TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் 2016-2017 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் குறித்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்தச் சூழலில் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராகுங்கள்.
பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உங்கள் கனவை நனவாக்கவே இந்தப் பகுதியில் தொடர்ந்து பாடத்திட்டங்கள் குறித்து வழிகாட்டப்படுகின்றது.

கடந்த இதழில் பூமிப்பந்தின் வியத்தகு நிகழ்வுகளான பௌதிகச் சிதைவு, ரசாயனச் சிதைவு, உயிரினச் சிதைவு போன்ற தகவல்களைப் பார்த்தோம். இனி நதியின் ஓட்டத்தால் ஏற்படும் நிலத்தோற்றங்கள் பள்ளத்தாக்குகள் பற்றியெல்லாம் பார்ப்போம். 

ஒரு நதியானது தான் உற்பத்தியாகும் நிலையில் தொடங்கி கடலில் சென்று கலக்கும் வரை ‘9’ விதமான நிலத்தோற்றங்களைத் தன் பாதையில் ஏற்படுத்துகிறது. இந்த ஒன்பது விதமான நிலத் தோற்றங்களைப் பற்றிக் காண்போம்.

‘V’வடிவப் பள்ளத்தாக்குகள்: மலைத் தொடர்களில் இவ்வகைப் பள்ளத்தாக்குகள் உருவாகின்றன.துள்ளல்கள்: சிறிய நீர்வீழ்ச்சிகளே துள்ளல்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

குருட்டாறுகள்: ஆறு விரைந்து செல்லும் பாதையில் உள்ள வளைவாகும். இந்த வளைவு நீண்ட காலமாக அரிக்கப்பட்டு பள்ளதாக்காக மாறிவிடுகிறது.

ஆற்று ஓங்கல்கள்: ஆறு, ஒரு வளைவின் மீது மோதி வலிமையான சரிவை உருவாக்குகிறது. இது ஆற்று ஓங்கல் எனப்படுகிறது.

உள் அமைந்த கிளைக் குன்றுகள்: குருட்டாற்றின் வளைவானது வெளிப்புறமாக வளர்ச்சி அடைவது உள் அமைந்த கிளைக்குன்றுகள் ஆகும்.

சமவெளிப்பாதை: படிய வைத்தலால் ஏற்படும் பரந்த சமவெளியானது பல துணை ஆறுகள் முதன்மை ஆற்றில் இணைவதால் ஏற்படும் நிலப்பரப்பு.

லெவிஸ்: வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் வளமான வெள்ளச்சமவெளி. தொடர் வெள்ளப்பெருக்கு படிய வைத்தலால் ஆற்றின் மூப்பு நிலையில் இது உருவாகிறது.

குதிரைக் குளம்பு ஏரி: ஆற்றின் மூப்பு நிலையில் வெளிப்புறக் கரை அரிக்கப்பட்டு ஏற்படும் குதிரைக் குளம்பு வடிவமான நீர்ப்பரப்பு.

டெல்டாக்கள்: விசிறி வடிவ நுண்ணிய படிவுகள். ஆறு கடலை அடையும் போது ஏற்படுகிறது.

இதுவரை நதி செல்லும் பாதையில் அமைந்த பல்வேறு நிலத்தோற்றங்களைப் பார்த்தோம். இனிக் காற்று அரித்தலால் ஏற்
படும் நிலத் தோற்றங்கள் பற்றிக் காண்போம். காற்று நம் சூழலில் மூன்று விதமான நிலத்தோற்ற மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

காளான் பாறைகள்: மலைப்பகுதிகளில் பாறைகளின் கீழ் உள்ள மென் அடுக்கு விரைவாக அரிக்கப்படாமல் உள்ள தோற்றம், இது காளான் வடிவத்தில் காணப்படுவதால் காளான் பாறைகள் என்று பெயர்.

