அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

Didn’t…டிடிண்ட்-ஆ?...டிண்ட்-ஆ?


அலுவலக வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்த ரகு ப்ரவீணாவிடம், “டிட் யு க்ளீன் மை டெஸ்க்… ப்ரவீணா?” எனக் கேட்டார். உடனே ப்ரவீணா, “நோ சார். ஐ டிடிண்ட் க்ளீன் இட்… சாரி சார்” என்றாள். ப்ரவீணாவை ஒரு பார்வை பார்த்த ரகு, “அம்மா, நீ டெஸ்க்கை சுத்தம் பண்ணலண்ணாலும் கூட எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனா ‘டிடிண்ட்’ சொன்ன பாரு… அதுதான் எரிச்சலைக் குடுக்குது” என்றார்.  ஒன்றும் புரியாதவளாக, “டிடிண்ட்”ங்கறது தப்புங்களா சார். எப்படிங்க சார் சொல்லணும்?” என்று கேட்டாள் ப்ரவீணா.

“அதை “டிண்ட்” என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப் போனா I didn’t clean it என்பதை /அய் டிண் க்ளீனிட்/ என்றுதான் சொல்ல வேண்டும் ப்ரவீணா. நான் சொல்றது சரிங்களா சார்” என்றபடி வந்தமர்ந்தான் ரவி. “அப்சல்யுட்லி கரக்ட் ரவி” என்ற ரகு, “இப்ப இந்த D என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு சில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பைப் பார்க்கலாம்” என்றார்.“இப்ப இந்த வார்த்தைகளை முதல்ல நீங்க உச்சரிச்சுப் பாருங்க.

Dear // deer // debt // demon // dengue // depot // draught // drought // driven // dumb //” என்றபடியே தனது தேநீர்க் கோப்பையைக் கையிலெடுத்துக்    கொண்டார் ரகு. ரகு தேநீர் குடித்து முடிப்பதற்குள் இருவரும் “ஓகே சார். நாங்க படிச்சுப் பார்த்தாச்சு. நீங்க உச்சரிங்க” என்றனர். “dear & deer என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் Homophone வகையைச் சேர்ந்தவை.

அதாவது, வார்த்தையின் எழுத்துகள் வெவ்வேறாய் இருக்கும். அர்த்தமும் வெவ்வேறாய்த்தான் இருக்கும். ஆனால், உச்சரிப்பு ஒன்றுதான். உதாரணத்துக்கு dam & damn, draft & draught….  dear/டியர் / deer/டியர் / debt/டெட்/ demon/டீமன் / dengue/டெங்கி/ depot/டிபோ / draught/ட்ராஃப்ட் / drought/ட்ரவ்ட் / driven/ட்ரிவ்ன் / dumb/டம்” என்ற ரகுவைச் சற்றே ஆச்சரியத்துடன் பார்த்தனர் ரவியும் ப்ரவீணாவும். “அழகா விளக்கினதுக்கு தேங்க்யு வெரி மச் சார்” என்ற இருவரையும் பார்த்த ரகு, “இட்ஸால்ரைட். சீ யு டுமாரோ” என்றார்.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்குத் தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்