இண்டக்‌ஷன் புரோகிராமை தவறவிடாதீர்கள் மாணவர்களே!



இன்று வெளிநாடு சென்று படிப்பது எல்லோருக்கும் சாத்தியமாகிவிட்டது என்பதையும், வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும், எந்தெந்த நாடுகளெல்லாம் நம் மாணவர்கள் சென்று உயர்கல்வி பயில்வதற்கு தகுந்தவை என பல்வேறு தகவல்களை கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேற்பட்ட கல்வி-வேலை வழிகாட்டி இதழில் எழுதிவந்தேன்.

இதேபோல் வேறு எங்கும் வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்புகளையும், அங்குள்ள வசதிகளையும் மாணவர்கள் படித்திருக்க முடியாது என்பதே எனது எண்ணம். இறுதியாக வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அதிமுக்கியமான அடிப்படையான தகவல்களோடு என் தொடரை இனிதே முடித்துக்கொள்கிறேன்.

மாணவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல முடிவெடுத்து அனைத்து சான்றிதழ்களையும் பரிசோதித்த பின் நேர்முகத்தேர்விற்கு அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத்தேர்வு முடிந்த உடனே விசாவானது கையில் கிடைத்துவிடும்.

விசாவை கையில் பெற்றவுடன்தான் மாணவர்களுக்கு அதிக வேலை உள்ளது. விசாவை கையில் வாங்கியவுடன், எத்தனை மணிக்கு ஃப்ளைட்? டிராவலிங் டைம், லேண்ட்டாகும் நேரம் என தங்கள் பயணம் குறித்த அனைத்து தகவல்களையும், தான் படிக்கப்போகும் யுனிவர்சிட்டிக்கு கண்டிப்பாக  மெயில் அனுப்ப வேண்டும்.

இந்த மெயிலின் அடிப்படையில் தான் நீங்கள் எப்போது வருவீர்கள் என யூகித்து யுனிவர்சிட்டியில் நீங்கள் யாரைச் சந்திக்க வேண்டும், உங்களுக்கான இடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.

மாணவர்கள் தான் படிக்கச் செல்லும் நாட்டின் எந்த ஏர்போட்டில் இறங்குவார்கள்? அங்கிருந்து யுனிவர்சிட்டிக்கு எவ்வளவு தூரம்? ஏர்போர்ட்டிற்கு அருகில் உள்ள போக்குவரத்து வசதிகள்? பஸ், டிரெயின் என எந்தப் போக்குவரத்தில் யுனிவர்சிட்டிக்குச் செல்லலாம்?  தான் படிக்கப் போகும் யுனிவர்சிட்டியைக் கண்டடைந்தவுடன்  முதலில் யாரை சந்திக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு மாணவர்களுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் தாங்கள் இங்கிருந்து கிளம்பும்போதே இந்திய பணத்தை எந்த நாட்டுக்குச் செல்கிறோமோ அந்நாட்டு பணமாக மாற்றியிருக்க வேண்டும்.
அப்படி மாற்றவில்லை என்றால் போக்கு வரத்திற்கு உபயோகப்படுத்தப்படும் டிராவலிங் கார்டில் அந்நாட்டு பணத்தைச் செலுத்த வேண்டும். போக்குவரத்திற்கு பயன்படும் டிராவல் கார்டானது இந்தியாவிலிருந்து கிளம்பும்போது ஏர்போர்ட்டில் கொடுக்கப்படும் அல்லது அந்நாட்டில் இறங்கியவுடன் ஏர்போர்ட்டில் டிராவல் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த டிராவல் கார்டானது லோக்கல் போன் எண்கள், ஹெல்ப் லைன், முக்கியமான இடங்கள் என ஒரு வழிகாட்டி போல் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். மாணவர்கள் செல்ல நினைக்கும் நாட்டில் இறங்கிய உடனே போக்குவரத்திற்கு இந்த டிராவலிங் கார்டை உபயோகிக்கலாம். மேலும், எங்கு தங்கப் போகிறோம்? சாப்பிடுவது எங்கு? என முன்கூட்டியே சிந்தித்து அதற்குத் தயாராக இருத்தல் அவசியம்.

மேற்சொன்ன அனைத்து தகவல்களையும் தெளிவுபடுத்திக்கொண்டு மாணவர்கள் யுனிவர்சிட்டிக்குச் சென்றவுடன் முதலில் அவர்களுக்கு இண்டக்‌ஷன் புரோகிராம் ஒன்றை யுனிவர்சிட்டி நடத்தும்.

தங்கள் யுனிவர்சிட்டியில் உள்ள துறைகள், யுனிவர்சிட்டியின் விதிகள், ஹாஸ்பிட்டல், கேண்டீன் என கேம்பஸின் முக்கியமான இடங்கள், ஆய்வகங்கள்,  நூலகங்கள், ப்ளேஸ்மென்ட் ஆபிஸ், ஃப்ரீ டைமில் என்னென்ன விஷயங்கள் செய்து முன்னேறலாம், கற்றுக் கொடுக்கும் முறை, மாணவர்களின் உரிமைகள் என்னென்ன, வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவும் இன்டர்நே‌ஷனல் டெஸ்க் என யுனிவர்சிட்டி குறித்த அனைத்து தகவல்களும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும். ஆகவே எந்த காரணத்தாலும் இந்த இண்டக்‌ஷன் புரோகிராமை தவறவிடாதீர்கள்.

மாணவர்கள் விசாவை வாங்கியவுடன் இந்த இண்டக்‌ஷன் புரோகிராம் நடக்கும் நேரத்திற்குள் செல்லவேண்டும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் முக்கியமாக தவிர்க்கக்கூடாத ஒன்று இந்த  இண்டக்‌ஷன் புரோகிராம். மாணவர்கள் இந்த புரோகிராமில் கலந்துகொண்டால் போதும் அந்த யுனிவர்சிட்டி பற்றிய தகவல்கள் மற்றும் தங்கள் துறைக்கான பாடங்கள் என உயர்கல்வி பற்றிய ஒரு தெளிவான பார்வை மாணவர்களுக்கு கிடைத்துவிடும். வெளிநாடு சென்று படித்து சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு மனமார்ந்த
வாழ்த்துகள்!                                               

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்

வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்