பெட்ரோமாக்ஸ்



அன்புக்கு ஏங்கும் பேய்கள்!

பேய்ப் படம் என்றால் தமன்னாவை கூப்பிடுங்கள் எனுமளவுக்கு  தமன்னா நடித்துள்ள மற்றொரு பேய்ப் படம்தான் இந்த ‘பெட்ரோமாக்ஸ்’.

வெளிநாட்டில் செட்டிலாக வேண்டும் என்பதற்காக பூர்வீக வீட்டை விற்பனை செய்ய பிளான் போடுகிறார் வீட்டு உரிமையாளர் பிரேம்.
ஆனால், அந்த வீட்டில் பேய் இருப்பதாக நம்பி யாரும் அந்த வீட்டை வாங்க பயப்படுகிறார்கள். தன் வீட்டின் மீது இருக்கும் பேய் இமேஜை நீக்க நான்கு வாலிபர்களைத் தங்க வைக்கிறார் பிரேம்.

காளி வெங்கட், முனீஸ்காந்த், சத்யன், டி.எஸ்.கே ஆகியோர்தான் அந்த நால்வர் அணி. வெவ்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு பேரும், அந்த பேய் வீட்டில் இருக்கும் பேய்களே மிரண்டு போகும் அளவுக்கு ரகளை செய்கிறார்கள்.ஒருகட்டத்தில் இவர்களை அந்த வீட்டை விட்டு விரட்டி யடிக்க முடியாமல் பேய்கள் எப்படியெல்லாம் திணறுகிறது என்பதை சிரிப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

கதையின் நாயகி தமன்னா என்றாலும், முழுப் படத்தையும் தனது தோளில் தூக்கிச் சுமந்திருப்பவர் முனீஸ்காந்த் தான். அவருக்கு பக்கபலமாக காளி வெங்கட், சத்யன், டி.எஸ்.கே ஆகியோர் தோள்கொடுத்திருக்கிறார்கள். ‘முண்டாசுப்பட்டி’ படத்திற்குப் பிறகு முனீஸ்காந்த் ரசிகர்களை முழுமையாகச் சிரிக்க வைத்திருக்கிறார்.

புதுவரவு டி.எஸ்.கே. அதகளம் பண்ணுகிறார். ‘அந்நியன்’ விக்ரமாக, ‘பாகுபலி’ காளகேயனாக வரும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பு சத்தத்தை கேட்கமுடிகிறது. இவர்களுடன் சில நிமிடங்கள் மட்டுமே வரும் யோகிபாபுவின் காமெடியும் தனி ரகம்.ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பலம்.  டேனி ரேமண்டின் ஒளிப்பதிவும், லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் கச்சிதம்.

கதையின் நாயகியாக தமன்னா இருந்தாலும், அவரை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக, காட்சிகளைத் திணிக்காமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே முதன்மைப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன்.

தமன்னா மற்றும் அவருடன் இருக்கும் மூன்று கதாபாத்திரங்களை வைத்து இயக்குநர் ஒரு குட்டி ட்விஸ்ட்டை கையாண்டிருக்கிறார். அது என்ன என்பதை திரையில்தான் பார்த்து ரசிக்க வேண்டும்.