பப்பி



வயசுப் பிரச்சினை!

என்ஜினியரிங் மாணவரான வருண் படிப்பைத் தவிர்த்து ஆபாசப் படம் பார்ப்பது, ஆபாசப் புத்தகம் படிப்பது, அதைப்பற்றியே பேசுவது என்று முப்பொழுதும் அந்த நினைவாகவே இருக்கிறார். அவரது நண்பர்கள் அனைவரும் காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள்.
ஆனால் வருணுக்கு மட்டும் அந்தக் கொடுப்பினை அமையாததால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். அந்த சமயத்தில் வருணுக்கு, நாயகி சம்யுக்தா ஹெக்டேவின் நட்பு கிடைக்கிறது. நாளடைவில் நட்பு காதலாக மலர்கிறது.

காதலியிடமும் தனது சபலத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தும் வருண், ஒரு கட்டத்தில் சம்யுக்தாவின் அனுமதியோடு அவருடன் கலவிக்கொள்கிறார்.

இந்த சம்பவத்தால், தான் கர்ப்பமடைந்துவிட்டதாக சக்யுக்தா சந்தேகப்படுகிறார். வருண் தனது பெற்றோர்களை நினைத்து பயப்படுகிறார். இதன்பிறகு இவர்களுடைய காதல் எதை நோக்கி பயணிக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

‘ஒரு நாள் இரவில்’,  ‘கோமாளி’ போன்ற படங்களில் நடித்த வருண் முதன் முறையாக இதில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பு, நடனம், காதல் என ஆய கலைகள் அறுபத்தி நான்கும் தனக்கும் வரும் என்று தன்னுடைய இயல்பான நடிப்பில் சொல்லியிருக்கும் விதம் அருமை. நாய் உயிருக்கு போராடும் காட்சியில் நெகிழ வைத்தாலும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் கொடுத்து நெளிய வைக்கிறார்.

நாயகி சம்யுக்தா ஹெக்டேவுக்கு பக்கத்து கேர்ள் முகவெட்டு என்பதால் எளிதாக ரசிகர்களின் மனதில் உட்கார்ந்துவிடுகிறார். அழுத்தமான வேடத்துக்கு முடிந்தளவுக்கு நியாயம் செய்திருக்கிறார்.வழக்கம்போல் யோகி பாபு தனது டைமிங் வசன உச்சரிப்பால் சிரிக்க வைக்கிறார். பாபு வரும் இடமெல்லாம் சிரிப்புக்கு உத்தரவாதம் தரலாம்.

இசையமைப்பாளர் தரண்குமார் இசையில் பாடல்கள் ஓ.கே. ஒளிப்பதிவாளர் தீபக்குமார் வண்ண ஓவியம் தீட்டியிருக்கிறார். கேமரா கோணங்களும் அருமை.காதலுக்கு முன்பான உறவு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், அந்தப் பிரச்சினைகளில் இருந்து வெளிவர இளசுகள் எடுக்கும் முடிவு எவ்வளவு பெரிய தவறு என்பதையும் நாயை வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் நட்டுதேவ்.