ஆராய்ச்சிகளில் அசத்தும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்!



வெளிநாட்டுக் கல்வி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்


சர்வதேச அளவில் இளநிலைப் பட்டம் முதல் பல்வேறு ஆய்வுப் படிப்புகளைக் கொண்டுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் உள்கட்டமைப்பு, கல்வி் போதிக்கும் முறை, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், அடிப்படை வசதிகள் போன்றவற்றைக் கொண்டே தரவரிசைப் பட்டியல்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதுவரை ஐந்து பல்கலைக்கழகங்களைப் பற்றி பார்த்துள்ளோம். அடுத்து ஆறாவது இடத்தில் உள்ள University of New South Wales பல்கலைக்கழகத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (University of New South Wales) ஆஸ்திரேலியாவிலுள்ள மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் 1878 இலிருந்து சிட்னி தொழில்நுட்பக் கல்லூரியாகச் செயற்பட்டுவந்ததாகும்.

மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தை தேர்வு செய்வதற்கான தவிர்க்க முடியாத சில காரணங்களைச் சொல்லலாம். அழகான நகரம் மற்றும் பல்கலை வளாகம், உலகத்தரம் வாய்ந்த பிஸ்னஸ் ஸ்கூல் இங்கு உள்ளது, ஆராய்ச்சிக்கு பெயர்பெற்ற பல்கலைக்கழகம், தொழிற்சாலைகளுடனான தொடர்பு அதனால் வேலைவாய்புக்கு வழி என்பனவற்றைச் சொல்லலாம்.

இந்தப் பல்கலைக்கழகம் கற்றல் மற்றும் கற்பித்தலில் முன்னணி வகிக்கிறது. இதன் 8 பள்ளிகளில் Accounting, Banking & Finance, Economics, Information Systems, Technology and Management, Marketing, Management, Risk & Actuarial studies, Taxation and Business Law போன்ற பாடத்திட்டங்கள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 231 உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு பயிலும் மாணவர்கள் மொத்தம் 15,027 பேர். இதில் 36 சதவீதம் மாணவர்கள் சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள். இங்கு 290 பேர் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டுள்ளனர். டெக்னிக்கல் மற்றும் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் உட்பட 227 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் சிறந்த பாடத்திட்டங்களாக Arts & Design, Arts & Social Science, Built Environment, Business School,Engineering, Law, Medicine, Science ஆகியவற்றை சொல்லலாம். 2016ம் ஆண்டில் இந்தப் பல்கலைக்கழகம் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 49வது இடத்தில் உள்ளது. துறை வாரியாக Accounting and Finance, Law ஆகியவற்றில் 13வது இடத்திலும், Civil and Structural Engineering ஆகியவற்றில் 16வது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தேர்வில் 2014ம் ஆண்டில் UNSW பல்கலைக்கழகம் 5 நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டில் சர்வதேச அளவில் இந்தப் பல்கலைக்கழகம் 78வது இடத்தை பிடித்துள்ளது.

இங்கு பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதுமைகளையும், அதிசயங்களையும் நிகழ்த்தி மாணவர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர். அதற்கு ஒரு உதாரணமாக சொல்வதென்றால், உலகின் மிகப் பெரிய குவாண்டம் கணினியை உருவாக்கியிருக்கிறது.

சிலிக்கான் கொண்டு செய்யப்பட்ட இந்தக் கணினி இன்றைய கணினிகள் போல் அல்லாமல் குவாண்டம் கணித்தல் முறையில் ‘0’ மற்றும் ‘1’ என்கிற இரட்டை எண்களை வேறு விதமாகப் பயன்படுத்துகிறது. கியூபிட் (Qubit) எனப்படும் குவாண்டம் கணித்தல் முறையில் ‘0’ அல்லது ‘1’ என்பதுடன் ‘0’ மற்றும் ‘1’ ஆகியவற்றின் இரு நிலை இருப்பும் (Superposition) செயல்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான வருடங்களில் செய்யக்கூடிய கணினி பிராசஸிங்கைச் சில தினங்களில் முடித்துவிட முடியும்.

இது மட்டுமில்லாமல் வேறு சில சாதனைகளும் இப்பல்கலைக்கழகம் நிகழ்த்திவுள்ளது. 2012-ல் சிலிக்கானில் பதிக்கப்பட்ட ஒற்றை பாஸ்ஃபரஸ் அணுவின் எலெக்ட்ரான் ஒன்றின் சுழற்சியைக் கொண்டு முதல் கியூபிட்டை உருவாக்கியது. 2012-ல் உலகின் முதல் ஒற்றை அணு டிரான்ஸிஸ்டரை உருவாக்கியது போன்றவற்றை சொல்லலாம்.

உயர்கல்வியில் தடம் பதிக்க விரும்பும் மாணவர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவை தேர்வு செய்வதற்கு காரணமாக உள்ள மேலும் சில பல்கலைக்கழகங்களைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.                 

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்