100% காதல்



காதலுக்கு தடை போடும் கல்வி!

படிப்பு விஷயத்தில் ஜி.வி.பிரகாஷ் படுசுட்டி. அதனாலேயே படிப்பு விஷயம் மட்டுமல்லாமல் எங்கும் எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்.
அவரது முறைப் பெண்ணான ஷாலினி பாண்டே, ஜி.வி.பிரகாஷின் மீது உள்ள காதலால், அவரைப் போலவே நன்றாகப் படிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார். அதன் விளைவாக ஜி.வி.பிரகாஷையே பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்திற்கு வந்துவிடுகிறார். இதுவே இருவருக்கும் இடையே  ஈகோவை ஏற்படுத்த, ஒரு கட்டத்தில் அது பெரிய அளவில் பிரச்சனையாக உருவெடுக்கிறது.

இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலைச் சொல்லாமல் பிரிந்துவிடுகிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா அல்லது கடைசிவரை தங்கள் காதலைச் சொல்லாமலேயே விலகினார்களா என்பது மீதிக் கதை.காதலர்களுக்கு முதல் எதிரியே அவர்களிடம் இருக்கும் ஈகோதான் என்பதை, கல்வி என்ற களத்தைப் பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷுக்கு நடிக்க வாய்ப்பு அதிகம். அதை அவரும் உணர்ந்து படத்தை தாங்கிப் பிடிக்கிறார். ஷாலினி பாண்டே அழகு. கொஞ்சல்,  சிணுங்கல் மூலம் மனம் கவர்கிறார். ஷாலினி பாண்டேவின் காதலை, வயதுக் கோளாறு என்று கலாய்க்கும் ஜி.வி.பிரகாஷ், ஷாலினியின் ஹாட் லுக்கைப் பார்த்து ஜர்க்காவதும், அதற்கு ஷாலினி பாண்டே கொடுக்கும் கமெண்ட்டும் ரசிக்க வைக்கின்றன.  

தலைவாசல் விஜய், ஆர்.வி.உதயகுமார், ரேகா, ஜெயசித்ரா, நாசர், தம்பி ராமையா என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம் அணிவகுத்து வருகிறார்கள். அவரவர் தங்கள் அனுபவ நடிப்பைக் கொடுத்து தங்கள் பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் நடிகராக ஸ்கோர் செய்ததோடு இசையமைப்பாளராகவும் நூறு பர்சன்ட் ஸ்கோர் பண்ணுகிறார். பாடல்களை ரசிக்கும்படி கொடுத்திருப்பதோடு பின்னணி இசையில் மெலோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து செவிகளுக்கு தேனிசை விருந்து படைத்துள்ளார்.ஒளிப்பதிவாளர் ஆர்.கணேஷ் கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் கேமராவில் வித்தை காண்பித்திருக்கலாம்.

காதலர்களிடையே இருக்கும் ஈகோவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சொல்லும் காதல் கதை என்பதால் படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை யூகம் செய்தாலும் கதை சொல்லும் விதத்தில் கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் எம்.எம்.சந்திரமெளலி.மொத்தத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளது இந்த ‘100% காதல்’.