யார் நாய்? யார் பேய்?



எடிட்டர்கள் இயக்குநராக அவதாரம் எடுப்பது ஒன்றும் கோலிவுட்டிற்கு புதிதல்ல. அடிக்கடி நடக்கறதுதான். ஆனால், ஒரு படத்தொகுப்பாளர் படத் தயாரிப்பாளராக டபுள் புரொமோஷன் ஆவது என்பது ‘வாவ்’ ரகம்தான்! ‘வழக்கு எண் 18/9’, ‘தனி ஒருவன்’ ‘தில்லுக்கு துட்டு’ ‘மார்க்கெட் ராஜா’ உள்பட நாற்பதுகும் மேற்பட்ட படங்களின் எடிட்டரான கோபிகிருஷ்ணா, இப்போது ‘கட்டிங் வொட்டிங்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, ‘நாயே பேயே’ என்ற படத்தை தயாரித்து முடித்திருக்கிறார்.

“என்ன திடீர்னு தயாரிப்பாளர் அவதாரம்?”

‘‘நான் தயாரிப்பாளரானதும் எடிட்டர் மோகன் சார்கிட்ட இருந்து போன். ‘ரொம்ப ஜாக்கிரதையா இரும்மா. கவனமா அடியெடுத்து வை’னு அக்கறையா சொன்னாங்க. அடுத்து என்னை அறிமுகப்படுத்தின லிங்குசாமி சார், ‘சந்தோஷமா இருக்கு’னு சொல்லி சில அனுபவங்களை பகிர்ந்துகிட்டார். அடுத்ததா தாணு சார், ‘முதல்படம் எல்லாருக்குமே முக்கியமானது.

சரியா பண்ணினா தப்பிச்சுடலாம்’னு சொல்லி பிசினஸ் ஆங்கிள்ல சில ஆலோசனைகள் சொன்னார். இப்படி என் மீது அன்பும் அக்கறையுமான உள்ளங்களின் பாராட்டோடு ‘நாயே பேயே’ ஆரம்பிச்சிருக்கேன். இந்தக் கதையை கௌதம்மேனன் தயரிக்கறதா இருந்துச்சு. நிறைய ஹீரோக்களுக்கு இந்த கதை தெரியும். தினேஷ் மாஸ்டர்னாலதான் இந்த படத்தை நான் தயாரிக்கக் கூடிய தன்னம்பிக்கை வந்துச்சு.

‘ஒரு குப்பைக் கதை’க்குப் பிறகு அவரே இதில் ஹீரோவாகவும் நடிச்சிருக்கார். முழுப்படமும் ஷூட் முடிச்சு, இப்ப இசைக்கோர்ப்பு வேலைகள் போயிட்டிருக்கு. நான் எடிட்டராக ஆகுறதுக்கு முன்னாடி எனக்கு உதவின நண்பர்கள் அத்தனை பேரும் இந்தப் படத்துல இருக்காங்க. அதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்.’’

“டைட்டில் ஒரு மாதிரி இருக்கே?”

“இது ஒரு கேட்ச்சிங்கான டைட்டில். படம் ஒரு ஹாரர் ரொமாண்டிக் டிராமா. ‘நாயே பேயே’ங்கறது செல்லமாகவும் கொஞ்சுற வார்த்தை, கோபமாகவும் கத்துற வார்த்தை. இந்த ரெண்டு சூழலுக்குமான விஷயங்கள் படத்திலும் இருக்கு. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவா நடிக்கறார். அவரும் அவரோட ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து நாயை திருடி விக்கிற கேரக்டர்கள் பண்ணியிருக்காங்க.”

“டைரக்‌ஷன்?”

“படத்தோட டைரக்டர் சக்திவாசன், ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட் மாணவர். கிரண்பேடி நடிப்பில் அவர் இயக்கின ‘வந்தேமாதரம்’ குறும்படத்துக்கு நேஷனல் அவார்டே கிடைச்சிருக்கு. அப்புறம், அவர் சினிமா முயற்சிகள் பண்ணாமல் காசிக்கு போயிட்டார். அங்கே அகோரியா மாறக்கூடிய சூழலுக்கே போய் திரும்பி வந்திருக்கார். வரும் போது இந்த ஸ்கிரிப்ட்டோட வந்தார். பக்காவான பேப்பர் ஒர்க் பண்ணிட்டு வந்தார்.

