சண்டைக் காட்சி மாதிரிதான் முத்தக்காட்சியும்! விக்ரம் மகன் சொல்கிறார்



இன்னொரு நட்சத்திர வாரிசு என்று கடந்துவிட முடியாதபடி முதல் படத்திலேயே இமாலய உழைப்பைக் கொட்டியிருக்கிறார் துருவ் விக்ரம். அப்பா விக்ரம் மாதிரி சினிமாவில் நீண்ட நெடிய போராட்டம் இருக்கக் கூடாது, ஆரம்பமே அதகளமாக இருக்க வேண்டும் என்று ‘ஆதித்ய வர்மா’வாகவே மாறியிருக்கிறார்.
தெலுங்கில் செம ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். துருவுடன் பேசினோம்.

“சின்ன வயதிலிருந்தே சினிமாதான் கனவா?”

“சின்ன வயதில் சரியாக சாப்பிட மாட்டேன். அம்மா சாப்பாட்டை ஊட்டி வளர்த்தார்கள். ஆனால் அப்பாவின் நடிப்பு, அர்ப்பணிப்பு, உழைப்பு பார்த்து அதை எனக்கு நானே ஊட்டிக் கொண்டு நடிகனாக வளர்ந்தேன்.
அவர் மாதிரி ஒரு நடிகராக வர ேவண்டும் என்று மனதிற்குள் வைராக்கியம் ெகாண்டிருந்தேன். ஆனால் இதை யாரிடமும் சொல்லவில்லை. அப்பா ‘உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்’ என்று முழு சுதந்திரம் கொடுத்தார். அப்போதும் நான் சொல்லவில்லை. பின்பு அவர்களே கண்டுபிடித்து விட்டார்கள்.”

“இந்தப் படம் தொடங்கியதிலிருந்தே பரபரப்பாக பேசப்படுகிறதே?”

“சிலது தானாக உருவானது, சில நாங்களாக ஏற்படுத்திக் கொண்டது. எனது அறிமுகம், எனக்கு முதல் படம் என்பதைத் தாண்டி தமிழ் ஆடியன்சுக்கு ஒரு நல்ல படம் தர வேண்டும், எனக்கும் அது நல்ல படமாக இருக்க வேண்டும், அப்பாவின் பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டும். என்பதற்காகத்தான் இந்த மெனக்கெடல்.

எனக்காக அப்பா அவரது பட வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு உதவி இயக்குநர் மாதிரி இந்த படத்தை பார்த்துப் பார்த்து செய்ததற்கு ‘மகன் நலன்’ என்கிற விஷயம் ஒரு புறம் இருந்தாலும், ஒரு சினிமா நேசிப்பாளராய் ஒரு நல்ல படத்தை தரவேண்டும் என்கிற ஆர்வம்தான் அதற்கு காரணம்.

அர்ஜுன் ரெட்டி கேரக்டரில் பவர்ஃபுல் யூத்தும் இருக்கும், முரட்டுத் தன்மையும், இருக்கும், தேவதாஸ் தனமும் இருக்கும். இந்த மூன்றையும் கலந்து செய்வது ஒரு சவாலான விஷயம். ஆரம்பத்தில் அப்பாவுக்கே சந்தேகம் இருந்தது. எனக்கும் தயக்கம் இருந்தது. ஆனால் களத்தில் இறங்கிவிட்ட பிறகு அடித்து ஆடத் தொடங்கிவிட்டோம். சில காரணங்களால் படத்தை இரண்டாவது முறை எடுக்கும்போது அதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு காட்சி யிலும் கூடுதலாக எஃபெக்ட்போட்டு நடிக்க முடிஞ்சுது. இன்னும் படத்தைமெருகேற்ற முடிஞ்சுது.”

“அறிமுகமாகும் படத்திலேயே உதட்டோடு உதடு முத்தம் வைத்திருக்கிறீர்களே?”

