ரிசர்வ் வங்கியில் 504 வேலை!



நீங்கள் ரெடியா?

இந்திய நாட்டின் நாணய மதிப்பை நிர்ணயிக்கக்கூடியது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே நாணய மதிப்பு மதிப்பிடப்படுகிறது. இதுவே அரசின் கருவூலமும் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி தேசத்தின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கி, கண்காணித்தும் வருகிறது.

வங்கிகளின் வங்கியான இது, அனைத்து வங்கிகளுக்கான விதிமுறைகளை வகுப்பது, கட்டுப்படுத்துவது, வங்கிகளின் நிதிகளை நிர்வகிப்பது உள்ளிட்ட பல பணிகளைச் செய்கிறது.  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 504 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சென்னைக்கு 31 இடங்களும், திருவனந்தபுரம், கொச்சிக்கு 30 இடங்களும், மும்பைக்கு 81 இடங்களும், டெல்லிக்கு 27 இடங்களும் உள்ளன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் விவரம்:

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். அத்துடன் கணினியில் பணிபுரியும் ஆற்றலும் வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1.6.2015ம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த வயது வரம்பு கணக்கிடப்படும். அதாவது 2.6.1987 மற்றும் 1.6.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். அரசு
விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: தேசிய அளவில் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றவர்கள், முன்னாள் படைவீரர்கள் ரூ.50ம், மற்றவர்கள் ரூ.450ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கேஷ் கார்டு ஆகியவை மூலம் இந்தக் கட்டணத்தை செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 3.7.2015ம் தேதி வரை இணையதள விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக விண்ணப்பம் சமர்ப்பித்ததும், பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கூடுதல் தகவல்களுக்கு: www.rbi.org.in.