செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

உதவித்தொகையோடு பி.டெக். படிக்கலாம்!


தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் பி.டெக். பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்து கிறது. நுழைவுத்தேர்வானது வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

கல்வித்தகுதி: இதில், கப்பல்படை அகாடமியில் உள்ள 55 இடங்களில் சேர்க்கை பெற இயற்பியல், கணிதப் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ராணுவ அகாடமியில் வழங்கப்படும் 335 இடங்களில் சேர்க்கை பெற பிளஸ் 2 வகுப்பில் ஏதாவது ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த நுழைவுத்தேர்வில் தகுதி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெறும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையுடன் பி.டெக். படிப்பு வழங்கப்படுவதோடு, பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பும் கிடைக்கும். இந்த நுழைவுத்தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.6.2017.

தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட நாடு முழுவதும் 41 மையங்களில் 10.9.2017 அன்று நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2.1.1999 தேதிக்கு முன்பாகவும், 1.1.2002 தேதிக்குப் பின்பாகவும் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. தேர்வுத் தேதிக்கு 3 வாரங்களுக்கு முன்பாக தேர்வறை நுழைவுச் சீட்டு ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

ஐ.டி.ஐ-க்கள் முறையான பள்ளிகளாக மாற்ற மத்திய அரசு திட்டம்!

நாடு முழுவதும், ஆண்டுதோறும், பல லட்சம் பேர், ஐ.டி.ஐ. பயிற்சி முடிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 சான்றிதழ் இல்லாததால், மேற்படிப்புக்குச் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. அதுபோலவே, தொழில் சார்ந்த பயிற்சி மற்றும் கடன்கள் பெறுவதிலும் சிக்கல் இருந்துவருகிறது. எனவே, ஐ.டி.ஐ-க்களை, முறையான பள்ளிகளைப் போல, நாடு தழுவிய அளவில், ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவர,
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அல்லது தனியாக ஏற்படுத்தப்படும் வாரியத்தின் கீழ், ஐ.டி.ஐ.-க்கள் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம், ஐ.டி.ஐ.யில் பயிலும் மாணவர்களுக்குத் தேசிய அளவில் தேர்வு நடத்தப்பட்டு, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2க்கு நிகரான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.ஐ.டி.ஐ.-க்களுக்குரிய பாடத்திட்டத்தை, புதிய வாரியம் உருவாக்கும். இதுபோலவே, தொழிலாளர் நலத்துறை வசம் உள்ள, ஐ.டி.ஐ.-க்கள், இனிமேல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.

ஜூன் 18-ல் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு!

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியப் பணிகளுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் சிவில் சர்வீஸ் தேர்வை நடத்திவருகிறது. இந்தத் தேர்வானது முதல்நிலை, முதன்மை, மற்றும் நேர்
காணல் ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெறும்.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு:http://www.upsc.gov.in

உலகத் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!

ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான அறிவுசார் சொத்துரிமை, ஆராய்ச்சி ஊக்குவிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து, தரவரிசைப் பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுவருகிறது.

அந்த வகையில் 2018 -ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலை இப்போது வெளியிட்டிருக்கிறது. இதில் கடந்த ஆண்டைப் போலவே அமெரிக்காவைச் சேர்ந்த எம்.ஐ.டி. (மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்) முதலிடத்தையும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், ஹார்வார்ட் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இதில் முதல் 200 இடங்களில் 3 இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. தில்லி ஐஐடி 172வது ரேங்க் பெற்று இந்தியக் கல்வி நிறுவனங்களில் முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 179வது இடத்தில் மும்பை ஐஐடி உள்ளது. கடந்த முறை
152 வது இடத்திலிருந்த பெங்களூரு ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் கழகம்) கல்வி நிறுவனம், 190 வது ரேங்க் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதேபோல், கடந்த முறை 249 வது ரேங்க் பெற்றிருந்த சென்னை ஐஐடி இம்முறை 264 வது ரேங்குக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த உலகத் தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதல் முறையாக இடம்பிடித்து அசத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 651 முதல் 700 வரையிலான ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.