ஒவ்வொரு ஷாட்டும் அவசியமான ஷாட். எத்தனை நிமிஷம், என்ன பட்ஜெட்.. எவ்ளோ செலவு ஆகும்? இப்படி எல்லா விஷயங்களும் கரெக்ட்டா பேப்பர் ஒர்க்ல இருந்தது. நான் தயாரிப்பாளரா மாற அந்த பேப்பர் ஒர்க் தான் காரணம். சக்திவாசனை எனக்கு அறிமுகப்படுத்தினவர் தினேஷ் மாஸ்டர்தான்.”“டான்ஸ் மாஸ்டரா தினேஷை எல்லாருக்கும் தெரியும். ஹீரோவா என்ன பண்ணியிருக்காரு?”

“தினேஷ் மாஸ்டர் கோரியோகிராப் பண்ணின பாடல்களை எடிட் பண்ணும் போது அவரும் எடிட் ஷூட்ல வந்து உட்கார்வார். அதிர்ந்து பேசமாட்டார். ‘ஒரு குப்பைக் கதை’க்கு நான் எடிட் பண்ணியிருந்தேன். அந்த டைம்ல மாஸ்டரோடு நெருக்கமான நட்பாச்சு. இதுல அவருக்கு ஜோடியா சில ஹீரோயின்களிடம் பேசினோம்.

‘டான்ஸ் ஷோ இருந்தா சொல்லுங்க. ஹீரோயினா நோ’ன்னு நேரடியாகவே சொல்லிட்டாங்க. அப்புறம் புதுமுகம் போனோம். ஐஸ்வர்யா ராஜ்னு தமிழ் தெரிஞ்ச கோயமுத்தூர் பொண்ணு இதில் அறிமுகமாகுறாங்க. இணையதளத்துல ‘உங்களால இதை பண்ணவே முடியாது’னு சவால் விடுற விஷயங்கள்ல எல்லாம் இவங்க துணிஞ்சு இறங்குவாங்க. அப்படி ஒரு கேரக்டர்.

இவங்க தவிர ‘ஆடுகளம்’ முருகதாஸ் நடிக்கறார். ஏழெட்டு வருஷ நண்பர். இன்னொரு பாத்திரத்துல ‘டங்கா மாரி’ பாட்டு எழுதின ரோகேஷ் கேரக்டர் பண்றார். ‘நீர்ப்பறவை’, ‘மஞ்சப்பை’, ‘சுந்தரபாண்டியன்’ பண்ணின என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கறார். என்னோட நண்பர் நிரன் சந்தர் ஒளிப்பதிவு பண்றார். ‘போடா போடி’ சுப்பு அழகப்பன் ஆர்ட் டிபார்ட்மென்டை கவனிச்சிருக்கார். இந்த படத்தின் மூலம் என் உதவியாளர் ஹரீஷை எடிட்டரா அறிமுகப்படுத்துறேன். என்னோட ஆரம்பக் காலத்தில் எனக்கு உதவின அத்தனை நல்ல உள்ளங்களும் இந்தப் படத்துல என்னோட கைகோர்த்திருக்காங்க.”

“உங்களைப்பத்தி சொல்லுங்க.?”

“சொந்த ஊர் வேதாரண்யம் பக்கம் ஆயக்காரன்குளம். ப்ளஸ்2 முடிச்சதும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் நட்பு கிடைச்சது. எனக்குள் சினிமாவை விதைச்சது அவங்கதான். ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்ல ஒளிப்பதிவு ட்ரை பண்ணினேன். எடிட்டிங்தான் கிடைச்சது. கிடைச்ச துறையில கவனம் செலுத்தினேன்.

எடிட்டர்கள் சசிகுமார், கோலாபாஸ்கர் சார் இவங்ககிட்ட உதவியாளரா 40 படங்கள் அசிஸ்டென்ட் எடிட்டரா இருந்திருக்கேன். லிங்குசாமி சார்தான் அவரோட ‘வழக்கு எண்18/9’ல எடிட்டர் ஆக்கினார். இப்ப கைவசம் பத்து படங்கள்கிட்ட ஒர்க் போயிட்டிருக்கு. நான் படம் தயாரிக்கறதால எடிட்டிங் பண்ணுவேனோனு சிலர் நினைச்சு, என்கிட்டேயே கேட்டாங்க. எடிட்டிங்தான் என் மெயின் தொழில். நல்ல கதைகள் அமையும்போது தொடர்ந்து தயாரிக்கவும் செய்வேன்.”

