அடிதடி ராணியாகிறார் தமன்னா!



ஐஸ் சிலை மாதிரி பளிச்சென்று இருக்கும் தமன்னா, சமீபத்தில் ‘ஆக்‌ஷன்’ படம் மூலமாக ஆக்ரோஷமாகி இருக்கிறார்.பாலிவுட்டில் அறிமுகமாகி, பிறகு டோலிவுட் வழியாக கோலிவுட்டுக்கு வந்தவர். இங்கு ஜோதி கிருஷ்ணா இயக்கிய ‘கேடி’ படத்தில் அறிமுகமானபோது, ‘வடக்கத்தி முகம் தமிழ்நாட்டுக்கு தேறாது’ என்று எல்லோரும் கிண்டல் செய்தனர். ஆனால், நிஜத்தில் நடந்தது வேறு.

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ படத்தில் விவசாயக் கல்லூரி மாணவியாக வந்து, ஹீரோ அகிலுடன் காதலில் கசிந்து உருகியதைப் பார்த்த ரசிகர்கள் அவரை தங்கள் நாட்டின் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். கார்த்தியுடன் நடித்த ‘பையா’ படத்தில், ஜோவென்று பெய்த மழையில் நனைந்து பாடல் காட்சியில் ஆடினார். அஜீத்தின் ‘வீரம்’ படத்தில் வெட்கத்தை வெளிப்படுத்தினார்.

விஜய் சேதுபதியுடன் நடித்த ‘தர்மதுரை’ படத்தில், இயல்பான டாக்டராக பவ்யம் காட்டினார். இப்படி ஒவ்வொரு கேரக்டரிலும் வெரைட்டி காட்டி நடித்து, கடந்த 15 வருடங்களில் 70 படங்களை சத்தமில்லாமல் தாண்டிவிட்டார். இன்னும் ஐந்து ஆண்டுகளில் நிச்சயமாக செஞ்சுரி அடித்து விடுவார்.

சமீபத்தில் தமன்னாவிடம் ஏற்பட்ட மாற்றம்தான், மற்ற ஹீரோயின்களையும் அவரை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. அது ஆக்‌ஷன் ஹீரோயின் அவதாரம். ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்திலும் மகிழ்மதி அரசை எதிர்த்துப் போராடும் போராளியாக, அதிரடி ஆக்‌ஷன் களத்தில் குதித்தார். அடுத்து வெளியான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில், சிரஞ்சீவியைக் காதலித்து, பிறகு அவரது புகழ் பாடும் நடனப் பெண்ணாக தோன்றியதுடன், ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கை நடனமாடியபடி எரித்து அழிக்கும் போராளியாக நடித்தார். இவையெல்லாம் சரித்திரம் மற்றும் பேன்டசி படங்கள்.

தற்போது அவர் நடித்திருந்த ‘ஆக்‌ஷன்’ படம்தான், அவரை ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோயின் ஏஞ்சலினா ஜூலிக்கு நிகராகப் பார்க்க வைத்துள்ளது. படத்தின் கதையில் 75 சதவீதம் இடம்பெற்றது ஆக்‌ஷன் காட்சிகள்தான். அதில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்த தமன்னா, அந்த அனுபவம் குறித்து பேசினார்.

“ஏன் திடீர்னு ஆக்‌ஷன் ஆசை?”

“ஹீரோயின் என்றால், எல்லாவிதமான கதைகளிலும், கேரக்டர்களில் நடிக்க முன்வர  வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், வசனம் பேசி நடிக்கும் காட்சிகளை விட,  அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பது தான் ரொம்ப சுலபம் என்று சொல்வேன்.  வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. படப்பிடிப்புக்கு வந்ததும்,  ‘அங்கே நில்லுங்கள், இங்கே நில்லுங்கள், இப்படி குதிக்க வேண்டும்.

அப்படி  தாவ வேண்டும்’ என்று ஸ்டண்ட் இயக்குனர் சொல்வார். மேலும், சண்டைக்  காட்சியில் நடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு  இருக்கும். எவ்வளவு கடினமான ஆக்‌ஷன் காட்சியாக இருந்தாலும், உயிரைப் பணயம்  வைத்து மிகச் சுலபமாக நடித்துவிடுவேன்.”

“ஏற்கனவே சண்டை ராணி ஆக முயற்சித்தீங்க இல்லையா?”

“ஒவ்வொரு படத்திலும் நான் ஏற்கும் கேரக்டரை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான வாய்ப்புகள் அவ்வப்போது எனக்கு கிடைத்து வருகிறது. ‘பாகுபலி’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தேன் என்றாலும், நான் எதிர்பார்த்த அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் அமையவில்லை.

காரணம், கதையின் ஓட்டத்துக்கு அந்தக் காட்சிகள் தேவைப்படவில்லை. ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நான் ஒரு நடனப்பெண் என்பதால், நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெறவில்லை. என்றாலும், நான் இறக்கும் காட்சியில் நடனத்தின் மூலமே ஆக்‌ஷனை வெளிப்படுத்தி இருப்பேன்.”

“விஷாலுடன் ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்த அனுபவம்?”

“அபாரம். ‘ஆக்‌ஷன்’ படத்தில் மின்னல் வேகத்தில் ஓடும் பைக்கில் பயணிப்பது, மாடிகளில் தாவிக்குதித்து ஓடுவது, எந்திரத் துப்பாக்கியில் சுடுவது, நேருக்கு நேர் சண்டை போடுவது என நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்திலும் விஷாலுக்குப் பின்னால் நான் இருக்கிறேன்.

மேலும், அகன்ஷா பூரியும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருந்தார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தினமும் படப்பிடிப்பு முடிந்த பிறகு கை கால்களில் அதிக வலியுடனான காயங்களுடன்தான் ஓட்டலுக்கு திரும்புவோம். இனி இப்படியொரு ஆக்‌ஷன் கதை ெகாண்ட படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்தது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம்.

சினிமாவில் மிகவும் அர்ப்பணிப்பு தன்மை கொண்ட ஒரு ஹீரோ, விஷால். ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் என்ன சொன்னாலும் அதை துணிச்சலுடன் செய்யக்கூடியவர். சண்டைக் காட்சிகளில் தனக்கு மிகப் பெரிய காயங்கள் ஏற்பட்டபோது கூட, அதற்கான சிகிச்சை பெற்று, முழுமையாக குணமடைந்த பிறகு வந்து நடித்தார். அவரது ஆக்‌ஷன் காட்சி களுக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. ‘ஆக்‌ஷன்’ படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது குறித்து மிகவும் மகிழ்ச்சி.”

- மீரான்