பொங்கலுக்கு பட்டாஸ் வெடித்த மெஹ்ரீன்!



மைதா மாவு நிறம், சுண்டினால் ரத்தம் தெறிக்கும் பருவம், சதைகளால் ஆன சந்தன மரத் தேகம். வைரமுத்துவின் வரிகளில் சொல்வதாக இருந்தால் அழகான ராட்சஸியாக வசியம் பண்ணுகிறார் மெஹ்ரீன் பிர்சாடா. பொங்கலுக்கு வெளியான ‘பட்டாஸ்’ ஹிட்டடித்த கொண்டாட்டத்தில் இருந்தவரிடம் ஒரு பேட்டி...

“கோதுமை நிறத்தில் இருக்கீங்க. ரிஷிமூலம் பஞ்சாப்தானே?”

“அட எப்படி கண்டுப்பிடிச்சீங்க? பிறந்தது பஞ்சாப். வளர்ந்தது டெல்லி, நியூயார்க், கனடா. அந்த வகையில் நானொரு உலகம் சுற்றும் வாலிபி. அப்பா விவசாயி. அம்மா ஹோம்மேக்கர். எனக்கு ஒரு தம்பி. அவனும் பாலிவுட் ஆக்டர்தான். நான் நடிக்க வந்தது தற்செயலான விஷயம் கிடையாது. இங்கு எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்று சொல்வார்கள். அப்படி. நான் நடிகையாக வேண்டும் என்று என் தலையில் எழுதப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.”

“டைரக்டா சினிமாவுக்கு வந்துட்டீங்களா?”

“படிக்கும் போதே சினிமா மீது பேஷன் அதிகம். மாடலிங் போட்டி எங்கு நடந்தாலும் முதல் ஆளாகப் போய் நிற்பேன். அப்படி 2013ல் கனடாவில் நடந்த ‘தென் ஆசியா கனடா  அழகிப் போட்டி’யில் ‘மிஸ் பெர்சனாலிட்டி’ டைட்டில் எனக்குத்தான் கிடைத்தது.  அந்த அழகி பட்டம்தான் என்னுடைய சினிமா கனவை எளிதாக்கியது. என்னுடைய முதல் சினிமா தெலுங்கில் ஆரம்பித்தது. நானியோடு நடித்த ‘கிருஷ்ண காடி வீர பிரேமகதா’ என்ற என்னுடைய முதல் படமே வெற்றி என்பதால் தெலுங்கில் எனக்கான மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்தது.”

“தமிழுக்கு எப்படி வந்தீங்க?”

“தெலுங்குப் படம் ரிலீஸ் ஆன அந்தச் சமயத்தில் தமிழ்ல வந்த வாய்ப்புதான் சுசீந்திரன் சார் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்தாலும் அப்போது தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் பிஸியாக இருந்ததால் தமிழில் நடிக்க முடியவில்லை. என்னுடைய மனக் கவலையை நீக்குமளவுக்கு ‘பட்டாஸ்’ எனக்கு மிகப் பெரிய தொடக்கத்தை தமிழில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.”

“இந்த ‘பட்டாஸ்’  அனுபவம் எப்படி?”

 “மறக்க முடியாத அனுபவம். தனுஷ் சார், சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பு, துரை. செந்தில்குமார் சாரின் இயக்கம் என்று பெரிய ப்ராஜக்ட்டில் நான் இருந்தது பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. படமும் பெரிய ஹிட். இந்தப் படம் தமிழில் தொடர்ந்து படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்தையும். நிறைய வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.”

“தனுஷ் கிட்ட பிடித்த விஷயம்?”

“பெரிய நடிகராக இருந்தாலும் அவருடைய எளிமை எனக்கு பிடிக்கும். மனித நேயமிக்கவர். எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் ஒரே டேக்கில் முடித்துவிடுவார். சக நடிகர்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர். ‘பட்டாஸ்’ படத்தில் என்னுடய நடிப்பு பேசப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இயக்குநர் துரை செந்தில் சாரும், தனுஷ் சாரும்தான். கேமரா முன்னாடி என்னுடன் தனுஷ் என்ற பெரிய நடிகர் இருந்ததால்தான் என்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அவருடன் நடித்தது வாழ்நாளில் மறக்க முடியாது.”

“தமிழில் அதிகப் படங்கள் நடிக்காதது ஏன்?”

“ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல வாய்ப்பு அமையாததுதான் காரணம். ‘பட்டாஸ்’ படத்துக்குப் பிறகு புது வாய்ப்புகள் வருகிறது. அதற்காகவே தமிழ் மொழியை விரைந்து கற்று வருகிறேன்.”

“பிற மொழி படங்களுக்கும் தமிழ்ப் படங்களுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?”

“இந்தி, பஞ்சாபி, தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளேன். இதுவரை நான் வேலை செய்த எல்லா மொழிப் படங்களிலும் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அதுமட்டுமல்ல, சினிமாவை மொழியை வைத்து பிரித்துப் பார்க்க முடியாது. சினிமாவுக்கு மொழி இல்லை. சினிமாவை நேசிப்பவர்கள் எந்த மொழி திரைப்படத்தையும் ஆர்வமாகப் பார்க்க முடியும். அந்த வகையில் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவளாக நினைக்கிறேன்.”

“தமிழில் ஜோடி போட விரும்பும் நடிகர் யார்?”

“லீடிங் ஸ்டார்ஸ் அனைவருடனும் நடிக்கணும். பிரபல இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கணும். முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நான் இருக்கணும். என்னுடைய இந்தக் கனவு ‘பட்டாஸ்’ என்ற பெரிய பட்ஜெட் படம் மூலம் நனவாகத் துவங்கியுள்ளது.”

“நீங்கள் நடித்த ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் உங்கள் காட்சிகளை நீக்கியது பற்றி வருந்தியதுண்டா?”

“அப்படி எல்லாம் எந்த வருத்தமுமில்லை. அதெல்லாம் இயக்குநரின் உரிமை. எல்லாவற்றையுமே அனுபவமாகத் தான் பார்க்கிறேன். அனுபவங்களால் மட்டுமே நாம் சிற்பமாக சிறந்து விளங்க முடியும்.”

“எதிர்கால லட்சியம்?”

“அப்படியெல்லாம் பெருசா இல்லை. ‘குட் ஹியூமன் பீயிங்’, ‘பெஸ்ட் ஆக்டர்’ என்று பெயர் வாங்க வேண்டும். நான் விரும்பும் இந்த நல்லவைகளை உடனே அடையமுடியாது. அதற்கு காலம் தேவை. அந்த வகையில் என்னுடைய லட்சியத்தை அடைய நிதானமாக என் பயணத்தைத் தொடர்கிறேன்.”

“பொழுதுபோக்கு?”

“டிராவலிங் போகப் பிடிக்கும். குடும்பத்துடன் நேரம் செலவழிக்கப் பிடிக்கும். இதுவரை பல உலக நாடுகளுக்கு ‘ட்ரிப்’ அடித்துள்ளேன். என்னுடைய அடுத்த பயணம் ‘துருக்கி’யாக இருக்கும்.”

“சினிமாவிலே கிளாமர் டால். நிஜத்துல நீங்க எப்படி?”

“ஜாலியான பெர்சன். பெரிசா அலட்டிக்கமாட்டேன். இதுவும் கடந்து போகும் என்பதுதான் என்னுடைய பாலிஸி என்பதால் எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்துக்கொள்வேன்.”

- சுரேஷ்ராஜா