அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

கிழி - கிலி - கிளி


ஏதோ வேலையாக வெளியே செல்ல கிளம்பிக்கொண்டிருந்தார் ரகு. அப்போது “கிளிக்கறதுக்கு என்னங்க சார் இங்க்லிஸ்ல?” என்றபடியே வந்த ரவியை விநோதமாக பார்த்தார் ரகு. உடனே, “Come again. என்ன கேட்ட? மறுபடியும் கேளு?” என்றார் ரகு. “பேப்பரை கிளிக்கறதுக்கு ‘டேர்’ன்னு சொல்லணுமா? இல்ல, ‘டியர்’ன்னு சொல்லணுங்களா சார்?” என்று கேட்டான் ரவி. அவனது தமிழ் உச்சரிப்பைக் கேட்ட ரகு தனது காதைப் பொத்திக் கொண்டார். “நீ இன்னும் கொஞ்சம் தமிழ் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கப் பழகவேண்டும்.

இங்க்லிஸைத்தான் கொல்றீங்க சரி. தமிழையுமா? ஆண்டவா…!” என்றார் ரகு.“அப்படியா…?. நானா…? தமிழையா…? சரியாக உச்சரிக்கவில்லையா…?” என்ற நோக்கில் நோக்கினான் ரவி. “ஆமா ரவி. கிளி என்றால் parrot. கிலி என்றால் fear. கிழி என்றால் tear என்று பொருள். அதேமாதிரிதான் வளி என்றால் wind, வலி என்றால் pain, வழி என்றால் path, way என்று பொருள். சற்றே கவனமாக உச்சரி.

‘டேர்’ன்னுதான் சொல்லணும் ரவி. கிழித்தல் எனப்படும் tear (டே(ர்)) மற்றும் கண்ணீர்த் துளி எனப்படும் tear (டிய(ர்) இவையிரண்டையும் ஆங்கிலத்தில் ‘ஹோமனிம்’ (Homonym) என்பர். அதாவது, இரு வார்த்தைகளின் எழுத்துக்கள் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதன் உச்சரிப்பு மற்றும் பொருள் வேறுபடும். ‘Whenever he tears the letter, her eyes start to well with tears’  (வெனவ ஹி டே(ர்)ஸ் த லெட்டர், ஹெர் அய்ஸ் ஸ்டார்ட் டு வ்வெல் வித் டிய(ர்)ஸ்) கடிதத்தை அவன் கிழிக்கும்போதெல்லாம் அவள் கண்கள் கண்ணீரால் குளமாகும்” என்றார் ரகு.

“அப்போ ‘wear and tear’ அப்படிங்கிறத எப்படிங்க சார் உச்சரிக்கிறது? அதோட அர்த்தம் என்னங்க சார்?” என்றபடி வந்து நின்றாள் ப்ரவீணா. குரல் வந்த திசையைப் பார்த்த ரவி, “அதான பார்த்தேன். என்னடா இன்னும் உன்னைக் காணாமேன்னு..?” என நகைச்சுவையுடன் சொன்னான்.

ஒரு மெல்லிய புன்னைகையுடன், “இதில் ‘wear and tear’ என்பதைத் ‘தேய்மானம்’ன்னு சொல்லலாம். வே(ர்) அண்டே(ர்) என்பது ஒரு இடியம். அதாவது, Wear and tear is damage that naturally and inevitably occurs as a result of normal wear or aging. புரிகிறதா?” என்றபடியே இடத்தை விட்டு நகர்ந்தார் ரகு.ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள: englishsundar19gmail.com                                  

சேலம் ப.சுந்தர்ராஜ்