அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

A MLA or An MLA?

அலுவலகத்தில் பணியில் ஆழ்ந்திருந்த ரகுவை நோக்கி வந்த ரவி “இன்னைக்கு செம்ம யூத்ஃபுல்லா இருக்கீங்க சார். என்னங்க சார் எதாவது விசேஷங்களா?” என்றான். ரவியைத் திரும்பிப் பார்த்த ரகு, “No need of apple polishing. What do you want to know?” என்றார். 

ஒன்றும் புரியாமல், “Apple polishing…..? அப்படின்னா என்னங்க சார்?” என்று கேட்டான் ரவி. உடனே ரகு, “Apple polishing என்றால் trying to win a favour through flattery. அதாவது, ஏதாவது காரியம் ஆகணும்னா காக்காய் பிடிக்கிற மாதிரின்னு வச்சுக்கோயேன்” என்றார்.

சட்டென்று முகம் மாறியது ரவிக்கு. அதைக் கவனித்த ரகு, “தமாஷாச் சொன்னேன் ரவி. சீரியஸா நினைச்சுக்காதே. உண்மையைச் சொல்லப்போனா…. நீ கேள்வி கேக்கறது எனக்கு சந்தோஷமான விஷயம்தான்.

சொல்லு… என்ன சந்தேகம்?” என்றார்.சகஜ நிலைக்கு வந்த ரவி, “இல்லைங்க சார். Group TWO examல Choose the correct sentence which has no error: a) Geetha’s father is a MLA, b) Geetha’s father is the MLA, c) Geetha’s father is an MLA, d) Geetha’s father is MLA னு குடுத்து இருக்காங்க. c) Geetha’s father is an MLAதான் சரியான பதில்னு எனக்குப் படுது. ஆனா ஏன்னு தெரியல. அதான்…..” என்ற ரவியைப் பார்த்த ரகு,“கூல் ரவி….let me explain you clearly.

MLA என்பது ஒரு Acronym. அதாவது, Member of Legislative Assembly என்ற ப்ரேஸ்(phrase) உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துகள் கூடி ‘எமெலே’ என்ற ஒரு வார்த்தையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, முதலெழுத்து ‘ம்’ என்ற மெய்யெழுத்தாக இருந்தபோதிலும் உச்சரிப்பு ‘எ’ என்ற உயிரெழுத்தில் (vowel)  தொடங்குவதால் அங்கு ‘an’ என்ற articleதான் வரும். அதேசமயம் தனித்தனி வார்த்தைகளாக இருந்தால்…. a Member of Legislative Assembly என்றுதான் வரும்” என்று விளக்கினார்.

“ஓஹோ… இந்த மாதிரி வேற ஏதாவது வார்த்தைகள் கூட உண்டுங்களா சார்?” என்றவனிடம், “ஏன் இல்லாம?....an HMT watch, an SSLC pupil, An M.A. degree, An MP….இப்படி இன்னும் நிறைய இருக்கு. அதையெல்லாம் பட்டியல் போட்டு பிறகு சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கினார் ரகு.         

சேலம் ப.சுந்தர்ராஜ்