ஐ.ஏ.எஸ். தேர்வில் தடைகளைக் கடந்து சாதித்த தமிழர்!



சாதனை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC) நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் எழுதுகின்றனர். இந்தத் தேர்வைத் தன் தாய்மொழிகளில் எழுதுபவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த ஏழை மாணவர்கள் இத்தேர்வில் சி.பி.எஸ்.சி மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்களோடு மதிப்பெண்களில் போட்டிபோட்டு வெல்ல வேண்டும். 

பொதுவாகத் தாய்மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்குத் தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. இப்படிப் பல கஷ்டங்களையும் கடந்து நான்கைந்து முறை தோல்வி அடைந்து அந்த அனுபவத்தின் மூலம்தான் முறையான வெற்றியை அடையமுடிகிறது. இதனாலோ என்னவோ தாய்மொழியில் தேர்வு எழுதி வென்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இப்படிப் பல கஷ்டங்களைக் கடந்து கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூரைச் சேர்ந்த கூலிவேலை பார்க்கும்  பெற்றோர்களின் மகனும்  அரசுப் பள்ளி மாணவனுமான  மணிகண்டன் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்வழியில் எழுதிச் சாதனை படைத்துள்ளார். அதன் எதிரொலியாக இவரை ஊரே கொண்டாடுகிறது. இவர் சமீபத்தில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டு அகில இந்திய அளவில் 332ம் இடமும் தாய்மொழியில் முதல் இடமும் பெற்றுள்ளார்.  “நான் வெற்றிபெற்றது மகிழ்ச்சிதான். ஏழ்மையை வென்று என்னைப் போல் நான்குபேரை உருவாக்குவதில்தான் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்கிறார் மணிகண்டன்.மேலும் அவர் தன் தொடர் முயற்சியைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

“2004ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து மக்கள் நரகவேதனையில் இருந்தனர். அப்போதைய கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ககன்தீப்சிங்பேடியின் அதிரடி செயல்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்தது. கடலூர் மக்களுக்கு எந்த ரத்த உறவும் இல்லாத அவர் இந்த மக்களுக்காகச் செய்த  பணியைப்  பார்த்துதான் நானும் கலெக்டராகி மக்களுக்கான பணியை மேற்கொள்ளவேண்டும் என முடிவு செய்தேன்.

அப்போதுதான் கலக்டர் ஆவது என் லட்சியமாக ஆனது. அப்போது நான் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், கனவு துளிர்த்த இந்தக் கால கட்டத்தில்தான் எங்கள் வீட்டுச் சூழ்நிலை என் லட்சியத்திற்கு எதிராக இருந்தது. அப்பா செய்துவந்த நிலக்கரிச் சுரங்கத்தின் ஒப்பந்தத் தொழிலும் இல்லாமல்போனது. அம்மா வயல் வேலைக்குச் செல்வார். அந்த வருமானத்தில்தான் எங்கள் வாழ்க்கை நகர்ந்தது. தங்கை பத்தாவது படித்துக்கொண்டிருந்தார். வீட்டுச் செலவுகளை சமாளிக்க விடுமுறை நாட்களில் நானும் அம்மாவுடன் வயல் வேலைக்குப் போவேன்.

பள்ளிப்படிப்பு முடிந்தது. மேற்கொண்டு நான் படிக்க என் தங்கையின் படிப்பை நிறுத்தினார்கள். இந்நிலையில் என் கனவைப்பற்றி என் பெற்றோர்களிடம் கூறினால் வேதனை அடைவார்கள் எனக் கொஞ்சகாலத்திற்குக் கனவைத் தள்ளி வைத்து கோயம்புத்தூர் சென்று பி.பார்ம் சேர்ந்தேன். அடுத்து சென்னையில் எம்.பார்ம் படித்தேன். அதே சமயம், என் கனவை விட்டுவிடவில்லை.” என்று சொல்லும் மணிகண்டன் வறுமைப் பின்னணிதான் இன்றைய என் வெற்றிக்குக் காரணமானது என்கிறார்.

