ஆஸ்திரேலியாவின் டாப் 10 பல்கலைக் கழகங்கள்!



வெளிநாட்டுக் கல்வி

படிக்கும்போதே வேலை பார்க்கும் வசதியும், படித்து முடித்த பின்பு நிரந்தர வேலைக்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் சென்று உயர்கல்வி மேற்கொள்வதற்கான பயனுள்ள பல தகவல்களை நாம் பார்த்துவருகிறோம். கடந்த இதழில் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் நம் நாட்டு மாணவர்கள் தேர்வு செய்யும் பாடத்திட்டங்கள் எவை என்பதைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில பாடத்திட்டங்களை இப்போது பார்ப்போம்.

நம் நாட்டில் மிக அதிகமாகக் கட்டணங்களைச் செலவு செய்து எஞ்சினியரிங், மருத்துவம், ஐடி என்று குறிப்பிட்ட சில பாடத்திட்டங்களையே தேர்வு செய்து படித்து வரும் நிலையில், இங்குச் செலவாகும் அதே கட்டணத்தில் வளர்ச்சியடைந்த பல உயர்தொழில்நுட்பங்களை நாம் ஆஸ்திரேலியாவில் படிக்கலாம்.

வேலைவாய்ப்புகளைச் சுலபமாக வழங்கும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் Business Management, Information Technology, Engineering (Computer Science Engineering, Electrical Engineering, Mechanical Engineering, Biomedical Engineering, Civil Engineering, Chemical Engineering, Environmental Engineering,Industrial Engineering,Metallurgical Engineering,Aerospace Engineering), Agricultural Science போன்ற பாடத்தைத் தேர்வு செய்கிறார்கள் என்பதைக் கடந்த இதழில் பார்த்தோம். இதே போல இன்னும் சில பாடத்திட்டங்களை ஆஸ்திரேலியா செல்லும் நம் மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள். அதில் குறிப்பாக Hospitality, Tourism and Leisure Management, Hairdressing, Commercial Pilot License Course, Nursing, Photography Courses, Arts, Film Making போன்றவற்றைச் சொல்லலாம். 

இந்தப் பாடத்திட்டங்களில் Hospitality, Tourism and Leisure Management படிப்பை அங்குச் செல்லும் நம் மாணவர்கள் படிக்க காரணம், ஆஸ்திரேலியா உலக அளவில் மக்கள் வந்துசெல்லும் ஒரு சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. மேலும் மற்ற பாடப்பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள்தான் இருக்கும். ஆனால் இந்தப் பாடப்பிரிவில் பட்டயப்படிப்புகளும் உள்ளன. இந்தப் பட்டயப்படிப்புகளைப் படித்தால் கூட போதும் அங்குச் சுற்றுலாத் துறை, சுற்றுலா அழைத்துச்செல்லும் நிறுவனங்களில் சுலபமாக நல்ல சம்பளத்தில் வேலைகளில் சேரலாம்.

அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த படிப்பு Hairdressing, Commercial Pilot License Course என்று சொல்லலாம். நம் நாட்டில் இதெல்லாம் ஒரு படிப்பா என நினைப்பார்கள். ஆனால், அங்கு இந்த படிப்பை முடித்து ஒரு ஷாப் வைத்தாலுமே ஒரு நபருக்கு 20 டாலர் முதல் 25 டாலர் வரை ஹேர் டிரஸ்ஸிங்குக்கு வாங்கப்படும்.

அந்தத் தொகை நம் நாட்டுப் பணத்துக்கு கணக்கு பார்த்தால் மிக அதிகமாக இருக்கும். ஆகவே அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் படிப்பு இது. இங்கு ஷார்ட் டைம் கோர்ஸ்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஆனால், +2 முடித்துவிட்டு இந்தியாவில் ஏதாவது ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஹேர் டிரஸ்ஸிங் பயிற்சி முடித்திருந்தால்தான் ஆஸ்திரேலியா செல்ல
முடியும்.

சர்வதேச அளவில் அங்கீகாரம் உள்ள Commercial Pilot License Course படிக்கலாம். இது உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடாவில் இருக்கின்றது. இந்தியாவிலும் இந்தப் படிப்பு உள்ளது. ஆனால், இங்குப் படித்து முடிப்பவர்கள் இங்கு மட்டும்தான் பைலட் பணி பார்க்கமுடியும். அதே சமயம் இந்தப் படிப்புக்கான செலவு மிக அதிகமாகவே இருக்கும்.

ஆனால், இதை தேர்வு செய்து படித்தவர்களின் வருமானம் மிக மிக அதிகமாக இருக்கும். அடுத்ததாக Nursing கோர்ஸை சொல்லலாம். இது எல்லா நாடுகளிலும் தேவை உள்ள படிப்பு. எந்த நாடாக இருந்தாலும் வயதானவர்களும், நோயாளிகளும், மருத்துவமனைகளும் இல்லாமல் இருப்பதில்லை. அதனால் கட்டாயம் வேலை வாய்ப்புகளை கொண்ட படிப்பு இது.

ஆஸ்திரேலியா செல்லும் நம் மாணவர்கள் இப்படிப் பல்வேறு துறைகளில் சிறப்பான பாடத்திட்டங்களைத் தேர்வு செய்து படிக்கிறார்கள். இங்கு இதுபோல் ஆயிரக்கணக்கான துறைகளையும் பாடப்பிரிவுகளையும் வழங்கும் பல்கலைக்கழகங்கள் பல உள்ளன. அவற்றில் அடிப்படைக் கட்டமைப்புகள் முதல் அனைத்துச் சிறப்பம்சங்களையும் கொண்ட டாப் 10 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

அவை Monash University, University of Queensland, University of Melbourne, Australian National University, University of Sydney, University of New South Wales, University of Western Australia, University of Adelaide, University of Technology Sydney, RMIT University ஆகியவை ஆகும். இவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.
        

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்
வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்