“கட்டிங் வொட்டிங் முறை.. இப்ப காப்பி பேஸ்ட்டிங்கா மாறியிருக்கு.. எப்படி பாக்குறீங்க.?”

“சினிமா டிஜிட்டலுக்கு மாறினதுக்குப் பிறகு பேப்பர் ஒர்க் என்பதே இல்லாமல் போயிடுச்சு. எதுனாலும் பாத்துக்கலாம்.. பாத்துக்கலாம்னு சொல்லிடுறாங்க. கரெக்ட்டான கால்குலேஷன் இல்லாமல் ஷூட் பண்றதால, எடிட்டிங்ல படத்துக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத சீன்களை வெட்டி எறியவேண்டி வரும்போது ஃபீலாவேன்.

இன்னிக்கு அவுட்டோர் போனாலே டபுள் கால்ஷீட் ஆகும். அவ்ளோ செலவுகள் வைக்கும். அத்தனை செலவுகளும் வீண்செலவுகளா மாறிநிக்கும். சினிமா ஃபிலிம்ல இருந்த காலத்துல கேமரா ஓட ஆரம்பிச்சதும், ஃபிலிம் ரோலை சிக்கனமா பயன்படுத்த, அவசியமான சீன்களை மட்டும் ஷூட் பண்ணினாங்க. ஃபிலிம் ஓட ஆரம்பிச்ச ஒவ்வொரு வினாடியையும் காசா பார்த்தாங்க.

அப்ப எடிட்டிங் வரும்போது ஒரு ஷாட் கூட வேஸ்ட்டேஜ் ஆகாதுனு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப அப்படி இல்ல. சிஜில பார்த்துக்கலாம். டி.ஐ.இருக்கு.. அதுல கரெக்ட் பண்ணிக்கலாம்னு போய்ட்டே இருக்காங்க. இந்த டெக்னாலஜி எதிலும் எமோஷனலைக் கொண்டு வர முடியாது. பேப்பர் ஒர்க்ல எமோஷனல் இருந்தா மட்டும்தான் அது ஸ்கிரீன்ல பிரதிபலிக்கும். இந்தப் படத்துல செகண்ட் ஆஃப் முழுவதும் எமோஷனலா இருக்கும்.

முன்னாடியெல்லாம் எடிட்டர்களுக்குதான் சம்பளம் கொடுக்கமாட்டாங்க.. பைனல் ஸ்டேஜ்னால தயாரிப்பாளர்களே பணம் இல்லாமல் தடுமாறி நிற்பாங்க. அந்த நிலை இப்ப மாறியிருக்கா?

கொஞ்சமும் மாறலை. அப்படியேதான் இருக்கு. ஒரு படம் ஆரம்பிக்கும் போது.. ஆர்வத்துல பிளானிங் இல்லாமல் தாட்பூட்னு தோணுற செலவை எல்லாம் பண்ணிடுறாங்க. படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும் போது, படத்தோட பிசினஸ் பேச ஆரம்பிச்சிடுறாங்க. தியேட்டர் கிடைக்குமானு ஆரம்பிச்சு,

பப்ளிசிட்டி வரை எப்படி கொண்டு போறதுனு சிக்கல்கள்ல திணற ஆரம்பிச்சிடுறாங்க. சினிமாவின் ஒட்டுமொத்த ரகசியங்களும் உடையற இடமா எடிட்டிங் டேபிள் இருக்கு.

கையில கொஞ்சமும் பணம் இல்லாமல் மேற்கொண்டு எப்படி ரிலீஸ் பண்ணப் போறோமோனு சில தயாரிப்பாளர்கள் அவஸ்தை படும் போது, நமக்கு சம்பளம் கேட்கக்கூடத் தோணாது. இதுக்கு காரணம், முதல்லேயே சொன்னது மாதிரி, ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி கையில பேப்பர் ஒர்க் இல்லாததுதான். பக்காவா பைண்டட் ஸ்கிரிப்டோட ஷூட் போனால், பட்ஜெட்டை கூட மிச்சம் பிடிச்சிட்டு, லாபம் பார்க்க முடியும். எங்களுக்கும் தாராளமா பேமென்ட் கிடைக்கும்.”

- மை.பாரதிராஜா