“எம்.பார்ம் படிச்சு முடிச்சுட்டு டிரக் இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்ந்தேன். இதுதான் சரியான நேரம்னு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரானேன்.வேலைக்குப் போன மத்த நேரங்களில் ஐ.ஏ.எஸ் இலவசப் பயிற்சி அளிக்கப்படும் இடங்களுக்குச் சென்று ஐ.ஏ.எஸ் தேர்வை எப்படி எதிர்கொள்வது என கத்துக்கிட்டேன். புத்தகங்களுக்காக சென்னையிலுள்ள பொது லைப்ரரிகளுக்கு அலைந்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் வருமானவரித்துறை அதிகாரி விவேகானந்தனை சந்தித்தேன். 1994ம் ஆண்டு கால்நடை மருத்தும் படித்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி முதன்முதலாக வெற்றி பெற்றவர் அவர். இவரோட உந்துதலால் முதல் சிவில் சர்வீஸ் தேர்வை 2011ம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுதினேன். தோல்விதான் மிஞ்சியது.

அடுத்தடுத்து இரண்டு தேர்வுகளும் தோல்வியில்தான் முடிந்தது. ஆனாலும் கலெக்டராகும் கனவு என்னை துரத்திக்கொண்டேதான் இருந்தது. விடாமல் தேர்வை எழுதினேன். 2014ம் ஆண்டு எழுதிய தேர்வில் இந்தியன் ரயில்வே அக்கவுண்ட்ஸ் சர்வீஸில் வெற்றி பெற்றேன். இருந்தும் நூலிழையில் ஐ.ஏ.எஸ் வெற்றி கிடைக்காதது வருத்தமாக இருந்தது. இந்த நேரத்தில்தான் என் கனவு பற்றி முதன் முதலாக என் பெற்றோர்களிடம் கூறினேன். ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

ஐ.ஏ.எஸ் ஆகும் என் வெற்றியில்தான் எங்கள்  குடும்பத்தின் எதிர்காலமே இருந்தது. அதனால் என் கனவை நனவாக்க தாய்மொழியிலே எழுதிப்பார்ப்போமே என்று முடிவெடுத்தேன். அடுத்தடுத்து ஆறு வருட தீராத உழைப்பினால் இன்றைக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 332ம் இடமும், தாய்மொழி வழியில் முதல் இடமும் பெற்று என் லட்சியத்தை அடைந்துள்ளேன்” என்ற மணிகண்டன் தமிழ்வழியில்  தேர்வெழுதத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டதையும் பெருமிதத்தோடு விவரித்தார்.

“அரசியல், வரலாறு, சமூக அறிவியல் ஆகியவற்றைப் படிக்க அரசுப் பள்ளி புத்தகத்தை படித்து குறிப்பு எடுத்தேன். நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளத் தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களைப் படித்தேன். இந்த ஆறு வருட காலத்தில் என்னைப் போன்று ஐ.ஏ.எஸ். ஆவதைக் கனவாகக் கொண்ட பலரைச் சந்தித்து ஒன்றாக இணைந்து எல்லோரும் எங்களைத் தயார்ப்படுத்தினோம்.

அதிக நிகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் தமிழில் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் அனைவரும் ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஜெராக்ஸ் எடுத்து படித்தோம். தமிழ் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தோம். அப்படி விடாமுயற்சியினால்தான் என்னுடைய  கனவை வெல்ல முடிந்தது.

 மேலும் தாய்மொழியில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதத் துடிக்கும் என்னைப் போன்றவர்களுக்குத் தாய்மொழி வழியில் தேர்வு எழுதுவது குறித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அரசுப் பள்ளி மற்றும் அரசுக் கல்லூரிகளுக்கு முன்னுரிமை அளித்து முதலில் அம்மாணவர்களுக்கு இதுக்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எனது லட்சியம்”என மகிழ்ச்சி ததும்ப முடித்தார் மணிகண்டன்.

- குரு