என்னை நோக்கி பாயும் தோட்டா



குறி கச்சிதமா?

சில பல வருட போராட்டத்துக்குப் பிறகு இந்த தோட்டா பாய்ந்திருக்கிறது. கிளாஸ் டைரக்டர் என்று பெயர் எடுத்திருக்கும் கௌதம் மேனனுடன் தனுஷ் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. படம் அந்த எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்பதைப் பார்ப்போம்.

பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் காதலியைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் நாயகன். இதுதான் படத்தின் ஒன் லைன்.கல்லூரி மாணவரான தனுஷ், சினிமா நடிகை மேகா ஆகாஷைப் பார்த்த நொடியிலேயே காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆசிரமத்தில் வளர்ந்ததால் தனுஷ் வீசும் சிநேகப் பார்வையில் கிளீன் போல்ட் ஆகிறார் மேகா.ஆயிரம் முத்தங்களால் பிசின்போல் ஒட்டிக்கொள்ளும் காதலர்களை மேகாவின் கார்டியன் பிரித்துவிடுகிறார்.

ஒருநாள் தனுஷைத் தொடர்புகொள்ளும் மேகா, தான் மும்பையில் இருப்பதாகவும், தனக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறுவதோடு, ‘உங்க அண்ணனும் ஆபத்தில் இருக்கிறார்’ என்ற கூடுதல் தகவலையும் சொல்கிறார். காதலித்த கடனுக்காகவும், அண்ணன் மீது வைத்துள்ள பாசத்துக்காகவும் மும்பை செல்கிறார் தனுஷ். அண்ணனையும் காதலியையும் தனுஷால் காப்பாற்ற முடிந்ததா, இல்லையா என்பதே மீதிக் கதை.

கல்லூரி மாணவராக இளமை ததும்பும் தோற்றத்தில், காதலிப்பது, சண்டைபோடுவது, அண்ணனுக்காக கண்ணீர் விடுவது என்று அனைத்து ஏரியாவிலும் நடிப்பால் அசத்துகிறார் தனுஷ்.மேகா ஆகாஷ் அழகு தேவதை! கவர்ச்சியில்லாமலே காந்தவிழிகளால் ஆளைக் கவிழ்க்கிறார்.
போலீஸ் வேடம், அதுவும் மும்பை போலீஸ் வேடம் சசிகுமாருக்கு பொருத்தமில்லையென்றாலும் தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பால் கெத்து காட்டுகிறார்.

இசையமைப்பாளர் தர்புகா சிவா தடபுடலாக இசையமைத்திருக்கிறார். இது கெளதம் மேனன் படமாச்சே... இசை கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்கும் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறார். ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் பரவசம். பின்னணி இசையும் நன்று.ஜோமன் டி.டாம் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஆகியோரது ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து.

படம் முழுவதும் வாய்ஸ் ஓவர் காட்சிகள் வருவது சலிப்படையச் செய்தாலும் இயக்குநர் கெளதம் மேனன் ஆக்‌ஷன், ரொமான்ஸ் இரண்டையும் ஸ்டைலீஷாகக் கலந்துகட்டி மேஜிக் பண்ணுவதால் படம் பார்க்கும் அனுபவம் சுவாரஸ்யமாகிறது.