வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்!



வெளிநாட்டுக் கல்வி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்


ஆஸ்திரேலியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றித் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதில் ஆய்வுப் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் அங்கு உள்ள பாடத்திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக வழங்கிவருகிறோம். சர்வதேச தரம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து முன்னணியில் உள்ள 10 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இதுவரை மூன்று பல்கலைக்கழகங்களைப் பற்றிப் பார்த்துள்ளோம். நான்காவது இடத்தில் உள்ள Australian National University பற்றி இப்போது பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிறப்பான பல்கலைக்கழகங்களில் ஒன்றான  Australian National University 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், 1929-லேயே இது Canbera University College என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இது ஆஸ்திரேலியாவின் பார்லிமென்ட்டால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு Australian National University மாற்றியமைக்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப் பட்டப்படிப்புகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தின் உள்ளேயே 7 ஆசிரியப் பயிற்சி கல்வி நிறுவனமும், ஆய்வு படிப்புக்கான கல்வி மையமும் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை மாணவர்கள் தேர்வு செய்ய மிக முக்கிய காரணம் என்று பார்த்தால் படித்து முடித்ததும் நிச்சயம் வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய பாடத்திட்டங்களைக் கொண்டதாக உள்ளது.

இங்குப் படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களுக்கு மிகவும் தரமான சம்பளத்தோடு உயர்வான வேலைவாய்ப்பு நிச்சயம் என்பது சிறப்பம்சமாகும். தரவரிசையில் ஆஸ்திரேலியா அளவில் பார்த்தால் முதல் இடத்தைப் பிடிக்கிறது இப்பல்கலைக்கழகம். அதே சமயம், சர்வதேச அளவில் பார்த்தால் 32ம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவிலேயே கூட பொதுவாக மற்ற பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகள் வெளியிலும், உள்ளேயும் எனக் கலந்துதான் இருக்கும்.

ஆனால், இந்தப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை வளாகத்துக்குள்ளாகவே அனைத்து மாணவர்களுக்கும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. உலகம் முழுவதும் 170 புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதனால் இங்குப் படிக்கும் மாணவர்கள் உலக அளவில் எங்கு வேண்டுமானாலும் சென்று ஒரு செமஸ்ட்டரை மட்டும் கூட தேர்வு செய்து முடித்துவிட்டு வரலாம். இங்கு 35,540 இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களும், முதுநிலை 18,000 மாணவர்களும் படிக்கிறார்கள்.

இங்குள்ள பாடப் பிரிவுகளில் Accounting, Actuarial Studies, Anthropology, Art History & Curatorial Studies, Astronomy & Astrophysics, Biology, Business, Marketing & Management,Classics, Computer Science & Technology, Diplomacy, Earth Sciences, Economics,Engineering,Environment & Resource Management, Finance, Globalization,Graduate Studies,History,International Relations,Law போன்ற பாடப் பிரிவுகள் சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றன. ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் வரிசையில் இன்னும் உள்ள பல்கலைக்கழகங்கள் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.                      

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்