“லிப் லாக் முத்தக்காட்சிக்கு நான் முக்கியத்துவம் தரவில்லை. வசனக் காட்சி, சண்டைக் காட்சி மாதிரிதான் முத்தக் காட்சியும். அப்படி நினைச்சதாலதான் அப்பா பக்கத்தில் இருப்பது எனக்கு பெரிய விஷயமாக தெரியல. அதை வேறு மாதிரி அணுகியிருந்தால் நிச்சயமாக அப்பாவ பக்கத்துல வச்சிக்கிட்டு முத்தக் காட்சியிலே நான் நடிச்சிருக்கவே முடியாது. அதோடு இது திணிப்போ, வியாபார சமரசமோ இல்லை. மூலக் கதையில் உள்ளதைத்தான் அப்படியே எடுத்தோம்.”

“இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ கொஞ்சம் சலசலப்பை உண்டாக்கியது. இந்தப் படம் அப்படி ஏதாவது...?”

“கண்டிப்பா அப்படி எதுவும் இருக்காது. தமிழ் ஆடியன்சுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை உணர்ந்து அதை மட்டுமே படத்தில் வைத்திருக்கிறோம். படம் பார்க்கும்போது அது தெரியும்.”

“ஹீரோயின் சூப்பராக இருக்கிறாரே?”

“சொன்னா நம்ப மாட்டீங்க. பனிடா அம்மாவோட செலக்‌ஷன். அவர் இந்தியில் நடித்திருந்த ‘அக்டோபர்’ படத்தில் அனிடாவின் நடிப்பை பார்த்து விட்டு இந்த பொண்ணுதான் ஹீரோயின் கேரக்டரக்கு சரியா இருக்கும்னு சொல்லி காஸ்ட் பண்ணினார். அக்காவும், அப்பாவும் அதற்கு ஓகே சொன்னார்கள்.”

“வெற்றிமாறன் இயக்கத்தில் அப்பாவுடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தனவே?”

“நானும் அதை ஒரு செய்தியாகத்தான் படித்தேன். அப்பாவும், நானும் நடிக்கிற மாதிரி ஸ்கிரிப்ட் ஒண்ணு இருக்குன்னு வெற்றிமாறன் சார் சொல்லியிருக்கிறார். அதைத்தாண்டி அதுபற்றி எதுவும் பேசவில்லை. நான் அப்பாகூட நடிக்கும் ஆசையில்தான் இருக்கிறேன். இந்த விஷயத்தில் அப்பாதான் முடிவெடுக்கணும்.”

“படத்துக்கு படம் விக்ரம் நிறைய மெனக்கெடுவார், எடையை ஏற்றி, குறைப்பார். அப்படியெல்லாம் நீங்கள் நடிப்பீர்களா?”

“படத்துக்கு படம் அவர் கஷ்டப்படுவதை நான் நேரிலேயே பார்த்தவன். இப்படி கஷ்டப்பட்டு நடிக்கணுமா என்று கூட நான் நினைத்ததுண்டு. அவர் அளவிற்கு டெடிகேஷனா என்னால இப்போ நடிக்க முடியுமான்னு தெரியல. ஆனால் அவரோட இமேஜ் கெட்டுவிடாமல் நடிக்கணுங்கிறதுதான் இப்போதைய ஆசை.”

“அப்பா படத்தை ரீமேக் செய்து நடிப்பதாக இருந்தால் எந்தப் படத்தில் நடிப்பீர்கள்?”

“அவர் படத்தை ரீமேக் செய்தால் நிச்சயமாக அவரைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. அப்படியே நான் நடித்தாலும் ‘பீமா’ படம் எனக்கு பிடிக்கும். அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிப்பேன்.”

“விக்ரம் மகன் என்கிற அடையாளம்தானே உங்களை நடிகனாக்கி உள்ளது?”

“அது உண்மைதான். அப்பா என் வயதில் இருந்து ஆதித்ய வர்மாவில் நடித்திருந்தால் எப்படி நடித்திருப்பாரோ, அப்படித்தான் நான் இதில் நடித்திருக்கிறேன். அவருடைய இயல்புகள் எனக்குள் இருக்கத்தான் செய்யும். அதைத் தாண்டி நான் தனித்தன்மையோடு என் திறமையை வெளிப்படுத்தி தனி அடையாளத்தைப் பெற வேண்டும். அதற்காக நிறைய உழைக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்.”

- ஒய்டுகே