மார்க்கெட் ராஜா



பலே ரவுடியும் பயந்த பேயும்!

கமல், அஜித், விக்ரம் என்று பெரிய ஹீரோக்களுக்கு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் சரண், டி.வி.புகழ் ஆரவ்வை நாயகனாக்கி எடுத்துள்ள ‘மார்க்கெட்ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் எப்படி என்று பார்ப்போம்.கதைக்காக பெரியளவில் யோசித்த மாதிரி தெரியவில்லை. வெரி சிம்பிளாக ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ கதை சாயலில் கொஞ்சம் பேய்க் கதையை சேர்த்து இந்தப் படத்தைக் கொடுத்துள்ளார்கள்.

ஆரவ், டைட்டில்படி மார்க்கெட் ராஜா. அவரது அம்மா ராதிகா. அவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உடையவர். காவ்யா தப்பார் மருத்துவக் கல்லூரி மாணவி. காவ்யாவை படத்தின் இரண்டாவது நாயகன் காதலிக்கிறார். அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்பதால் அவரை லவ் செய்ய மறுக்கிறார். ஆனால் அந்தக் கல்லூரிக்கு ஒரு முறை அதிரடியாக வரும் ஆரவ்வை காதலிக்கிறார் காவ்யா.

ஒரு கட்டத்தில் ஆரவ்வுக்கு வைக்கப்படும் துப்பாக்கி குறி தவறி இரண்டாவது நாயகன் மீது பாய்கிறது. அவர் இறந்த அடுத்த நிமிடமே அந்த ஆத்மா ஆரவ்வுக்குள் புகுந்து விடுகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வீரமிகு மார்க்கெட் ராஜாவான ஆரவ் கோழையாக மாறிவிடுகிறார். கோழையாக மாறிய பின்னர் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக்கதை.

ஆரவ்வுக்கு ஆஜானுபாகுவான தோற்றம் கைகொடுக்குமளவுக்கு நடிப்பு கைகொடுக்கவில்லை என்பது வருத்தமான செய்தி. மற்றபடி நடனம், ஆக்‌ஷனில் சாதித்துக்காட்டுகிறார்.நாயகி காவ்யா தப்பார் கவர்ச்சியில் கிறங்கடிக்கிறார். நிகிஷா பட்டேலும் கவர்ச்சியில் காவ்யா வுடன் மல்லுக்கட்டுகிறார்.
ராதிகா தன்னுடைய கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். மகனிடம் அடி வாங்குவது மற்றும் சுருட்டு பிடிக்கும் காட்சியில் அவருடைய சினிமா லவ்வை புரிந்துகொள்ள முடிகிறது.

நாசர், மதன்பாபு, சாயாஜி ஷிண்டே ஆகியோர் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள். நாசர் கேரக்டர் ‘வசூல்ராஜா’ பிரகாஷ்ராஜ் கேரக்டரை ஞாபகப்படுத்துகிறது.சாம்ஸ், ஆதித்யா, தேவதர்ஷினி, முனீஸ்காந்த் வரும் காட்சிகளில் சிரிக்க முடிகிறது. வழக்கம்போல் ரோகிணி உருக்கமாக நடித்து ரசிகர்களின் மனதை உருகவைக்கிறார். வில்லன் பிரதீப் ராவத் ஓ.கே.

சைமன் கே. கிங். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையை நகர்த்த உதவியிருக்கிறது.படத்தின் ஆகச் சிறந்த பலமாக ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் விளங்குகிறார். ஆரம்பம் முதல் முடிவு வரை சிறப்பான ஒளிப்பதிவு செய்து பாராட்டுகளை அள்ளுகிறார்.நோ லாஜிக்... ஒன்லி மேஜிக்... என்ற ரீதியில் ஆள் மாறாட்டக் கதையில் புகுந்து விளையாடியிருக்கிறார் இயக்குநர் சரண்.