சூகன்: மென்மையான பாறையில், பாறையின் மேல் அடுக்கு அரிக்கப்பட்டு தட்டையாக, கீழ் அடுக்கு அரிக்கப்படாமல் இருக்கும் நிலத்தோற்றம்.

யார்டாஸ்: பாலைவனச்சூழலில் காற்றால் அரிக்கப்பட்டு நீண்ட மலைத்தொடர் போன்று, காட்சியளிக்கும் மணல் மேடுகள் கவிழ்த்து வைக்கப்பட்ட படகுகள் போன்று தோன்றும்.

இன்சல்பர்க்குகள்: அரிக்கப்படாத எஞ்சிய குன்றுகளாகத் தரைப்பகுதியில் இருந்து உயர்ந்து காணப்படும் மலைகளின் தோற்றம்.

கடல் அலைகளின் அரித்தல் செயல்பாடு: ஆறு மற்றும் காற்று போல, கடல் அலைகளும், கடற்கரையில் ஏற்படும் பல்வேறு விதமான நிலத்தோற்ற மாறுபாடுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. கடல் அலைகள் ஏற்படுத்தும் ‘6’ விதமான நிலத்தோற்றங்களை இப்போது பார்க்கலாம்.

வளைகுடாக்கள்: கடற்கரையின் எல்லாப் பகுதியும் ஒரேவிதமான கடினத்தன்மையோடு இருக்காது. பாறைகளின் கடினத்தன்மைக்கு ஏற்ப கடற்கரையில் அலைகளால் அரிக்கப்பட்டு உருவாகும் ஒழுங்கற்ற வடிவம் வளைகுடா ஆகும்.

ஓங்கல்கள்: செங்குத்தான பாறை கடலை நோக்கி அமையும்போது ஓங்கல் ஏற்படுகிறது.

குகை: ஓங்கலின் அடிமட்டத்தில் இருந்து அலைகள் ஏற்படுத்தும் குகை வடிவம்.

கடல் வளைவு: இரு குகைகள் ஒன்றோடு ஒன்று சேரும்போது கடல் வளைவு (Arch) உண்டாகிறது.

கடல் தூண்: எஞ்சி இருக்கும் பாறைத் தோற்றமானது தூணைப் போல் இருப்பதால் அவை கடல்தூண் என்று அழைக்கப்படுகின்றன.

எஞ்சிய பாறை: கடல் தூண்கள் தொடர்ந்து அரிக்கப்படுவதால் எஞ்சிய பாறை உருவாகிறது.

பனியாறுகள் படிய வைத்தலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்

மொரைன்கள்: பாறைத்துகள்கள், துண்டுகள், பாறை உருண்டைகள் மற்றும் சேறுகளால் ஆனவை மொரைன்கள் எனப்படும்.

டிரம்லின்கள்: இதுவும் ஒரு வகை மொரைன்கள்தான். மொரைன்கள் ஒரு வடிவம் அடைந்துவிடுகின்றன. முட்டைகள் புதைத்து வைத்ததைப் போன்ற மொரைன்கள் டிரம்லின்கள் எனப்படும்.

சர்க்குகள்: பனியாறுகள் அரிப்பதால் உண்டாகும். நாற்காலி அமைப்பு கொண்ட நிலத்தோற்றமே சர்க் ஆகும்.

அரெட்டுகள்: இரண்டு சர்க்குகளுக்கு இடையே காணப்படும் கத்தி போன்ற நிலப்பகுதி சர்க் ஆகும்.

பிரமிடு சிகரம்: அருகருகே இருக்கும் இரண்டு சர்க்குகளின் பகுதி உடைந்து உயர்ந்து நிற்கும் சிகரம் போன்ற அமைப்பு பிரமிடு சிகரம் ஆகும்.
புவியியல் பாடத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய… போட்டித் தேர்வு களுக்கு அவசியமான தகவல்களைத் தொடர்ந்து அடுத்த இதழில் பார்ப்போம்.

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்