செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்!

உதவி செவிலியர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்!   தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இவ்வாண்டு 40 மாணவிகளுக்கான சேர்க்கை  நடைபெறவுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த, பொதுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.  உதவி செவிலியர் பயிற்சிக்கு  (பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்) ரூ.50  செலுத்தி நேரடியாக  விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 16.8.2017 முதல் 31.8.2017 வரை மாலை 4 மணிக்குள்  விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  4.9.2017  அன்று மாலை 4 மணி  வரை  சமர்ப்பிக்கலாம். அதன்பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும்,  விவரங்களுக்கு  044 - 2591 2686 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

பள்ளிகளில் வைக்கப்படவுள்ளது கருத்தறியும் பெட்டி!
  தமிழக அளவில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்பட்டது. பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டங்கள் கடந்த 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது. பாடத்திட்டத்தை மாற்ற, கல்வியாளர்களும், பெற்றோர்களும் அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில், பள்ளி பாடத்திட்ட மாற்றம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. மற்றும் பள்ளி கல்வி இயக்ககத்தில் நிபுணர்களிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இந்தக் கருத்தரங்கைத் தொடர்ந்து, மதுரை, கோவை, சென்னை எனக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

அது மட்டுமல்லாமல் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கருத்தைக் கேட்க கருத்தறியும் பெட்டிகள் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடத்திட்டம் தொடர்பான தங்கள் கருத்துகளைப் பெட்டியில் எழுதிப் போடலாம் என்றும், பெயர் குறிப்பிட விருப்பம் இல்லாவிட்டாலும், பாடத்திட்டம் பற்றி கருத்துகளை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டது. இவற்றை, அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் தொகுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக மாநிலக் கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்னோவேஷன் இனிஷியேட்டிவ் விருது-2017
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) ஆகியவை இணைந்து நடத்தும் ‘9வது இந்தியா இன்னோவேஷன் இனிஷியேடிவ் - 2017’ விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பு: அக்ரிகல்சர், ஆட்டோமொபைல், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், ஃபுட் அண்ட் ஃபுட் டெக்னாலஜி, ஹெல்த்கேர், லைஃப் சயின்ஸ், வாட்டர், நானோ டெக்னாலஜி, ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், ஐ.டி. அண்ட் ஐ.டி.இ.எஸ்., டெக்ஸ்டைல், சேனிடேஷன் மற்றும் டிரான்ஸ்பொடேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் புத்தாக்கத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். தகுதி: இந்திய குடியுரிமை பெற்ற, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், தனியாகவோ அல்லது 5 நபர் கொண்ட குழுவாக இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். ஏ.ஐ.சி.டி.இ-யால் அங்கீகாரம் பெற்ற
கல்லூரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2017
மேலும் விவரங்களுக்கு: www.i3.ciiinnovation.in

கல்லூரி மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!தமிழகத்தில் கலை கல்லூரிகள், பி.எட் கல்லூரிகள், உடற்பயிற்சி கல்லூரிகள் உள்பட மொத்தம் 1,480 கல்லூரிகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தக் கல்லூரிகளுக்கு, கல்லூரி கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் இந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்துள்ள மாணவ - மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அறிவுரை கூற வேண்டும். மாணவ - மாணவிகள் கல்லூரிக்குக் கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும். கல்லூரி களில் இந்த ஆடை கட்டுப்பாடு ஏற்கனவே அமலில் உள்ளது. கல்லூரிக்கு மாணவ - மாணவிகள் சரியான நேரத்தில் வரவேண்டும். தேவையான மற்றும் தவிர்க்க முடியாத விடுமுறையைத் தவிர மற்ற விடுமுறைகளை எடுக்கக்கூடாது’ எனக் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட வாய்ப்பு
அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் மற்றும் மறுவாழ்வு கல்வி நிறுவனம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் கீழ் உள்ளது. இந்நிறுவனம் ‘பெலோஷிப் கோர்ஸ் இன் ரீஹேபிடேஷன் ஆகுபேஷனல் தெரபி’பட்டப்படிப்பில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: அரசு அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஆகுபேஷனல் தெரபி படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.8.2017
மேலும் விவரங்களுக்கு: www.aiipmr.gov.in