அழியாத கோலங்கள் 2



எழுத்தாளரின் வாழ்க்கை!

பிரபல எழுத்தாளரான பிரகாஷ்ராஜ் டெல்லியில் சாகித்ய அகாடமி விருது பெறுகிறார். விருது வாங்கியவுடன் வீட்டுக்குச் செல்லாமல் சென்னையில் உள்ள தன்னுடைய கல்லூரித் தோழியான அர்ச்சனா வீட்டுக்குப் பயணமாகிறார்.
அர்ச்சனாவை சந்திப்பதோடு, அன்று இரவு அவரது இல்லத்திலேயே தங்குகிறார். அப்போது பிரகாஷ்ராஜின் உடல் நிலை திடீரென்று பாதிக்கப்படுவதால் உயிரிழந்துவிடுகிறார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையைத் துவங்குகிறது.

அப்போது பிரகாஷ்ராஜ்- அர்ச்சனா இடையில் இருக்கும் உறவை சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பிரகாஷ்ராஜ் - அர்ச்சனா இடையிலான உறவின் ஆழத்தையும், அவர்களது உறவு குறித்து பிரகாஷ்ராஜின் மனைவியான ரேவதியின் கண்ணோட்டத்தையும், நாவல் படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லியிருப்பதுதான் படத்தின் சிறப்பு.

எழுத்தாளராக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், அவரது தோழியாக நடித்திருக்கும் அர்ச்சனா, பிரகாஷ்ராஜின் மனைவியாக நடித்திருக்கும் ரேவதி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நாசர் ஆகிய இந்த நால்வர்தான் படத்தைத் தாங்கிப்பிடிக்கும் நான்கு தூண்கள். நால்வரும் அனுபவசாலிகள் என்பதால் ஒவ்வொரு பிரேமிலும் செதுக்கிச் செதுக்கி நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் சித்தார்த்தாவின் இசையில், வைரமுத்து எழுதியுள்ள பாடல்கள் சுகமான ராகங்கள். பின்னணி இசை கதையோடு பயணமாகி கதைக்கு வலு சேர்த்துள்ளது.ராஜேஷ் கே.நாயரின் கேமரா நடிகர், நடிகைகளின் ஒவ்வொரு முகபாவத்தையும் கூர்மையாக பதிவு செய்துள்ளது.எடிட்டர் மு.காசி விஸ்வநாதன் கத்திரிக்கோலை கச்சிதமாகப் பயன்படுத்தி படத்தை விறுவிறுப்பாகக் காட்டியிருக்கிறார்.

தோற்றுப்போன காதல் குறித்து பேசும் முன்னாள் காதலர்கள், கணவரைப் பற்றி புரிந்து வைத்திருக்கும் மனைவியின் யதார்த்தமான எண்ணம், ஆண், பெண் தனிமையில் இருந்தால், அவர்கள் உடல் ரீதியான தொடர்பில்தான் இருப்பார்கள் என்று தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகம் ஆகியவை பற்றிப் பேசும் இந்தப் படம் சினிமாவாக இல்லாமல் ஒரு எழுத்தாளரின் வாழ்க்கைக்குள் சென்ற உணர்வைத் தருகிறது.

நாவல்களைத் திரைப்படமாக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு சினிமாவையே நாவலாகக் கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.ஆர்.பாரதிக்கு ஒரு பூங்கொத்து.வழக்கமான கவர்ச்சி அம்சங்கள் படத்தில் குறைவு என்றாலும் மொத்த படமும் நம்மை ஏதோ ஒரு வகையில் ஈர்க்கிறது.