்கள் ஜிம் மூலமாக கலந்துகொண்டாள்.

போட்டியில் வென்று முதல் பரிசு வென்றாள். பரிசு வாங்கியதும் இனி நாம் போட்டிகளில் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. 14 வயதுடையவர்களுக்கான போட்டியில் 9 வயது சிறுமி  கலந்துகொண்டு சிறப்பாக 110 கிலோ எடையை தூக்கிவிட்டாள்.

2010ல் சேலத்தில் மீண்டும் ஒரு போட்டி நடந்தது. இதில் கலந்துகொண்ட நிவேதா, ஒரு சீனியர் வலுதூக்கும் வீராங்கனை தூக்கக்கூடிய வெயிட்டான 125 கிலோவை தூக்கினாள். முதல் பரிசும் சான்றிதழும் வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு திறமையை வளர்த்துக் கொண்டே வந்தாள். தமிழ்நாடு வலுதூக்கும் சங்க மாநிலச் செயலாளர் நாகராஜ்தான் எனது மகளை அதிகமாக ஊக்கப்படுத்தி ஒவ்வொரு போட்டியிலும் கலந்துகொள்ள வைத்து இன்றைக்கு இந்த நிலைக்கு உயர வைத்துள்ளார்.” என்று அகம் மகிழ்ந்தார்.

நிவேதா தன் வெற்றிக்கான காரணத்தைக் கூறும்போது, “எனக்கு முழு கைடண்ஸ் எங்க அப்பாதான். எட்டு வயதிலிருந்தே வலு தூக்குவதில் ஊக்கமளித்தவர் எனக்கு 14 வயதானதும் கோயமுத்தூர் எஸ்.என்.எஸ். கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதன்முதலாக முறைப்படி கலந்துகொள்ள வைத்தார். 230 கிலோ தூக்கி முதல் பரிசு பெற்றேன்.

15, 16, 17 வயதுகளில் உடுமலைப்பேட்டையில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் முதல் பரிசு பெற்றேன். மாநில அளவில் முதலிடத்தில் வந்தால்தான் தேசிய அளவுக்குப் போகமுடியும் என்பதற்காகவே தொடர்ந்து பயிற்சி செய்துவந்தேன். 2015ல் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கல்லூரியில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு 3-வது பரிசு பெற்றேன்.

2016ல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு 2-வது பரிசு பெற்றேன். இதில் திரும்பவும் ஒரு போட்டி நடத்தப்படும், அதாவது 2-வது வந்தவருக்கும் 1-வது வந்தவருக்கும் இடையிலான தனித்திறன் போட்டி. இது ஏன் என்றால், ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்வதற்கானது.

இந்தப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்ததையடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வானேன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று 4 தங்கப் பதக்கங்களைப் பெற்றேன்” என்றார்.மேலும் தொடர்ந்த நிவேதா, “மகாராஷ்டிரா மாநிலம் சந்ரபூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு 2-வது இடம்பிடித்தேன். இரண்டரை கிலோவில் முதலிடத்தைத் தவறவிட்டேன்.

அதாவது, 242.5 கிலோ எடை தூக்கினேன். கேரளாவைச் சேர்ந்த வீராங்கனை 245 கிலோ எடை தூக்கி முதல் இடம்பிடித்தார். இந்தப் போட்டியிலும் முதலாவது வந்த கேரள வீராங்கனைக்கும், இரண்டாவது வந்த எனக்கு திரும்பவும் ஒரு தனிப்போட்டி நடத்தப்பட்டது. இதில் முதலிடத்தைப் பிடித்ததையடுத்து காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றேன்.

காமன்வெல்த் போட்டியானது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அங்கு சென்ற எனக்கு நம் பாரம்பரிய உணவு கிடைக்காததால் உடல் எடை குறைந்துபோனது. இந்த நிலையிலும் 210 கிலோ எடை தூக்கி 8 தங்கப்பதக்கங்களை வென்றேன்.

எக்யூப்டு என்ற முறையில் (பவர் லிஃப்ட் உபகரணங்களை உடலில் மாட்டிக்கொண்டு செய்வது)  4 தங்கப்பதக்கமும், அன்எக்யூப்டு (அதாவது பவர் லிஃப்ட் உபகரணங்கள் இல்லாமல்) முறையில் 4 தங்கப்பதங்களையும் வென்றேன். மொத்தம் 8 தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க முடிந்தது.

இதற்காக காமன்வெல்த் போட்டியில் சிறந்த வலுதூக்கும் வீராங்கனை (பெஸ்ட் பவர் லிஃப்டர்) என்ற விருது வழங்கி கவுரவித்தார்கள்” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் நிவேதா.நிவேதாவின் தந்தை கூறும்போது, “முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எனது மகள் நிவேதா ஓர் சிறந்த உதாரணம்.

முழுக்க முழுக்க நானேதான் பயிற்சி கொடுக்கிறேன். அடுத்த மகள் சோனா லட்சுமியும் அக்காவைப் போல் சிறந்த வீராங்கனையாக உருவாகி வருகிறாள். நிவேதா படிக்கும் அதே விநாயகா வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். மாநில அளவில் வலுதூக்கும் இடத்தில் 2ம் இடத்தில் உள்ளார்.

நிவேதா வேர்ல்டு சீனியர் போட்டியில் வென்று இந்தியாவிற்கு அதிக தங்கப்பதக்கங்களை பெற்றுத்தர வேண்டும் என்ற லட்சிய வேட்கையோடு பயிற்சி எடுத்து வருகிறார். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஏனெனில், என்னதான் திறமை இருந்தாலும் வயது குறைவு என்பது ஒரு தடையாக உள்ளது. சீனியர் பிரிவு என்பது 24 வயதுக்கானது. 22 வயதானாலே கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துவிடும். அதுவரையில் பயிற்சியையும் ஊக்கத்தையும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்” என்றார் தன்நம்பிக்கையுடன்

- தோ.திருத்துவராஜ்,

படங்கள் : எஸ்.அந்தோணி